மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ” சிறப்பாக செயல்பட வேண்டும் அல்லது பதவியை விட்டுப் போய்விட வேண்டும் ” என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 59 அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சோனியா. அப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது,” தற்போது அமைச்சரவைக்குள் வந்துள்ளவர்களில் சிலர், மற்றவர்கள் உள்ளே வர வழிவிடவும் வாய்ப்புள்ளது ” என்று பதிலளித்தார்.
அதாவது காங்கிரஸ் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் அமைச்சர் பதவியை விட்டுப் போய்விட வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது. பதவியேற்ற 59 அமைச்சர்களையும் சேர்த்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 79 ஐ தொட்டுள்ளது.
அரசியல் சாசன விதிப்படி தற்போதைய அமைச்சரவையில் மொத்தம் 82 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் இன்னும் 3 அமைச்சர்களை மட்டுமே அமைச்சரவையில் மேலும் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.