யாழ். குடாநாட்டில் சிறுவர்களைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தை கப்பமாகப் பெரும் அரக்கர்களின் ஈனச் செயலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். கிளை வன்மையாகக் கண்டிக்கின்றது.
பாடசாலைச் சிறுவர்களை கடத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ். குடாநாட்டில் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் ஆயுதம் தாங்கிய அரக்கர்களுக்குப் பயந்து காவல் நிலையத்திற்கு செல்லாது கப்பத் தொகையை கொடுத்து சிறுவர்களை மீட்டுள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. கப்பமாக கேட்கும் தொகை மறுக்கப்பட்டால் திருகோணமலையில் வர்ஷாவிற்கும், மட்டக்களப்பில் தினுஷிகாவிற்கும் ஏற்பட்ட நிலையே தொடரும் என ஆயுதம் தாங்கிய அரக்கர்களால் பெற்றோர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்.
இவை அனைத்தும் முற்றாக நிறுத்தப்படவேண்டும். ஆயுதக் கலாசாரமற்ற ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். ஆயுததாரிகளின் அட்டகாசம் நிறுத்தப்படவேண்டுமா னால், ஜனநாயகத்தை மலரச் செய்யவிரும்பும் அத்தனைபேரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்.