April

April

விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது

puthumathalan.jpg
விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது என பி.பி.ஸி. அறிவித்துள்ளது

இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானம்

nimalsiripaladasilva.jpg தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் மாணவர்களோ பெற்றோரோ ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்படுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தேசிய நோய்த் தடுப்பு வேலைத் திட்டத்திற்கமைய ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாடு முழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் 350 பேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ்ஈழம் மட்டுமே. தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் – ஜெயலலிதா

jayalalitha.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்பட, தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டுமே. அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்த தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா இவ்வாறு அறிவித்தார்.

ஜெயலலிதாவின் உரை…

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.  இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.  எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, ரவிசங்கர் அவர்கள் என்னை சந்தித்தார்.

sri_sri_ravisangar_.jpgஅப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எனக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது
தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது. அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றவாளிகளா?… இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?…குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் – தடுப்பு வதை முகாம்களை நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த – ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.  இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை – மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை – இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர்.

வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், “எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்” என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது. இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. “முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,” என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, “இப்போதைக்கு அது முடியாது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

“இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்” என்று கேட்டதற்கு, “அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், “அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்” என்றும், “எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்” என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?… அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?… சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?…

இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் – அடிமைகளைப் போல் – அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?… இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?… எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.  இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

380 மெ. தொ. உணவு பொருட்கள் விமானம் மூலம் விநியோகம்

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு விநி யோகிக்கவென விமானம் மூலம் மாத்திரம் 21 திகதி முதல் நேற்று வரை 350 மெற்றிக் தொன் சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தரைவழியாக பொருட்கள் மற்றும் உலர் உணவுகளை விமானப் படையினர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

பொது மக்களுக்கு தேவை யான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப்படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறிகள் மூலமும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கென சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமைத்த உணவுப் பொதிகள், பேக்கரி உற்பத்திப் உணவுப் பொருட்கள், பால், தண்ணீர் போத்தல்கள், குடிபான வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 350 மெற்றித் தொன் பொருட்களையே விமானப் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

வன்னியில் அகதிகள் வருகை அதிகரிப்பு புல்மோட்டையிலும் முகாம் அமைகிறது

Wanni_War_Welfare_Campவன்னியில் இருந்து புல்மோட்டைக்கு வருகின்ற அகதிகள் தொகை தினமும் அதிகரித்து வருவதால் புல்மோட்டையில் இடைத்தங்கல் முகாம் ஒன்றை அவசர அவசரமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புல்மோட்டை அநுராதபுரம் வீதியில் 13 ஆவது மைல் கல்லில் உள்ள 100 ஏக்கர் காணியில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட அர சாங்க அதிபர் ரஞ்சித் டீ சில்வா மற்றும் திருகோணமலை கடற்படை கட்டளைத்தளபதி ஆகியோர் நேற்று சனிக்கிழமை மாலை இங்கு விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டனர்.

5000 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் இந்த இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இந்த வேலைகள் குச்சவெளி பிரதேச செயலர், கிண்ணியா பிரதேச செயலர், பதவிசிறிபுர பிரதேச செயலர் மற்றும் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் ஆகியோரின் மேற்பார்வையில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில தினங்களில் இந்தவேலைகள் முடிவுறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலைஞர்மடம் இராணுவத்தினரால் விடுவிப்பு

இராணு வத்தின் 58 ஆம் படையணியினர் வலைஞர்மடம் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இருந்து 6கிலோமீற்றர் தொலைவில் வலைஞர்மடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உண்ணாவிரதத்தை முடித்த பெண்கள் – தேர்தல் பிரசாரத்தில்….

womens-fast-ends.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக சென்னையில் பெண்கள் கூட்டமைப்பு நடத்தி வந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பேர் கடந்த 13-ந் தேதி முதல் மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 5 பெண்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை மற்றும் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக போராட்டக் குழு தலைவர் பேராசிரியை சரஸ்வதி அறிவித்தார்.

இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், சோனியாவே போரை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் நடத்திய இந்த போராட்டத்தை சோனியா காந்தி தாயுள்ளத்தோடு செவி சாய்ப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவரிடம் இருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக காங்கிரசின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இன்னும் 2 நாட்களில் சோனியாவிடம் இருந்து உரிய பதிலை பெற்றுத் தருவதாக கூறியதை ஏற்று 5 நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வரவில்லை. எனவே தமிழினத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்த கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டோம்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைத் தேர்தலை நோக்கி முழுமையாக திருப்பிய நிலையில் நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகத்தின் கவனத்தை தமிழின அழிப்புக்கு எதிராக திருப்பி இருப்பது எங்களுக்கு நிறைவை தருகிறது. கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் களம் இறங்கியுள்ள நிலையில், நீதிபதி கிருஷ்ணய்யர், மேதா பட்கர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வது, தொடர் உண்ணாவிரதம், தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் பிரசாரம் ஆகியவற்றை செய்ய இருக்கிறோம்.எங்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இடம் தந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு நன்றி கூறுகிறோம் என்றார் அவர்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகி மீனா கிருஷ்ணசாமி, உண்ணாவிரதம் இருந்த 15 பெண்களுக்கும் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

ஜப்பான் உதவியில் அநுராதபுர போதனா வைத்தியசாலையை மேம்படுத்த திட்டம்!

nimalsiripaladasilva.jpgஅநுராத புரத்தில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான வசதிகளை மேம்மபடுத்த ஜப்பான் நாட்டின் உதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார். இத்திட்டத்தில் இர்ண்டாம் கட்ட நடவடிக்கைக்கு 390 மில்லியன் ஜப்பான் யென் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரி

anura.jpgதேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரியொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்திருந்தார்.

அரசாங்க திரைப்படப் பிரிவுடன் இணைந்தாக இது இயங்கும். இதன் இயக்குணநராக பேராசிரியர் தர்மசேன பதிராஜ நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியால் நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை இவருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா அரச நிதியத்திலிருந்து சம்பளமாக வழங்கப்படும்.

இந்தியாவுக்குள் 31 தீவிரவாதிகள் ஊடுருவல்

india.jpgபாகிஸ் தானில் இருந்து,  இந்தியாவுக்குள் 100-ல் இருந்து 120 பேர் வரை கொண்ட ஒரு கூட்டத்தினர் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதி வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.

இவர்களில் 31 பேர் தீவிரவாதிகள். மற்றவர்கள், அவர்களுக்கு வேண்டிய வெடிபொருள், ஆயுதங்கள், உணவுப்பொருள் போன்றவற்றை சுமந்து செல்லும் போர்ட்டர்கள் மற்றும் வழிகாட்டிகள். இந்த தகவலை, இந்திய ராணுவ பிரிகேடியர் குர்மீத் சிங் ஸ்ரீநகரில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்திய பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் 18 நாள் முதல் 90 நாள் வரை பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள்.

குரேஸ் பகுதியில் இப்போது அதிக அளவில் பனிக்கட்டிகள் உருவாகி உள்ளன. எனவே, எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு விட்டன.இதை பயன்படுத்தி, தீவிரவாதிகள் அந்த வழியாக இந்தியாவுக்குள் வந்து விட்டனர்” என்றார்.