May

May

ராணுவ வாகனம் மீது தாக்குதல்: மேலும் 6 பேர் கைது

arrest.jpgகோவை அருகே ராணுவ வாகனம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதாகக் கூறி கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் கடந்த 2-ம் தேதி பயிற்சி முடித்த வீரர்களை ஏற்றி வந்த ராணுவ வாகனங்கள் மீதுசிலர் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் வழக்கு பதிந்து பெரியார் தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 35 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

ஸ்டாலினு‌க்கு துணை முத‌ல்வ‌ர் பத‌வி கொடு‌த்தது ஏ‌ன்- கருணா‌நி‌தி ‌விள‌‌க்க‌ம்

stalin-karuna.jpgஇது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி கூட்டத்திற்கு சென்றதாலும், வேறு சில மண விழாக்களில் பங்கேற்றதாலும் மீண்டும் உடல் நலிவுற்று, திரும்பவும் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் தவிர்க்கவும் ஒரு சூழ்நிலை உருவானதை அனைவரும் அறிவர்.

இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப்பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப்பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

எனவே இந்தப் பணிகளை நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்படுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பிரித்தானியாவில் ரிம் மாற்றின் 12 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம்

rim-marteen.jpgஇலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி பிரித்தானியாவில் ரிம் மாற்றின் முன்னெடுக்கும் உண்ணாநிலைப் போராட்டம் 12 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தன்னுடைய இந்த போராட்டத்திற்கு சர்வதேசம் ஒரு பதில் தரும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தன்னுடைய போராட்டத்தை தொடர்வேன் என ரிம் தெரிவித்துள்ளார்.  தனக்கு துணையாக அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்ளும் தாய்மாரை தான் நன்றி உணர்வுடன் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு அமைதியான நிரந்தர முடிவு வரும் வரை தொடரும் எனவும் இதற்கு அனைத்து மக்களும் ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

வவுனியா முகாம்களில் முதியவர்களின் பெயர்களைப் பார்வைக்கு வைக்க நடவடிக்கை – அரசாங்க அதிபர் தகவல்

chals_.jpgவவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களைப் பார்வைக்கு வைக்கத் தீர்மானித்திருப்பதான வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

அவ்வாறு பெயர் விபரங்களைப் பார்வைக்குவைத்தால் முகாம்களுக்கு வெளியிலிருக்கும் உறவினர்கள் முதியவர்களை அழைத்துச்செல்வதற்கு ஏதுவாக இருக்குமென அவர் கூறினார்.

நலன்புரி முகாம்களிலிருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை வெளியேற அனுமதிக்க மாவட்ட செயலகமும்,  மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் தீர்மானித்தன.

இதற்கமையவே ஒவ்வொரு முகாம்களிலும் முதியவர்களின் பெயர் விபரங்களை பார்வைக்குவைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும்,  அதன் பின்னர் வெளியிலிருக்கும் உறவினர்கள் விண்ணப்பித்து முதியவர்களை முகாம்களிலிருந்து அழைத்துச்செல்ல முடியுமெனவும் வவுனியா அரசாங்க அதிபர் கூறினார். 

துணை முதல்வரானார் மு.க.ஸ்டாலின்- ஆளுநர் அறிவிப்பு

stalin-karuna.jpg தமிழகத்தின் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டார்.

இதுவரை முதல்வர் கருணாநிதி கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை இனிமேல் ஸ்டாலின் கவனிப்பார் என்றும் ஆளுநர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் வவுனியா முகாமில் கைது

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட் வவுனியா நிவாரணக் கிராமம்; ஒன்றில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள்,  இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இவர் உருமாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னாக விளங்கிய கே.பி. யின் இலங்கைக்கான முன்னணி முகவராக செயற்பட்டு வந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.  இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சகல இராணுவ உபகரணங்களுக்கும் கேபி யுடனான இரகசிய தொடர்பாளராக செயற்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றையும் சரளமாக பேசக்கூடிய இவர் சிறந்த கல்விப்பின்புலத்தை கொண்டுள்ளார்.

அத்துடன் இவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 19 தடவைகள் நாட்டை விட்டு வெளியே சென்றுள்ளதுடன் சில தடவைகளில் சட்டவிரோதமாக படகுகளிலும் நாட்டினுள் வந்துள்ளார். இவர் வவுனியா நிவாரணக் கிராமத்தில் இருந்த வேளையிலும் கே.பி. யுடன் செய்மதி தொலைத் தொடர்புமூலம் உரையாடியுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதன்மூலம் கே.பி. இப்போது மறைத்துள்ள இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிடும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

paddy.jpgகிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தி லுள்ள சபை கமநல சேவைப்பிரிவுகளிலும் நீண்ட காலமாக கவனிக்கப்படாதிருந்த 1800 சிறிய குளங் கள் இவ்வருட இறுதிக்குள் புனரமைப்புச் செய் யப்பட்டு அடுத்த வருட சிறுபோக நெற் செய்கையின் போது நீர்ப்பாசன வசதிகள் வழங்கப் படுவதோடு மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கும் நீர்ப்பாசன வசதிகள் வழங் கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதே நேரம் கிழக்கு மாகாணத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்து வாய்க்காலை புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியும் கிடைத்துள்ளது. இதன் மூலம் லகுகலைக்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு வாய்க்காலும் புனர மைக்கப்படவுள்ளன.

இதே போன்று பன்னல்கம நீர்த்தேக்கமும் புனரமைக்கப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியிலுள்ள குளங்கள் திருத்தம் செய்யும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசன வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும் போது விவசாய நடவடிக்கைகளும் விஸ்தரிப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மல்வத்தை, கரடியனாறு விவசாயப்பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு விதை நெல் உற்பத்தியும் அடுத்த பெரும் போகத்திலிருந்து அதிகரிக்கப்படவிருக்கிறது.

இது தவிர மூன்று மாவட்டங்களிலும் விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய ஏற்பாடுகளும், நெல் சந்தைப்படுத்தும் சபை கிழக்கில் பல முக்கிய இடங்களில் பாரிய களஞ்சியங்களை அமைக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவன வாகனங்கள் அகதிமுகாம்களுக்கு செல்ல அனுமதி

group_cooking.jpgதொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் அகதி முகாம்களுக்குள் பிரவேசிப்பது குறித்து இதுவரை பின்பற்றி வந்த நடைமுறைகளில் இலங்கை தளர்வினை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மெனிக்பாம் உள்ளிட்ட அகதி முகாம்களுக்குள் தொண்டு நிறுவன வாகனங்கள் பிரவேசிக்கக் கூடாதென அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

எனினும், வாகனங்களின்றி பெரிய முகாம்களில் சேவையாற்றுவது சிக்கல் மிக்க காரியமென தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தன. தொண்டு நிறுவனங்களின் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. தொடரணியாக செல்லக் கூடாது ஆகிய இரண்டு நிபந்தனைகளுடன் வாகனங்களை அகதி முகாம்களுக்குள் அனுமதிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மெரிஒகாமே தெரிவித்துள்ளார். 

மனித உரிமை கண்காணிப்பகம் ஐ.நா. விவாதம் குறித்து அதிருப்தி

HRW Logoஇலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையினால் முன்வைக்கப்பட்ட உத்தேச யோசனைத் திட்டம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட போதிலும், மனிதாபிமான பாதிப்புக்கள் குறித்து மனித உரிமைகள் பேரவை உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டு. மாவட்ட பாடசாலைகளில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்குடா ஆகிய நான்கு கல்வி வலயங்களிலுமுள்ள பாட சாலைகளிலேயே நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

மாணவர்கள் நிவாரணப் பொருட்களை பாடசாலை அதிபரிடம் கைய ளிக்க அதிபர் அப்பொருட்களை கோட்டக்கல்விப் பணிப்பாளரிடம் வழங்கினார். கோட்டக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது.

சேகரிக்கப்படும் பொருட்களை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். பிஸ்கட், பால்மா வகைகள், உடுப்பு போன்ற பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் இந் நிவாரணப் பொருட்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.