29

29

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

eu-flag.jpgபாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

வடக்கை மீட்பத்தற்கான இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது இலங்கை படையினர் யுத்தக் குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நடத்தப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் எனவும் அவ்வறிகையில் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானதென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்படாகும் என தெரிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான சகல முயற்சிகளையும் தமது அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

தமிழினி கைது

thamilini_.jpgவிடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவதாய் எனப்படும் தமிழினியும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக  முகாமிலிருந்த போது படையினரால் முன்தினம் மாலை விஷேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்படும் போது அவரது தாயாரான கௌரி விஜயராஜா மற்றும் சகோதரியான சுப்ரமணியம் மகேஸ்வரி ஆகியோரும் கூடவே இருந்துள்ளனர்.

புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி வந்த பொதுமக்களுடனேயே இவர்கள் மூவரும் வந்துள்ளனர் என்று அவர்களிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு வருகை தரும் போது தன்னிடமிருந்த சயினைட் குப்பி மற்றும் துப்பாக்கி போன்றவற்றை கடலில் எறிந்துவிட்டு வந்ததாகவும் விசாரணைகளில் அவர் கூறியுள்ளார் இவர்களை முகாமிலிருந்த பொதுமக்கள் அடையாளம் காணவில்லை என்பதாலேயே இத்தனை காலம் அங்கு தங்கியிருந்துள்ளனர்.

தனது மற்றுமொரு சகோதரியான சாந்திலன் என்பவர் பரந்தன் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டுள்ளதாகவும் தமிழினி கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழினியிடம் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது திட்டமிட்டு இலக்குவைத்த தாக்குதல் – கனடிய அரசு கடும் கண்டனம்

canada-2.jpgகனடா புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியும் தூதரகத்தின் சுவர்களில் சில வாசகங்களை எழுதியும் பாதுகாப்பு கமராவுக்கு வர்ணம் பூசியும் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியமை தொடர்பில் கனடா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள கனடா இந்த செயல் மிகவும் கண்டித்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்தை பாதுகாக்க இலங்கை பொலிஸார் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

யூ.என்.எச்.சீ. ஆர். தலைவருடன் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நேற்று சந்திப்பு

mahinda-samarasinha.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள், நிவாரணங்கள் வழங்குவதில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ. என். எச். சீ. ஆர்.) ஆற்றும் பங்களிப்பை மேலும் பலமடையச் செய்யும் வகையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அதன் தலைவருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.

ஜெனீவாவில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.  அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலய தலைவர் அன்டோனியோ குட்டேரஸை (Antonio Guterres) அவரது அலுவலகத்தில் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க சந்தித்து பேச்சு நடத்தினார்.

தற்போது யூ. என். எச். சீ. ஆர். தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான தங்குமிட வசதிகள் உட்பட இடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் சார்பில் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதும் அரசு முன்னெடுக்கவுள்ள வடக்கு வசந்தம் திட்டத்தின் ஊடாக மக்களை உனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்தும் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தார்.

இடம் பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதன் போதும் எவ்வகையிலான பங்களிப்புகளை வழங்கும் என்பது பற்றியும் யூ. என். எச். சீ. ஆர். தலைவர் குட்டேரஸ் அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரம் நேற்று முடிவடைந்ததையடுத்து பேரவையின் வழமையான கூட்டத் தொடர் ஜூன் 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகிறது. இக் கூட்டத் தொடரில் முதல்வாரம் கலந்து கொண்ட பின்னரே அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் கூட்டத் தொடரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கலந்து கொள்வார்.

பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி – இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பிரபாகரனதும் அவரது மகன் சாள்ஸ் அன்டனியினதும் இரத்த மாதிரிகளைக் கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய இராணுவ வைத்தியர் பிரிவின் விஷேட குழுவினரும் கொழும்பிலுள்ள தடய அறிவியல் துறை அதிகாரிகளும் இதனை இன்று உறுதிசெய்தனர் என்றும் அவர் கூறினார். 

அகதிகள் முகாமில் பிரபாகரன் பெற்றோர்: இலங்கை இராணுவம்

prabhs_parent.jpg விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையும் தாயும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஓர் இடைத்தங்கல் முகாமில் இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இது பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், பிரபாகரனின் பெற்றோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்ட முகாமில் இருப்பது புதன்கிழமை மாலைதான் தங்களின் கவனத்துக்கு வந்ததாகக் கூறினார்

பிரபாகரனின் பெற்றோர்கள் காயங்கள் ஏதும் இன்றி நலமாக இருப்பதாகக் கூறிய அவர், படையினர் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்று தாம் கருதுவதாகவும், ஆனால் அவர்கள் எப்போது வந்தார்கள் என்பது குறித்து தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடல் ஆர்ப்பரித்து வந்ததற்கு சுனாமி தாக்கம் காரணமல்ல

sea.jpgகிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடலலைகள் திடீர் திடீரென ஆர்ப்பரித்து நிலப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தமைக்கு சுனாமி தாக்கம் காரணமல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவா தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பின் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது மணித்தியாலத்திற்கு 20 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காணப்படுகின்ற கடற்காற்று, திடீர் திடீரென 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பதன் விளைவாகவே கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கின் சில பிரதேசங்களில் நேற்று காலையில் திடீர் திடீரென ஆர்ப்பரித்து கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்தன. இதனையடுத்து பிரதேசவாசிகள் மத்தியில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது. இது சுனாமித் தாக்கம் என்ற ஐயமும் மக்கள் மத்தியில் பரவியது. இந்நிலைமை தொடர்பாக வானிலை அவதான நிலைய வானிலையாளரான தமயந்தி இந்திஹெட்டி ஹேவாவுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணக் கடற்பரப்புகளில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தென்மேல் கடற்பரப்பு ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் கடற்காற்றின் வேகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பும் பெரிதும் உதவியுள்ளது.

இதே காலநிலை இன்றும் நிலவக்கூடிய வானிலையே காணப்படுகின்றது என்றார்.

காங்கிரஸ் அமைச்சர்களுக்கு சோனியா எச்சரிக்கை

manmohan_soniya.jpgமத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ” சிறப்பாக செயல்பட வேண்டும் அல்லது பதவியை விட்டுப் போய்விட வேண்டும் ” என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 59 அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சோனியா.  அப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது,” தற்போது அமைச்சரவைக்குள் வந்துள்ளவர்களில் சிலர், மற்றவர்கள் உள்ளே வர வழிவிடவும் வாய்ப்புள்ளது ” என்று பதிலளித்தார்.

அதாவது காங்கிரஸ் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் அமைச்சர் பதவியை விட்டுப் போய்விட வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது.  பதவியேற்ற 59 அமைச்சர்களையும் சேர்த்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 79 ஐ தொட்டுள்ளது.

அரசியல் சாசன விதிப்படி தற்போதைய அமைச்சரவையில் மொத்தம் 82 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் இன்னும் 3 அமைச்சர்களை மட்டுமே அமைச்சரவையில் மேலும் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதியோரை உறவினர்களுடன் அனுப்பும் பணி – மனிக்பாமில் பொலிஸ் அதிகாரிகளுடன் அரச அதிபர் கலந்துரையாடல்

நலன்புரி முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ள முதியவர்களை அவற்றுக்கு வெளியில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் ஒன்றிணைப்பது தொடர் பில் அரச அதிகாரிகள் மட்டத்தில் நேற்று (28) ஆராயப்பட்டுள்ளது.

முதியவர்களை விடுவிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு மதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரி களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியு ள்ளார். மனிக்பாமில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே மூவாயிரம் பேரை விடுவித்துள்ளதாகக் கூறிய அவர், புதி தாகக் கிடைத்துள்ள 1500 பேர் தொடர்பான விபரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முகாம்களிலும், நிவாரண கிராமங்களி லும் தங்கியுள்ளவர்களை விடுவித்துக் கொள்வதில் அவர்களின் உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்க முடியுமென்றும் திருமதி சார்ள்ஸ் தெரிவி த்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுள் 10 வீதமானவர்கள் முதியவர்க ளென்று அரச அதிபர் தெரிவித்தார். இதேவேளை, முகாம்களில் கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு ள்ளதால் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரச்சினைகள் கிடையாது. எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதே சமயம், பூந்தோட்டம் மற்றும் மத்திய மாகாண வித்தியாலயம் ஆகிய நலன்புரி நிலையங்களில் இருந்த மக்களுள் நேற்று ஒரு தொகுதியினர் ஐந்தாவது வலய நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

maninda-with-us-delication.jpgஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைச் சந்தித்து உரையாடினர். இச்சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் அமெரிக்கா உதவத்தயார் என ஜனாதிபதியிடம் தூதுக் குழுவினர் இச்சந்திப்பின்போது உறுதியளித்தனர்.

வடபகுதி நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த இத்தூதுக் குழுவினர் இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளை நேரில் கண்டறிந்தனர். சர்வதேச ஊடகங்கள் கூறியவாறு பாரிய குறைபாடுகள் இந்த நிவாரணக் கிராமங்களில் காணப்படவில்லை என்றும் தூதுக் குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.