ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆகஸ்ட் தேர்தலின் ஆரம்ப கட்ட முடிவுகளில் ஹமீட் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும், அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் 210 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அறிவிப்பு வந்துள்ளது.