April

April

மலேசிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு

najib-razak.jpgமலேசிய பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் தலைமையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. மலேசியாவின் புதிய பிரதமராக நஜீப் அப்துல் ரசாக் கடந்த 3ம் தேதி பொறுப்பேற்றார். பிரிட்டனில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த நஜீப்(55), மலேசிய நாட்டின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசைனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க செயற்கைகோள் 20-ந்தேதி ஏவப்படுகிறது

pak_terror.jpgபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அதிநவீன ராடார் கொண்ட செயற்கைகோள் ஒன்றை இந்தியா தயாரித்துள்ளது. இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வரும் 20-ந்தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இலங்கை இராணுவத்தை குறைகூற பிரித்தானியாவுக்கு அருகதையில்லை: சம்பிக்க ரணவக்க

chambika.jpgஎமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானியா தற்பொழுது எமது இராணுவத்தினர் குறித்துக் குற்றஞ்சாட்டக் கூடாது என நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

பயணிகளின் பொதிகளை ஒப்படைக்க நடவடிக்கை

green-ocean.jpg
முல்லைத்தீவு,  புதுமாத்தளன் பகுதியிலிருந்து சிகிச்சைக்காக கப்பல் மூலம் புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டவர்கள் விட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து அவசர மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு “கிறீன் ஓசன்’ கப்பல் மூலம் வந்தவர்கள் சிலர் கைவிட்டுச் சென்ற பொதிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; அவசர மேலதிக சிகிச்சைக்காக புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த 6 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை வந்தவர்களில் சிலர் பொதிகளை கைவிட்டு வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், இவற்றை உரியவர்களிடம் கையளிக்கும் முகமாக இப்பொதிகளை வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

திருமலையில் விபத்திற்குள்ளாகிய கப்பல் முற்றாக மூழ்கியது.

trnco-sea.jpgதிருமலை கடற்பகுதியில் விபத்திற்குள்ளான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அக்கப்பல் முற்றாக மூழ்கி விட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்

பார்வையற்ற படை வீரர்களுக்காக பேசும் கடிகாரங்கள் அன்பளிப்பு!

laptop_ranavirufoundation.jpgகனடாவிலுள்ள இலங்கையர்கள் றாகமையில் அமைந்துள்ள ‘றணவிரு செவன’ நிலையத்தில் பராமரிக்கப்படும் பார்வையற்ற இராணுவ வீரர்களின் பாவனைக்காக மடிக் கனணி ஒன்றையும் பேசும் கடிகாரங்களையும் அன்ளிப்புச் செய்துள்ளனர். இந்த அன்பளிப்புக்களை டொரன்டோவிலுள்ள இலங்கைக்கான கொன்சுயூலர் ஜெனரல் பந்துல ஜெயசேகர,  மேஜர் துஸ்யந்த யாப்பாவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்துக் கையளித்தார்.

கனடாவின் டொரன்டோ நகரில் வசிக்கும் நாட்டுப்பற்று மிக்க இலங்கையர்களால் வழங்கப்பட்ட இந்த அன்பளிப்புக்கள் தாய்நாட்டுக்காக தமது உயிர்களையும் அவயங்களையும் இழந்த படைவீரர்களை  கௌரவப்டுத்தும் நோக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!’ இந்தியத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – போராட்டங்கள் தொடர்கிறது. : த ஜெயபாலன் & வி அருட்செல்வன்

இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.

அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.

புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

london-parliment-meeting2.jpgபிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

வன்னி அகதிகளின் நலன்கருதி குடாநாட்டில் தற்காலிக கொட்டில்கள்

srilanka_idp.jpgகுடா நாட்டுக்கு வரும் வன்னி அகதிகளின் நலன்கருதி கைதடி பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 600 தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் கிடைப்பது மிகக் கடினமாகவுள்ள போதும் கிடைக்கும் கிடுகுகளைக் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டு அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தென்மராட்சி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வன்னி அகதிகள் தற்காலிக குடிசைகளில் தங்கி தாமே சமைத்து உண்பதற்கு விரும்புவதால் இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், நலன் நோன்பு நிலையங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்புப் பிரிவினர் அதிகரித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு இதுவரை 4,900 அகதிகள் வந்துள்ள போதும் இவர்களுக்கான சகல வசதிகளும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்நலன் நோன்பு நிலையங்களுக்கு தொலைபேசி வசதியும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச தலைவர் இலங்கை விஜயம்

jakob-kellenberger.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு என்பன தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கில் போர் இடம்பெற்று வரும் சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.சி.ஆர்.சி. வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ரோஹித பாராட்டுத் தெரிவித்துள்ளார்

புதுமாத்தளனிலிருந்து 536 பேர் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

green-ocean.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் 536 பேர் புதன்கிழமை புல்மோட்டைக்கு  அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 230 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதுவரையில் 19 தடவை புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளுக்கு நோயாளிகள் உள்ளிட்ட வன்னி பொதுமக்களை அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.