கிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடலலைகள் திடீர் திடீரென ஆர்ப்பரித்து நிலப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தமைக்கு சுனாமி தாக்கம் காரணமல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவா தெரிவித்தார்.
தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பின் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது மணித்தியாலத்திற்கு 20 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காணப்படுகின்ற கடற்காற்று, திடீர் திடீரென 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பதன் விளைவாகவே கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கின் சில பிரதேசங்களில் நேற்று காலையில் திடீர் திடீரென ஆர்ப்பரித்து கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்தன. இதனையடுத்து பிரதேசவாசிகள் மத்தியில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது. இது சுனாமித் தாக்கம் என்ற ஐயமும் மக்கள் மத்தியில் பரவியது. இந்நிலைமை தொடர்பாக வானிலை அவதான நிலைய வானிலையாளரான தமயந்தி இந்திஹெட்டி ஹேவாவுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணக் கடற்பரப்புகளில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தென்மேல் கடற்பரப்பு ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் கடற்காற்றின் வேகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பும் பெரிதும் உதவியுள்ளது.
இதே காலநிலை இன்றும் நிலவக்கூடிய வானிலையே காணப்படுகின்றது என்றார்.