23

23

புதுச்சேரியிலும் வேலை நிறுத்தம்

20-karunanithi1.jpg தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த காங்கிரஸ், திமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் பொது வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலையில் புதுச்சேரியிலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. அரசு  பஸ்வண்டிகள்  சொற்ப எண்ணிக்கையில்தான் ஓடுகின்றன.

140 தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

india-election.jpg140 லோக் சபா தொகுதிகளுக்கு 2வது கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

மொத்தம் 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காலை தொடங்கிய வாக்குப் பதிவு மிதமான முறையில் நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடியும். இருப்பினும் நக்சலைட் பாதித்த பீகார், ஜார்க்கண்ட் மாநில தொகுதிகளில் 3 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விடும்.

இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், அவற்றின் தொகுதிகளும்..ஆந்திரா 20, அஸ்ஸாம் 11, பீகார் 13, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 1, கர்நாடகா 17, மத்தியப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 25, ஒரிசா 11, திரிபுரா 2, உ.பி. 17, ஜார்க்கண்ட் 9. இவை தவிர ஆந்திர மாநில சட்டசபையின் 140 சீட்கள் மற்றும் ஒரிசாவின் 77 சீட்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு இன்றுடன் தேர்தல் முடிந்து விடும்.

மொத்தம் 121 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராகுல் காந்தி, சரத் பவார், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இன்றைய தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

திமுக வேலைநிறுத்தம் தொடங்கியது – நேற்று இரவு முதலே பஸ்கள் ஓடவில்லை – கடைகள் அடைப்பு

திமுக அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் இன்று காலை தொடங்கியது. இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள், வெளியூர் பஸ்வண்டிகள், பயம் காரணமாக தனியார் பஸ்வண்டிகள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி, இன்று பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக திரையுலகம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்திருந்தன. இந்த நிலையில், இன்று காலை போராட்டம் தொடங்கியது. பொது வேலை நிறுத்தத்தின்போது போக்குவரத்து இயல்பு நிலையில் இருக்கும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி அறிவித்திருந்தார்.

இருப்பினும் நேற்று இரவு முதலே அரசு பஸ்வண்டிகள் ஓடவில்லை. குறிப்பாக வெளியூர் பஸ்வண்டிகள் ஓடவில்லை. பயத்தின் காரணமாக தனியார் பஸ் வண்டிகளும் ஓடவில்லை.

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில பெட்டிக் கடைகள் மட்டும் அரை கதைவை மூடிய நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலைதான். ரயில் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பலத்த பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டு வருகின்றன.

நாளையுடன் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. எனவே வேலைநிறுத்தம் காரணமாக இன்று வேட்பு மனு தாக்கலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன்; பலன் கிடைக்கவில்லை – ஸ்ரீரவிசங்கர்

sri_sri_ravisangar_.jpg இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம்.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை தீராததற்கு இங்கும் சரி, அங்கும் சரி தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

 பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது. உணவு, உடை என்று நிவாரண உதவிகளைப் பெறும் நிலையில் முகாம்களில் தங்கி இருந்தாலும், தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நான் பேசினேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த வீடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத அளவுக்கு வீடு, வாசல்கள் தரை மட்டமாகி உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார்.

தீவிரவாதத்தை வேரோடு அழித்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று ராஜபக்சே தெரிவித்தார். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்து இருக்கலாம். நானே பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல முறை முயன்றேன். அதற்கு பலன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

புலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgபுலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளே அவசியமாகிறது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொடர்ந்தும் சர்வதேச அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டியது சகலரதும் கடமையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியா – பிழையா என்பதை சர்வதேசத்துக்கும் உணர்த்துவதாக மேல்மாகாண சபைத் தேர்தல் அமைவதால் தாய்நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்பது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வன்னி மனிதாபிமான நடவடிக்கை மூலம் பாதுகாப்பு வலயம் ஐந்து கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றராக மாறியுள்ளது. கடந்த மூன்று தினங்களிலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர். அம்மக்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கிடையிலான வித்தியாசத்தை தப்பிவந்த மக்கள் மட்டுமன்றி தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்ற புலிகளின் தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.

தமது உணவுப் பொட்டலங்களையும் அப்பாவிப் பொது மக்களுக்குப் பகிர்ந்தளித்து அம்மக்களைப் பராமரிக்கும் படையினருக்கு நாட்டு மக்கள் அனைவரினதும் பாராட்டுக்கள் உரித்தாகின்றன.

புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிவந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் பேச்சுவார்த்தையே அவசியமாகிறது.

இங்கிலாந்து பிரதமர், அவுஸ்திரேலியப் பிரதமர் மற் றும் ஐக்கிய நாடுகள் சபை விசேட பிரதிநிதிகளும் தொலைபேசி மூலம் என்னோடு தொடர்புகொண்டு பேசினர். அவர்களுடனும் நான் இதுபற்றியே கலந்துரையாடினேன்  எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கிர்கிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை மூட தீர்மானம் – ஆகஸ்ட் 18 வரை அமெரிக்காவுக்கு காலக்கெடு

கிர்கிஸ்தானிலுள்ள மனாஸ் இராணுவ த்தளம் மூடப்பட்டு மக்கள் பாவனை க்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. அந் நாட்டின் பாதுகாப்புச் சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்ற திங்கட்கிழமை இந்த அறி வித்தலை அவர் வெளியிட்டார். 2001ம் ஆண்டு அட்சரனிஸ்தானுக்கு இராணுவ த்தை அனுப்பிய அமெரிக்கா மனாஸ் விமானத் தளத்தை இராணுவத் தளமாகப் பாவித்து வந்தது.

விமான வீரர்களை ஏற்றிச் செல்லல், உணவு உபகரணங்களைக் கொண்டு செல் வதற்கும் இந்த தளத்தை அமெரிக்கா பாவித்தது.

ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய கிர்கிஸ்தான் பாதுகாப்புச் சபையின் செயலாளர் கூறியதாவது,

2008ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க இராணுவம் மனாஸ் தளத்தி லிருந்து வாபஸ்பெறவுள்ளது. முற்றாக வாபஸ் பெறப்பட்ட பின்னர் இது மக்களின் பாவனைக்காகத் திறக்கப்படும். பயணிகள், சரக்கு விமான சேவைகளும் நடத்தப்படவுள்ளது.

அமெரிக்கா இங்குள்ள தனது இராணு வத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது.

இது நிகழ்ந்த பின்னர் இனிமேல் வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எந்த நாட்டிற்கும் இராணுவத் தேவைக்காக இத்தளம் பாவிக்கப்படமாட்டா எனத் தெரிவித்தார். எனினும் அமெரிக்கா ஆகஸ்ட் மாதம் வரை காலம் தருமாறு கோரியுள்ளது.

இதற்கு மேல் கால எல்லையை விஸ்தரிக்கும்படி கேட்டபோதும் அதற்கான அனுமதியை கிர்கிஸ்தான் மறுத்துள்ளது. ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸகிஸ்தான் ஆகிய நாடுகளின் வற்புறுத்தலுக்கமைய கிர்கிஸ்தான் இந்த இராணுவத்தளத்தை மூட முன்வந்துள்ளதாகச் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

காலை உணவு உட்கொண்ட 28 மாணவிகள் திடீர் சுகயீனம் – வாழைச்சேனையில் சம்பவம்

vaalai-hospital.jpg வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்றுக்காலை உணவு உட்கொண்ட பாடசாலை மாணவிகளில் 28 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலையிலுள்ள மூன்றாம் வகுப்பு ‘டி’ பிரிவில் கல்விகற்கும் மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ் வகுப்பிலுள்ள 35 மாணவிகளில் 28 மாணவிகள் திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டதால் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இப்பாடசாலையின் அதிபர் எம்.ரி.எம். பரீட் தெரிவித்தார்.

வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பாடசாலை மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் காலை உணவு உட்கொண்டதில் அவ்வுணவு பழுதடைந்து இருந்ததால் அதில் நஞ்சுத் தன்மை ஏற்பட்டதினாலேயே மாணவர்களுக்கு திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் மைதிலி யோகநாதன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரசேதம் அல்லோல கல்லோலமாகக் காணப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்குச் சென்று தமது பிள்ளைகளின் நிலைவரம் குறித்து கேட்டறிந்து கொண்டனர். இச்சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ஜவாஹீர் சாலி உட்பட பிரமுகர்கள் பாடசாலைக்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொதுச் சுகாதார அலுவலகம் விசாரணைகளை நடத்தி வருகின்றது.இம்மாணவிகளுக்கு காலை உணவாக இடியப்பம், பருப்புக்கறி என்பன வழங்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பாடசாலை நேற்று கால வரையறையின்றி மூடப்பட்டது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். – விமல்

vimal-veera000.jpgபுலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட மனோ கணேசன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலிகளுக்கு ஆதரவாக தென் பகுதிகளில் இருந்து கொண்டு செயல்பட்டவர்களையும் அமைப்புக்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி அர்த்தம் இல்லாது போய்விடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர்மாநாடு நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளது

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் 20 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து இன்று (23.04.2009) தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று தொடக்கம் அமுலுக்கு வரும.; யாழ் ரயில் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மிகவேகமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். என அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருந்தொகையான மக்களுக்கு விநியோகிக்கவென ஆயிரக்கணக்கான உலர் உணவுப் பொதிகளையும், சமைத்த உணவுப் பொதிகளையும் விமானப் படை விமானங்கள் எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக விமானப் படைப்பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படையினர் நேற்று முன்தினம் 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளையும், நேற்றைய தினம் காலை ஆறாயிரம் சமைத்த உணவுப் பொதிகளையும் கிளிநொச்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரை நோக்கி பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து, அதனை தடுக்கும் வகையில் புலிகளால் மூன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 238 பொது மக்கள் அவசரமாக மீட்டெடுக்கப்பட்டு விமானப் படை விமானம் மூலம் அவசரமாக அநுராதபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.