தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி ஆகியவற்றில் இன்று ஆங்காங்கே வன்முறைகளுக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் விரைவில் அறிவிக்கும்.
இன்றைய மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். மொத்தம் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு, அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் 117 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு இந்த வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க நாட்டிலே முதன்முறையாக வெப் கேமராக்கள் யன்படுத்தப்பட்டன. இந்த வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப் பதிவை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.