தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் அகதி முகாம்களுக்குள் பிரவேசிப்பது குறித்து இதுவரை பின்பற்றி வந்த நடைமுறைகளில் இலங்கை தளர்வினை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மெனிக்பாம் உள்ளிட்ட அகதி முகாம்களுக்குள் தொண்டு நிறுவன வாகனங்கள் பிரவேசிக்கக் கூடாதென அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.
எனினும், வாகனங்களின்றி பெரிய முகாம்களில் சேவையாற்றுவது சிக்கல் மிக்க காரியமென தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தன. தொண்டு நிறுவனங்களின் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. தொடரணியாக செல்லக் கூடாது ஆகிய இரண்டு நிபந்தனைகளுடன் வாகனங்களை அகதி முகாம்களுக்குள் அனுமதிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மெரிஒகாமே தெரிவித்துள்ளார்.