பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களுடன் கிறீன் ஓசோன் கப்பல் இன்று (13.05.2009) புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றுள்ளதாக சென்சிலுவை சங்க ஊடகப் இணைப்பாளர் சரசிவிஜயரத்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பிராந்தியத்திற்குள் கப்பல் பிரவேசித்த போதும் அங்கு பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகவும் இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நேற்றும் அந்த பகுதிக்கு சென்று பொருட்களை இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May
May
புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் உயர் நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணையை பிறப்பித்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று நீதி மன்றத்தில் எடுக்கப்பட்டபோதே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமது இல்லத்தில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும் இந்த இருவருக்கும் இந்திய உயர் நீதிமன்றனத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இன்று, காலை வவுனியா நலன்புரி முகாம்களுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால தலைமைத்துவ பதவியை ஏற்கவுள்ள சுவீடன் பிரதிநிதி, அதன் ஆணைக்குழுவின் பிரதிநிதி மற்றும் செயலாளர், காரியாலய பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களில் குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள் புதிதாககத் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட்டு சமையலை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனிக்பாம் 4 ஆம் பிரிவிற்கு (ஸோன் 4) இடம்பெயர்ந்த மக்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு உடனடியாக கூட்டுச் சமையலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி ஆகியவற்றில் இன்று ஆங்காங்கே வன்முறைகளுக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் விரைவில் அறிவிக்கும்.
இன்றைய மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். மொத்தம் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு, அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் 117 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு இந்த வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க நாட்டிலே முதன்முறையாக வெப் கேமராக்கள் யன்படுத்தப்பட்டன. இந்த வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப் பதிவை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாணசபையின் கடந்த மாதக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட உத்தேச உள்ளூராட்சித் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து அச்சட்டமூலத்தின் மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் கிழக்கு மாகாணசபை நேற்று செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது இடம்பெறவில்லை.
உத்தேச சட்டமூலத்தினை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அறிவித்தார்.
புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றபபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தெற்காசியப் பிராந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மாநாடு இன்று சீனாவில் ஆரம்பமாகிறது. சார்க் பிராந்தியத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடையும்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இன்றைய முதல் நாள் அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொள்ளும் தகல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றவுள்ளார்.
சார்க் நாடுகளுடன் இணைந்து சீனா ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்கவும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரதீபா பட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிட நேரம் இந்தியா மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் பற்றியும் அவர்கள் விவாதித்ததாகவும், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது இப்படி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். இன்று நடைபெறும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுடன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உதவும்முகமாக கொரிய அரசாங்கம் ஐந்து இலட்சம் டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலக உணவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள இந்த நிதி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, மன்னார் மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள கொரியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.