October

October

காலநிலையில் திடீர் மாற்றம்

021009monsoon-rains.jpgகால நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளைகளில் ‘டொனேடோ’ சுழற்காற்று அல்லது கடும் காற்று ஏற்படலாம் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டிருக்கின்றது.

இடைப் பருவபெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் பாதிப்பு, மற்றும் டொனேடோ சுழற் காற்று, கடும் காற்று குறித்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் துலாரி பெர்னாண்டா நேற்றுத் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மகன் பதவியில் அமர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸியின் மகன் அரசாங்கத்தின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டதற்கெதிராக எதிர்க்கட்சி கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் முதலாவது மனைவியின் மகன் ஜின்சர்கோஸி வயது (22) அரசகூட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை ஜனாதிபதி வழங்கினார். கோடிக்கணக்கான ரூபாக்கள் புழங்கும் இப்பாரிய நிறுவனத்துக்குப் பொருத்தமில்லாத வரை நியமித்தமைக்கு பிரான்ஸின் பிரதான எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சர்கோசியின் மகன் ஜீன் சட்டக் கல்லூரியில் மாணவராக இருக்கிறார். அவர் இந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று எதிர்க்கட்சியான சோஷலிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்னாட் மோன்டேன்பர்க் கூறுகையில், சட்டவிதிகள் இல்லை.

கொள்கை இல்லை. எதையும் செய்யமுடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. முதலில் அவர் படித்து முடிக்கட்டும். படிப்பில் அவர் தன்னை நிரூபிக்கட்டும். பிறகு பதவிக்கு வரலாம் என்று குறிப்பிட்டார்.

சர்கோசியின் கன்சர்வேடிவ் கட்சியினர் கூறுகையில், ஜீன் தன் தந்தையை விட திறமையானவர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினம் : புன்னியாமீன்

eye.gifஉலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும்,  தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட,  சில சந்தரப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும்  அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம்,  மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல்;: விபத்துக்கள்,  கவனயீனங்கள, ; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலையில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.

சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர் போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு.  அனுபவம்.  ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. 

பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக,  பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி,  அழகுக்கும் உகந்ததல்ல.

இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள்,  காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள்,  பறவைகள், ஊர்வன,  மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள்,  நோய்கள் காரணமாக அமையலாம்.

நமது கண் ஒரு நிழற்படக்கருவியைப்  போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி   பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல,  நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து,  மனதில் பதிவு செய்து,  பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து,  ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு,  தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.

கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்

மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு” உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது  உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும்.
வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.

வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர்,  ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,  விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும்,  அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.

கண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை,  தூரப் பார்வை,  பார்வை மந்தம்,  கண்ணில் சதை வளர்தல்,  கண்ணில் பூவிழுதல்,  கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல்,  கண்ணில் நீர்வடிதல்,  மாலைக்கண்,  வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை,  கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால்,  அதன் மூலமாக வரும் தலைவலி,  தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய்,  மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய்,  கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை,  வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

******

இரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில்,  ஒரு கண் கிட்டப்பார்வை,  தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து,  மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில்,  வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு,  இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.

*******
சூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல்,  வறட்சி,  வீக்கம் அல்லது புண்,  வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது,  தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;

*******
நமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில்,  ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில்,  பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் – வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள்,  தொழிற்சாலைக் குப்பைகள்,  பாட்டரி அமிலம்,  விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்,  வாணவேடிக்கை,  UVB-  கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது,  சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள் கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.

*******

‘மயோபியா’ என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது
இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.

********

‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால்,  ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு,  அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.

********

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.
1)  வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2)  கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4)  கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். 

********
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை  நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.

******

கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால்  உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.

*******
 
விட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை,  முளைக்கீரை,  பொன்னாங்கண்ணிக்கீரை,  அவரைக்கீரை,  முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள்,  எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால்,  வெண்ணெய்,  முட்டை,  மீன்,  மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.

********

எமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும்,  முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.

*********
 
கண்நோய் அல்லது கண் வலி,  தூசு,  பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும்  கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

********
 
 கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும்,  அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.
1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும்,  ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.
2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.
3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ,  இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.
4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும்,  தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.
5. கண் எரிச்சலோ,  வலியோ ஏற்படும்.
6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.
இத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும்.  நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள்.  சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.

*******

கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும்,  தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி ,  தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல்,  வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

**********

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி,  மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

*******

இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு,  மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து,  வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும்,  கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி,  கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.

நோர்வேயின் கவனத்திற்கு கடல்கடந்த தமிழீழ விவகாரம்!

rohitha-bogollagama_s.jpgநோர் வேயில் நடைபெற்று வருகின்ற முன்னெடுப்புக்கள் தொடர்பில் நோர்வேயின் கவனத்திற்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கொண்டு வந்துள்ளார்.
 
அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் டோர் ஹெட்ரமுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசின் கவலையயையும் அதிருப்தியையும்  தெரிவித்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துமாறு கோரிகை விடுத்தார்
 

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்

14indonesia.jpgஅவுஸ்தி ரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்)  தாம்  கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.  தம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
 
இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியுள்ளனர்.
 

தமிழக எம்.பிக்கள் பாதுகாப்புச் செயலாளாருடன் சந்திப்பு!

தமிழக எம்.பிக்கள் குழுவினர் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
 
தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடந்த இச்சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைää இடம்பெயர்ந்தோரின் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள்!

14murali_.jpgஉலகப் புகழ்பெற்ற இலங்கையின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரில் இலங்கை மாணவர்களுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

பிரிட்டனின் பொல்கொன் பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக கடந்த வியாழக்கிழமை அங்குரர்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இப்புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இலங்கை மாணவர்கள் ஆறுபேர் பிரிட்டனின் பொல்கொன பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுவரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தீபாவளி விசேட ரயில் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.  இதன்படி கொழும்பில் இருந்து பதுளைக்கும்,  பதுளையில் இருந்து கொழும்பிற்கும் இரு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
 
வுழமையாக மேற்கொள்ளப்படும் ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 6.50 ற்கு பயணமாகும் விசேட ரயில் மறுநாள் அதிகாலை 3.25 மணியளவில் பதுளையை சென்றடையும்.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்புக்கான விசேட ரயில் சேவையொன்றும் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹாபொல கண்காட்சி இன்று ஆரம்பம்!

மஹாபொல புலமைப்பரிசில் கண்காட்சி இன்று பெலியத்தை ருஹ{னு விஜயபா வித்தியாலயத்தில் ஆரம்பமாகின்றது.

இக கண்காட்சி இன்று முதல் எதிர்வரும்; 18ஆம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.   இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக இளைஞர் யுவதிகளுக்கான களியாட்ட நிகழ்வுகள்ää விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு ஏற்பாடுகள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.  பொதுமக்களுக்கான வர்த்தக நிலையங்கள் மற்றும் இராணுத்தினரின் ஆயுதக் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளது. 

வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் காப்பது மேல் – புன்னியாமீன்.

141009tsunami.jpgஉலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக்காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கை அழிவுகள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள்,  சூறாவளிகள்,  நில அதிர்வுகள்,  எரிமலை வெடிப்புக்கள்,  கடும் மழை,  வெள்ளம்,  கடும் வரட்சி…. இவ்வாறு இயற்கை அழிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆண்டுதோறும் உலகப் பேரழிவுத் தடுப்புதினம் ஒக்டோபர் 14ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இயற்கையை வெல்ல முடியாவிடினும்கூட,  இயற்கையால் ஏற்படக்கூடிய அழிவுகளிலிருந்து ஓரளவாவது பாதுகாப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இத்தினத்தின் குறிக்கோளாகவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான உலக பேரழிவுக் குறைப்புத் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய பேரழிவுகளால் ஏற்படக்கூடிய மக்களுக்கு வைத்திய வசதிகள் செய்து கொடுப்பதை விசேட அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருந்தன.

இயற்கைப் பேரழிவுகளை எடுத்துநோக்கும்போது அண்மைக்காலங்களில் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இயற்கை நிகழ்வாக சுனாமிப் பேரலைத் தாக்கம் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். இக் கட்டுரையை எழுதப்படும் நேரத்திலும்கூட,  (2009 ஒக்டோபர் இல்) சிட்னி: பசிபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக  194க்கும் அதிகமானோர் பலியானதுடன்,  பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின. மேலும்,  நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு வட கிழக்கே இருக்கும் இந்த குட்டி தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில் கடலுக்கடியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவானதாக குறிப்பிடப்படுகின்றது. அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி பலர் பலியானார்கள். இந்த சமோவா தீவு அமெரிக்காவின் கட்டு்ப்பாட்டில் உள்ள நாடாகும்.

எனவே,  சுனாமி பற்றி சிறு விளக்கமொன்றினை இவ்விடத்தில் பெற்றுக் கொள்வது பொறுத்தமானதாக இருக்கலாம். ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை (சுனாமி:津 波.)  ‘ட்சு’ சுனாமி. தான் சுனாமி. ‘ட்சு” என்றால் துறைமுகம், ‘னாமி” என்றால் பேரலை என்று பொருள். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட,  அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மைக்கால சுனாமி பேரலைகளை நோக்குமிடத்து கடலில் ஏற்பட்ட புகம்பங்களே காரணமாக அமைந்திருந்தன. பூகம்பம் என்பது நிலப்பகுதியில்,  கடல் பகுதியில்,  மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் ஏற்பட்டால் ஏற்பட்ட நிலப்பரப்பில் உள்ளவை அதிர்ந்து சேதமாகின்றது. கடலில் ஏற்பட்டால் கடலின் ஆழ்பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வு சிலநேரங்களில் சுனாமிப் பேரலைகளைத் தோற்றுவிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டால்  மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்படையில் தான் புவியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இயற்கையில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் காரணமாக புவி கண்டங்களாக பிரியப்,  பிரிய, அதன் தட்ப,  வெப்ப,  இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப,  பல்வேறு நிலப்படைகள் உருவாயின. இந்த நிலப்படைகள் மீது தான் ஒவ்வொரு கண்டமும் அமைந்துள்ளன. நிலம்,  கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலப்படைகள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட்,  ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும்,  இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமா சமுத்திரத்தில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளதாக புவியியல் ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது. அதேநேரம்,  சுனாமி பேரலைகள் ஏற்பட பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.  கடலாழத்தில் ஏற்படும் எத்தகைய பாதிப்புக்களின்போதும், கடலாழ பூகம்பம் தோன்றும்போதும்,  கடலை ஒட்டிய நிலப்பகுதியில் பூகம்பம் தோன்றும்போதும்,  மலையில் எரிமலைகள் தோன்றும்போதும்,   வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும்,  (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் பௌதீக மாற்றங்கள் ஏற்படும் போதும்,  விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் விழும் போதும்.  கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடும் போதும். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகளின் போதும் சுனாமிப் பேரலைகள் ஏற்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.

கி.மு.,  365ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி,  எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தற்போதைய கண்டுபிடிப்புகளுக்குட்பட்ட வகையில் முதல் சுனாமி என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

சமீப கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால்,  முதன்முதலில் 1755ம் ஆண்டு,  நவம்பர் 1ம் தேதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம்,  போர்த்துக்கல்,  ஸ்பெயின்,  மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

1883ம் ஆண்டளவில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஜப்பான் பகுதியிலும் அடிக்கடி சுனாமித் தாக்குதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. 1964ம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா,  ஹவாய் பகுதிகளை தாக்கியது.

21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் இயற்கை அனர்த்தங்களுள் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியே இதுவரை பதிவாகியுள்ளது. இச்சுனாமி இலங்கை வரலாற்றிலும் பாரிய அழிவை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்கின்றது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா,  இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் இச்சுனாமியின் கொடூர அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின.

இச்சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள்,  பொருட் சேதங்கள்,  உட்கட்டமைப்புச் சேதங்கள்,  வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள். இச்சேதங்கள் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமே உரியன.

இலங்கையில் மாத்திரம் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30, 977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5, 644 பேர் காணாமற் போயுள்ளனர். 15, 197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது. இச்சுனாமியில் மாத்திரம் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் உயிர்களுக்கு மேல் காவுகொள்ளப்பட்டுள்ளன.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78, 387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60, 197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை,  மட்டக்களப்பு,  அம்பாந்தோட்டை,  காலி,  யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள்,  வைத்தியசாலைகள்,  மக்கள் மண்டபங்கள்,  பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம்,  தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள்,  பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.

ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154, 963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235, 145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு சந்தித்தது.

சுனாமி என்றால் ஜப்பான்தான் என்ற நிலை மாறி 2004ஆம் ஆண்டு சுனாமியை உலகளாவிய நாடுகளுக்கே ஒரு எச்சரிக்கையை விடுத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்கியபோதிலும்கூட,  இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. சுனாமி கற்றுத் தந்த பாடம் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து எவ்வாறு எம்மைக் காக்கலாம் என்ற உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்தது.  

சுனாமி அறிவித்தல் முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நோக்குவோம்.  அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசுபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய் என்பதினாலாகும்.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான்,  பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா,  கனடா,  சிலி,  கொலம்பியா,  குக் ஐலண்ட்ஸ்,  கோஸ்டரிகா,  தென் கொரியா,  வடகொரியா,  ஈக்வேடார்,  எல்சல்வடார்,  பிஜி,  பிரான்ஸ்,  குவாதமாலா,  இந்தோனேஷியா,  ஜப்பான்,  மெக்சிகோ,  நியூசிலாந்து,  நிகரகுவா,  பெரு,  பிலிப்பைன்ஸ்,  ரஷ்யா,  சமோவா,  சிங்கப்பூர்,  தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்,  சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள்,  கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால்,  அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால்,  சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம்,  சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க்,  தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக்,  ஆபிரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

உலக பேரழிவு விழிப்புணர்வு தினமான 2009 ஒக்டோபர் 14ஆம் திகதி  ஒரேநேரத்தில் 18 நாடுகளில் இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகையை மேற்கொண்டன. இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையிலும் அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்; சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்பட்டன.

உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை,  இந்தியா,   இந்தோனேஷியா,  மலேசியா,   அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்றன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்,  எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் இவ்வொத்திகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டாலும்கூட,  மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை உருவானால் மாத்திரமே இவை வெற்றியளிக்கலாம். அண்மைக்காலங்களாக அடிக்கடி சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் மக்கள் சோர்வடைந்துள்ளதை காணமுடிகின்றது. சிலர் இவற்றை இன்னும் விளக்கமே இன்றி காணப்படுகின்றனர். கருவிகள் பொருத்துவது மாத்திரமல்ல. அவற்றின் செயல்பாட்டின் நிலை பற்றிய உணர்வுகளை மக்கள் மனங்களில் பதிக்க வேண்டியதும் ஒரு முக்கியமான தேவையாகும்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/1014-international-day-for-natural-disaster1.html