May

May

திமுகவுடன் பிரச்சனையில்லை:விரைவில் தீர்வு ஏற்படும் – குலாம்நபி ஆசாத்

gulam-azad_.jpgமத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியேற்க திமுக மறுத்து விட்டது.  காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு செய்தது. மத்திய மந்திரிசபையில் திமுக இடம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மந்திரிசபையில் சேர்வது தொடர்பாக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மந்திரி சபை விஸ்தரிப்புக்கு முன்பு திமுகவுடன் உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் நான் சென்னை செல்லவில்லை. மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வுடன் தீர்வு ஏற்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

டாக்டர்கள் மூவரையும் ஐ.சி.ஆர்.சியின் அதிகாரி வியாழன் சந்தித்துப் பேசினார்

varatharaja.gifவன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை  செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்னா தெரிவித்தார்.

ஐ.சி.ஆர்.சி. வியாழக்கிழமை மூன்று டாக்டர்களையும் நேரில் கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியது  என்று கூறிய அவர் வேறு விவரம் எதனையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.

கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் அவர்கள் தொடர்பாக முதற் கிடைத்த தகவல் இது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்துக்  கூறுவது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் கொள்கையல்ல என்று ஐ. சி. ஆர்.சியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு வல யத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி வெளியேறிய பின்னர் டாக்டர் தி.சத்திய மூர்த்தி, து.வரதராஜா, எஸ்.சண்முகராஜா ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தமை தெரிந்ததே.         

ஐ.பி.எல்: ஐதராபாத்-பெங்களூர் அணிகள் மோதல்

ipl-2009-01.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 18 ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த 2 வது அரை இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கும்பிளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி இடமும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 வது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதனின் பூதவுடல் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில்..

kpatmanathan.jpg காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்று முன்தினமிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு நேற்று மாலை வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு எடுத்துவரப்பட்டது.

இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பூதவுடல், பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.

பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது- இராணுவத் தளபதி

fonseka-000.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில் மேற்கண்டவாறு கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற கடும் தாக்குதலையடுத்து செவ்வாய்க்கிழமை காலை பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது. நாம் அதே பிரதசத்தில் பிரபாகரனின் உடலைத் தகனம் செய்து அஸ்தியை இந்து சமுத்திரத்தில் எறிந்தோம். பிரபாகரன் இறக்கும் முன்னர் நாங்கள் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டதாக நான் அறிந்து கொண்டேன். ஆனால், அவரது மரணம் ஊர்ஜிதமான பின்னர் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு கருணாநிதி – நாராயணன் சந்திப்பு

karunanidhi.jpgஇலங்கைக்கு விஜயம் செய்த  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுடன் தான் பேசியது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கினார் .

விடுதலைப் புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததாக ராஜபக்சே அறிவித்ததைத் தொடர்ந்து நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் கொழும்பு சென்றனர். அங்கு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்து தனது பயணம் குறித்து விளக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை செல்வதற்கு முன்பு கருணாநிதியை நாராயணன் சந்தித்துப் பேசியிருந்தார்.

இருப்பினும் இலங்கை சென்று வந்த அவர் முதல்வரை சந்திக்கவில்லை. அரசமைப்பு குழப்பம் நிலவி வந்ததால் அவர் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னை வந்தார் நாராயணன். இரவு எட்டரை மணியளவில் நாராயணன் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கை பயணம்,  ஜனாதிபதி ராஜபக்ச என்ன கூறினார் என்பது குறித்து கருணாநிதியிடம், நாராயணன் விளக்கியதாக தெரிகிறது.

இலங்கைப் பிரச்சினையின் மூல காரணத்துக்கு தீர்வு காண வேண்டும்: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்

krishna.jpgஇந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் போர் முடிவுற்றிருக்கும் நிலையில், பிரச்சினைக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எஸ்.எம். கிருஷ்ணா, அண்டை நாடுகளுடனான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளைப் பலப்படுத்த முன்னுரிமை அளிக்கப் போவதாகவும், விரைவில் அந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.  இலங்கைப் பிரச்சினை தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை மக்கள் மற்றும் அந்நாட்டு அரசுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்றும், இடம் பெயர்ந்த மக்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், அவர்களது வாழ்க்கையில் விரைவில் சகஜ நிலையை ஏற்படுத்தவும் இந்தியா முயற்சிக்கும் என்றும் தெரிவி்ததார்.

“விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீசிங்கள தீஸ்வர” – ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாட்டின் அதி உயர் விருது

pr-kandy-dala.jpg“விஷ்வ கீர்த்தி ஸ்ரீதிரீசிங்கள தீஷ்வர” என்ற அதி உயர்விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து எமது இலங்கை ஒரே நாடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் துணையுடன் வெற்றியை ஈட்டித் தந்தமைக்காக கண்டி அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் இந்த விருதை வழங்கின.

இதே போன்று நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதிக்கு பக்கபலமாக நின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பானவர் போன் றோருக்கு நன்றி தெரிவிக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.

தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலஸ்கதேவ பண்டார அங்கு வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதிக்குரிய கெளரவ பட்டத்தை ஆனமடுவாவே தம்மசித்தி தேரர் சபா மண்டபத்தில் வாசித்தார். பின்னர் ஜனாதிபதிக்குரிய பாராட்டுப் பத்திரமாகிய “விஷ்வ கீர்த்தி ஸ்ரீ திரீ சிங்களராதீஸ்வர” என்ற பட்டம் வெள்ளிப் பேழையினுள் இடப்பட்டு இரு மகாநாயக்கர்களினாலும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் முப்படைகளின் தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இதே போன்ற பட்டங்களை மகா நாயக்கர்கள் வழங்கினர். தியவதன நிலமே இவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி கெளரவித்தார்

இடம்பெயர்ந்த மக்களை 6 மாதத்தினுள் மீள்குடியேற்றும் நடவடிக்கை துரிதம்

basil.jpgவன்னியில் இடம்பெயர்ந்த இரண்டாரை இலட்சம் மக்களையும் 180 நாட்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

சுனாமியின் பின்னர் பெற்ற அனுவத்தையும் ஆற்றலையும் கொண்டு இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்ட போது இதே அளவிலான மக்களை நாம் மீள்குடியேற்றி§ னாம். அதே போல மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் முஸ்லிம்களை 44 நாட்களில் மீள்குடியேற்றினோம். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரையில் 60 ஆயிரம் மக்களை மூன்று மாதத்தில் மீள்குடியேற்றினோம். இந்த அனுபவங்களைக் கொண்டு வடக்கு மக்களை மீளக்குடியேற்ற துரித நடவடிக்கை எடுப்போம் எனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ஐ. ஏ. என். எஸ். செய்திச் சேவைக்கு பேட்டியளித்த அவர், ‘கிழக்கிலே மக்கள் இடம்பெயர்ந்த போது அந்தப் பகுதியில் சரியான பஸ் சேவை இருக்கவில்லை; சிறந்த வீதிகள் இருக்கவில்லை; மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்பும் போது சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு செயற்பாடுகளில் எங்களுக்கு உலகில் நன்மதிப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேற்றத்தில் பெரும் சவாலாக இருப்பது கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் மிகவும் பரந்த பிரதேசமாக இருக்கும். வடக்கில் கண்ணிகளை அகற்றுவதில் இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் மீள்குடியேறியதும், அடுத்த நாளே வயல்களுக்கும் விவசாயக் காணிகளுக்கும் சென்று தங்களது தினப்பணிகளில் ஈடுபட முடியுமெனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சகல மக்களும் சம உரிமையுடன் வாழ ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

bankeemoon.jpgநாட்டின் சகல மக்களும் மத, இன வேறுபாடின்றி சம உரிமையுடன் வாழுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கின்ற நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் பாராட்டினார்.

கண்டியில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசிய ஐ. நா செயலாளர் நாயகம் பான்கீ மூன், நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இது இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த பான்கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வரவேற்கக் கூடியதாக இருந்தது. சகல மக்களுக்கும் சம உரிமைகளுடன் ஐக்கிய இலங்கைக்குள் வாழும்நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்களைப் பரிமாறியதாகக் கூறினார்.

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் புலிகள் அப்பாவி மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி யுத்தம் புரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களின் நலன்புரி நடவடிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இடம்பெயர்ந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இந்த ஆண்டு முடிவுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென அரசாங்கம் உறுதியளித்துள்ளதெனவும் ஐ. நா. செயலர் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் கண்ணிவெடிகளும் ஒரு தடையாக இருக்கிறது. கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கேட்டுக் கொண்டார்.

இந்த நாட்டில் வாழும் சகல மக்களும்அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவதற்கேற்ற அடிப்படைத் திட்டமொன்றை அரசாங்கம் வழங்குமென தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகள் மேலும் துரிதமாக்கப்பட வேண்டும் என்றார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஹித போகொல்லாகம,

பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபட்ட படை வீரர்கள் எத்தகைய மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்தார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சகல முனைப்புகளிலும் அரசு உறுதியுடன் செயற்படுகிறது. இதற்காக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைக்க முன்வந்திருக்கின்றன எனவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.