04

04

ஐ.நா. அதிகாரிக்கும் விடுதலைப் புலிகள் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல்: நோர்வே மீது இலங்கை அரசு அதிருப்தி

dr-palitha.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரியான சேர் ஜோன் ஹோம்ஸிற்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசிக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நோர்வே அனுசரணை வழங்கியமைக்காக இலங்கைக்கான நோர்வே தூதுவரை அழைத்து இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியான கே.பி. எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரி சேர் ஜோன் ஹோம்ஸ் இடையில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் குறித்தே நோர்வேயின் தூதுவரிடம் இலங்கை வெளிநாட்டமைச்சு தனது அதிருப்தியினை வெளியிட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்கு அனுசரணை வழங்கியதாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இந்தச் சந்திப்பின்போது ஒப்புக்கொண்டிருப்பதாக பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் அரச ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள் : ஐ.தே.க. எம்.பி. வஜிர

unp-vijira.jpg“எமது நாட்டில் அரசு ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளார்கள். அவர்களுக்கான ஓய்வூதியம் கூட ஒழுங்கான முறையில் கிடைக்கப் பெறுவதில்லை” என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகேகர நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

“எமது ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க.அரச ஊழியர்களுக்கு எவ்வாறான சலுகைகளை அளித்தது என எம்மை வினவுகிறார்கள் . ஆரம்ப காலத்தில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 55 ஆகக் காணப்பட்டது. இதனால் எமது ஆட்சிக்காலத்தில் நாம் ஓய்வூதிய நிலையத்தில் ஒரு கணிப்பை மேற்கொண்டோம். 55 வயதில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் 60 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை என்பன தொடர்பில் கணிப்பொன்று நடத்தப்பட்டது. அதன் பிரகாரம் 55 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை 100 க்கு 5 வீதமாகவே இருந்தது. இதனால் வயதெல்லை 60 ஆக தீர்மானிக்கப்பட்டது.

ஐ.தேகவினால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது 55 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரிக்க அக்காலக்கட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களின் பதவி உயர்வுகளில் எவ்வித பாதகமான நிலை ஏற்பட்டாலும் ஓய்வூதியம் பாதிக்கபடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தற்போது கூறப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் அரச ஊழியர்கள் ஒரு குழப்ப நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்காக 25,000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் தென் பகுதி காலியில் அமைக்கப்பட்டன.  இப்பொழுது அவற்றைத்தான் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 1500 வீடுகள் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது? திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆசிய வங்கியோ, சர்வதேச நாணய நிதியமோ இலங்கைக்கு கடன் உதவி வழங்கும்போது, அந்நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார நிலையை அவதானித்தலே முக்கியமான செயலாக இருக்கும் . நாட்டில் நிதி கொள்கைகள் ஒழுங்கான முறையில் கணக்கிடப்படாவிட்டால், எந்த நாடும் நமது நாட்டுக்கு உதவி வழங்க முன் வரப்போவதில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலையே காணப்படுவதாகப் பரவலாக பேசப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மாளிகாவத்தை சிறுநீரக மாற்று சிகிச்சை ஆராய்ச்சி பிரிவு தொடர்பில் சர்ச்சை

nimal-sri-pala.jpgகொழும்பு, மாளிகாவத்தையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவை எந்தத் தரப்பினரிடம் ஒப்படைப்பதென்பது தொடர்பாக நிலவிவரும் இழுபறி நிலைக்கு அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குள் சுமுகமான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கப் போவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இப்பிரிவு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினரும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் சுமுகமான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவின் மருத்துவ உபகரணங்களை அனுராதபுரம் மற்றும் பதவிய அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குக் கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப்பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சுமார் 17 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கம் 450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் பிரிவை மக்கள் நலன்கருதி இந்நாட்டில் முதற் தடவையாக நிர்மாணித்திருக்கிறது.

இந்தப் பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. இதனால் இப்பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த இழுபறி நிலை ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கிறது. இந்நிலை இனியும் தொடர இடமளிக்க முடியாது என்றார்.

இப்போதைக்கு பாகிஸ்தானில் கிரிக்கெட் இல்லை – ஐ.சி.சி. அறிவிப்பு

icc-logo.jpgபாகிஸ் தானில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. லாகூரில் கடந்த மாதம் 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் டேவிட் மொர்கன் வெலிங்டனில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

லாகூரில் நடந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு பாகிஸ்தõனுக்கு கிரிக்கெட் அணிகளையோ அதிகாரிகளையோ அனுப்ப முடியாது. அங்கு பாதுகாப்பு விடயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டால்தான் கிரிக்கெட் அணிகளை அனுப்புவது பற்றி பரிசீலனை செய்ய முடியும் என்றார்

அமைச்சர்கள் தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” – ஐ.தே.க. ரங்க பண்டார

unp-ranga.jpgநாட்டு மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சியடைந்து கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் 270 மீனவ படகுகள் கடலுக்குச் செல்ல கடற்படையினர் தடை விதித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனால் 8,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களது ஒரே ஜீவனோபாய தொழில் இது மட்டுமே. கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆழ்கடல் சுழியோடிகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்நிய செலாவணியை ஈட்டித் தருவது. இந்தத் தடையுத்தரவால் அந்நிய செலாவணியும் கிடைக்காமல் போகிறதல்லவா?

மீன்பிடிக்கச் செல்வதற்குக் கடல் எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறு தீவுகள் காணப்படும் கடற்பகுதியிலேயே மீன் பிடிக்க முடிகிறது. தமிழ்-சிங்கள சித்திரை புது வருடத்துக்கு சில நாட்களே உள்ளன. இந்த உற்சவ காலத்தில் மக்களின் நிலை பற்றி எவருமே கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

அரசு புதுமாத்தளன் பகுதியில் 1 கிலோ மீற்றருக்கு புலிகளை மட்டுப்படுத்தி உள்ளதாகக் கூறுகிறது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகள் அரச கட்டுப்பாட்டில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கற்பிட்டி கடற்பரப்பில் மீன் பிடிக்க அரசு கடற்தொழிலாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கின்றது என நான் அரசிடம் கேட்கிறேன் . மீனவர்கள் தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்றே நான் அரசிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இன்று அமைச்சர்கள் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர்களே தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.