22

22

மட்டு. மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் 26,619 வீடுகள் சேதம்

போர்ச்சூழல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 26,619 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 4,387 வீடுகளும், வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 7,777 வீடுகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 6,591 வீடுகளும், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 7,864 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இவற்றில் இந் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16,884 வீடுகள் முழுமையாகவும், 9,735 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

imf.jpgதற் போதைய உலக நிதிநெருக்கடியை சமாளித்து, சர்வதேச நிதிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு உலக நாடுகள் அனைத் தும் மேலதிக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, ஐ எம் எப் எனப்படும் சர்வதேச நாணயநிதியம் கோரியிருக்கிறது.

நிதி நிலைமையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாகவும், நிதி நிலைமை தொடர்பான நம்பிக்கை அதிகரிக்கத்துவங்கியிருப்பதாகவும், ஐஎம்எப் அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம் இதுவரை உலகநாடுகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தனித்தனியான சிறு நடவடிக்கை களாகவும், எதிர்வினைகளாகவும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சிக்கலுக்குள்ளான நிதிச்சுமைகள் குறித்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி, அவற்றின் மதிப்பு நான்கு டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிதி நெருக்கடி காரணமாக சில நிறுவனங்கள் மூடப்படவேண்டியோ அல்லது வேறுநிறுவனங்கள் அவற்றை தம்வசப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையோ உருவாகியிருப்பதாக்வும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:வைத்திய நிபுணரின் கொலையைக் கண்டித்து கடைகள் பூட்டு

வவுனியா கற்குழி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்னால் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிபுணரின் கொலையைக் கண்டித்தும், அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தும் வவுனியாவில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு வெள்ளை கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன் கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பொலிஸ், இராணுவ தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சோதனை நடவடிக்கைகளும் சில இடங்களில் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளத்தி்ல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் மொகமட் சுல்தான் மீரா மொகிதீனின் (52) உடலுக்குப் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர், வைத்தியசாலை ஊழியர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தினால் பல்வேறு அபிவிருத்திகளுக்கு நிதிஒதுக்கீடு

muththu-sivalingam.jpgசாமிமலை நகருக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு பெருந்தோட்ட கட்டமைப்பு பிரதியமைச்சரும், இ.தொ.கா தலைவருமான முத்து சிவலிங்கம் 55 இலட்சத்து 153 ரூபாயை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார்.

நீர் விநியோகத் திட்டத்தை வெகு விரைவில் திறந்து வைக்கவிருக்கிறார். கெளரவில, பார்குரோ, மின்சிங்லேன் ஆகிய தோட்டங் களின் வீடமைப்புத் திட்டத்தையும் வெகுவிரைவில் திறக்கவிருக்கிறார். சாமிமலை கொழும்புத் தோட்டம், ஸ்டொக்கம் ஆகிய தோட்டங்களுக்கு மின்சார விநியோ கத்திற்கு 2 இலட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்.

கடவளை தமிழ் வித்தியாலய கட்டிடங்களுக்கு 69 இலட்சத்து 24 ஆயிரத்து 64 ரூபாய் ஒதுக்கியுள்ளதோடு திறப்பு விழாவும் வெகு விரைவில் நடைபெறும். பின்னோயா, கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தின் மின்சாரத்திற்கு 11 இலட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபா யையும், சென்ன தமிழ் வித்தியால கட்டிடத் திறப்பு விழாவிற்கும் 93 இலட்சத்து 52 ஆயிரத்து 155 ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்.

மஸ்கெலியா பகுதிக்கு பிலரத்தோல் டிவிஷனின் மின்சாரமும், மின்சார தூண்களுக்கும் 34 இலட்சத்து 35 ஆயிரத்து 900 ரூபாயையும், டங்கல்ட் தோட்டத்திற்கு மின்சாரம் பெறவும், செலவீனத்திற்கு 72 இலட்சத்து 48 ஆயிரத்து இருநூறு ரூபாயையும், கிளன்டில் மஸ்கெலியா டிவிசன் நீர் விநியோகத்திற்கு 55 இலட்சத்து நூற்றி ஐம்பத்திமூன்று ரூபாயையும், மஸ்கெலியா குயின்ஸ் லன்ட் டிவிசன், பிரவுன்சிக் கட்டிட நிர்மாணத்திற்கு 41 இலட்சத்து 4 ஆயிரத்து முன்னூற்றி தொண்ணூற்றி ஏழு ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்

பணமோசடியில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல்

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் நெருக்கமான நண்பர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பல கோடி ரூபா பணத்தை பொது மக்களிடமிருந்து மோசடியாகப் பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரையும் இன்று 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ நித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் முன்னாள் இராணுவ வீரர் எச்.பீ. நாரத லக்ஷ்மன் வனராஜ, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாரத்ன பண்டார மற்றும் நெலும் அதிகாரி ஆகியோர்களாவர்.

மினுவாங்கொட பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இம்மூவரும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் அவரின் உதவியுடன் இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகவும் கூறி நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ளவர்களிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளனர் என கல்கிரியாகம பொலிஸார் கல்கிரியாகம நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.