May

May

இலங்கைக்கு இந்திய இராணுவம் செல்வது எளிதல்ல – இந்திய பிரதமர்

karunanithi-apalo-hos1.jpgஇலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், சுயாதீனம் கொண்ட நாட்டில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்தோடு இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைவருமே விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும், ஆனால் தற்போது அதுவல்ல பிரச்சனை என்றும், இலங்கை தமிழர்கள் எல்லா நலனும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது முக்கியமான விஷயம் என்றும் பிரதமர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

அத்தோடு, இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரி என்பதை இலங்கை மக்களும், அரசும் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

வடக்கு அகதிகளுக்கு உதவவென ஆசிரியர்களிடம் பலவந்தமாக நிதி சேகரிப்பு

parliament-of-sri-lanka.jpgதெற்கில் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றிபெறும் நோக்கில், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவெனக் கூறி ஆசிரியர்களிடமிருந்து பலவந்தமாக நிதி திரட்டப்படுவதுடன், அப்படி பணம் வழங்காதவர்கள் மீது புலி முத்திரை குத்தப்படுவதாகவும் ஜே.வி.பி. யின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ஹந்துநெத்தி எம்.பி. இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு எமது உணவில் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்கு வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை சுயமாக செய்ய வேண்டும். அதை விடுத்து மக்களிடம் பலவந்தப்படுத்தி பெறக் கூடாது.

ஆனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கவென அண்மையில் இலங்கை மின்சார சபையின் பொது கணக்கிலிருந்து 144 இலட்சம் ரூபா மீளப் பெறப்பட்டு புறக்கோட்டையில் பொருட்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த பொருட்களை பொதி செய்ய பையொன்று 50 ரூபா வீதம் 50 ஆயிரம் பைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மட்டும் 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த தொகை பணம் மின்சாரசபை ஊழியர்களது சம்மதத்துடன் பெறப்படவில்லை. எனினும் இந்தப் பொருட்கள் மின்சார சபை ஊழியர்களது அன்பளிப்பென கூறி வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஊழியர்களின் சம்மதத்துடன் நலன்புரி கணக்கிலிருந்தே இதற்கான பணம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எனினும் இதற்கான தொகை சட்ட விரோதமாக பொதுக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தெற்கில் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றி பெற இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவென ஆசிரியர்களிடமிருந்து பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பளத்தில் ஒரு தொகையை இதற்கு வழங்குமாறு கடிதம் மூலமோ அல்லது நேரடியாகவோ ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. அப்படி வழங்காதவர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுகிறது’ என்றார்.

வேறு கூட்டணி பற்றி சிந்திக்க மாட்டேன்: ஜெயலலிதா பேட்டி

j-j-j.jpgவட சென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே?

அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே?

தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா?

நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது.

மன்னாரில் மீள்குடியேற்ற இரண்டாம் கட்ட வேலைகள் திங்கள் முதல் ஆரம்பம்

new_welfare.pngயுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மீள்குடியேற்ற 1 ஆம் கட்ட நடவடிக்கை மன்னார் முசலி கிராமத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசின் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த சகல மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதேபோல வன்னிப்பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

அதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்

nilakannikal.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை நாம் முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். அத்துடன் இந்தியமக்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் உப தலைவர் மனோகர் மயூன்நுகோபா நிருபர்களிடம் தெரிவித்ததாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணியின் பயிற்சிக்கட்டளை தலைமையகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தை மனோகர் மயூன் கூறியுள்ளார். மணிப்பூர் மியன்மார் எல்லையில் இத்தலைமையகம் அமைந்துள்ளது.

மோதலுக்கு தீர்வு காண அரசியல் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட மனோகர் மயூன், அதேசமயம் நிகழ்ச்சி நிரலானது “இறைமை’யாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் புரட்சிகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 செப்டெம்பரில் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது.

வெசாக் தின உணவு உட்கொண்டோர் திடீர் சுகயீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதி

vesak.jpgமாத்தறை வெஹறஹேன விகாரையில் இடம் பெற்ற வெசாக் தான நிகழ்வில் மதிய உணவை உட்கொண்ட ஒன்பது பொலிஸ் கான்ஸ்டபிள்களும், சில அரசு ஊழியர்களும் திடீர் வயிற்று வலி, வயிற்றோட்டம் ஏற்பட்டு மாத்தறை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் தேசிய வெசாக் தின நிகழ்வுகள் இந்த விகாரையில் கடந்த புதன்கிழமை 6 ஆம் திகதி ஆரம்பமானது தெரிந்ததே. இந் நிகழ்வின் போது வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்பே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிரதமர் & கருணாநிதி ஆலோசனை

karunanithi-apalo-hos.jpgஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.

மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பர்னாலா, முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் ஆகியோரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார். பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30க்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், தயாளு அம்மாள் ஆகியோர் இருந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமரும் முதல்வரும் தனியே ஆலோசனை நடத்தினர். தேர்தல் குறித்த அந்தப் பேச்சின் போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் உடனிருந்தார். முதல்வர் அறையில் பிரதமர் 15 நிமிடங்கள் இருந்திருக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ். குடா சிறுவர் கடத்தல் விவகாரம்: த.வி.கூ. கண்டனம்

jaffna-map.jpgயாழ். குடாநாட்டில் சிறுவர்களைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தை கப்பமாகப் பெரும் அரக்கர்களின் ஈனச் செயலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். கிளை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாடசாலைச் சிறுவர்களை கடத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ். குடாநாட்டில் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் ஆயுதம் தாங்கிய அரக்கர்களுக்குப் பயந்து காவல் நிலையத்திற்கு செல்லாது கப்பத் தொகையை கொடுத்து சிறுவர்களை மீட்டுள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. கப்பமாக கேட்கும் தொகை மறுக்கப்பட்டால் திருகோணமலையில் வர்ஷாவிற்கும், மட்டக்களப்பில் தினுஷிகாவிற்கும் ஏற்பட்ட நிலையே தொடரும் என ஆயுதம் தாங்கிய அரக்கர்களால் பெற்றோர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

இவை அனைத்தும் முற்றாக நிறுத்தப்படவேண்டும். ஆயுதக் கலாசாரமற்ற ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். ஆயுததாரிகளின் அட்டகாசம் நிறுத்தப்படவேண்டுமா னால், ஜனநாயகத்தை மலரச் செய்யவிரும்பும் அத்தனைபேரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் எறிகணைத் தாக்குதல் 134 பேர் பலி; 199 பேர் காயம் – படையினர் தாக்கவில்லை என்கிறார் பிரிகேடியர்

udaya_nanayakkara_brigediars.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நின்ற 34 பேர் உட்பட 134 பேர் பீரங்கித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் 199 பேர் காயமடைந்ததாகவும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தி தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்ட போது முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் பகுதி மீது படையினரால் பீரங்கித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. யுத்த சூனிய வலயத்தின்மீது பீரங்கி போன்ற கனரக ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை. அங்கு மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ எமக்கு எதுவும் தெரியாது. அது பற்றிய தகவல் எமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் 5/9/2009 யுத்த வலயப் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள சிறார்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் திட்டம்

vavuniyatents.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் தங்கியிருக்கும் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தையும், கல்வி கற்றல் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு அடுத்த வாரம் வவுனியா செல்கிறது. கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையில் மேற்படி குழுவினர் செல்லவுள்ளனர்.

நிவாரணக் கிராமங்களில் தற்காலிக கொட்டில்கள், பாடசாலைகள் இயங்கியபோதும் தற்போது மக்கள் வந்து தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களில் பாடசாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இங்குள்ள சிறுவர் சிறுமியர் வெறுமனே சாப்பிடுவதும், விளையாடுவது மாகவே உள்ளனர். இவர்களுக்கு தினமும் வாசிக்கக்கூடிய சிறுவர் சஞ்சிகைகள், சிறுவர் பத்திரிகைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அத்துடன் வந்துள்ளவர்களில் ஆரம்ப பிரிவு, உயர் பிரிவு என எத்தனை மாணவர்கள் உள்ளனர்? அவர்களின் தேவைகள் என்ன? என்பது பற்றியும் மேற்படி குழுவினர் ஆராயவுள்ளனர்.