March

March

மனிதாபிமான விழுமியங்களுக்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்

navanethem.jpgவன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதுடன் மனிதாபிமான விழுமியங்களுக்கு இருதரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னியில் இருதரப்பிற்கும் இடையிலான மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்பதனால் தொடர்புடைய தரப்பினர் போர்நிறுத்தமொன்றை அமுல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அப்பாவி பொதுமக்களை கருத்திற்கொண்டு போர்நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதேசங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தாம் விரும்பிய இடத்திற்குச் செல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி மக்களுக்கு அனுமதியளிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 2700 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு இலங்கை குறித்து நாளாந்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி சரத் 1 கோடி கையெழுத்து இயக்கம்

sarathkumar.jpgஇலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துகளை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியி்ல் முதல் கையெழுத்தை சரத்குமார் போட்டார்.

இதைத் தொடர்ந்து அப் பகுதி பொது மக்கள், கடைக்காரர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது சரத்குமார் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு உரிமை கோரி 60 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உடனே, இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்கள், மத்திய அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்கள் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். சேவை மனப்பான்மை, தொலைநோக்கு பார்வையுடன் உழைக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்கள் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும் என்றார்.

7 இலட்சம் டொலர் ஜப்பான் நிதியுதவி

japan.jpgவட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்காக 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கான சுவிஸ் அமைப்பிடம் இது தொடர்பாக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளதென இலங்கைக்கான தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் புலம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் இடம்பெறுகின்றன. இம் மக்களின் நலன் கருதி, அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கான உதவிகளை ஜப்பான் அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கான சுவிஸ் அமைப்பிடம் வழங்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வவுனியாவில் 1000 கட்டில்கள் கொண்ட நடமாடும் வைத்தியசாலை அமைக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சு தகவல்

health-care.jpgவடக்கில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 1000 கட்டில்களைக் கொண்ட நடமாடும் வைத்தியசாலை ஒன்றை வவுனியாவில் அமைக்கத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கென தற்காலிக சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும் முல்லைத்தீவிலிருந்து கூடுதலான அளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் நடமாடும் வைத்தியசாலைகள் இல்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு அல்லது கடனுதவியாக நடமாடும் வைத்தியசாலை ஒன்றைப் பெறத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 

இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தலைவராக டி.எஸ்.டி. சில்வா தெரிவு

sl_cricket.jpgஇலங்கை கிரிக்கட் நிறுவன இடைக்கால நிருவாக சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடைக்கால நிருவாக சபையின் புதிய தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால நிருவாக சபையின் செயலாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர புதிய இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, சுஜீவ ராஜபக்ஷ, லலித் விக்ரமசிங்க, ரனில் அபேனாயக்க மற்றும் முன்னாள் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் வைத்து வழங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிலாரி கிளின்ரன் ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

hillary-clinton.jpgஅமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  இத்தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு முதன்மையானதென ஹிலாரி கிளின்ரன் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என ஹிலாரி குறிப்பிட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உலக சனத்தொகை 2012இல் 700 கோடியை எட்டிவிடும்

world-map.jpg2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியாகிவிடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும்.

2010 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் சிறந்த சேவையாற்றப்படுகின்றது : கண்டி ஆயர்

bis-kandy.jpg
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றப்படுவதையிட்டுத் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவரான கண்டி ஆயர் பேரருட்திரு. வியான்னி பர்னாண்டோ தெரிவித்தார். செட்டிக்குளத்திலுள்ள மனிக் பாம் நலன்புரி நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுத்திருப்பதையிட்டுத் தாம் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.

அங்கு விஜயம் செய்த ஆயர் குழுவை நலன்புரி முகாமில் வவுனியா அரசாங்க அதிபர் ஜி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். முகாமைப் பார்வையிட்ட குழு அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்குp போதிய வசதிகள் அளிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்தது. விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 88,000 மக்கள் 14 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதோடு தொழிற்பயிற்சி நெறிகள, மாணவர்கள் கற்பதற்கேற்ற பாடசாலை வசதிகளுடன் சிறுவர்களுக்கான முன்பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் பார்வையிட்ட ஆயர் குழு, “அரசாங்கத்துக்குத் தான் நன்றிகூற வேண்டும்;” என்று கூறினர். வன்னியில் தாம் அச்சத்துடனேயே வாழ்ந்ததாகவும் தற்போது இங்கு சந்தோமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்ததாக கண்டி ஆயர் தெரிவித்தார். “இத்தகைய சூழ்நிலையில் நாம் முதல் தடவையாக இங்கு விஜயம் செய்துள்ளோம். இடம்பெயர்ந்து வந்த மக்கள் இன்று சந்தோமாக இருக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை செல்ல வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றும் அவர் கூறினார். 

இலங்கையின் மனித அவலங்களைச் சுட்டிக்காட்டி 38 அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிண்டனுக்குக் கடிதம்

hillary-clinton.jpgஇலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பு, அவலங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைஸுக்கும் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக இழுபறிபடும் அரசியல் தீர்வை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், டொம் லான்டொஸ், மனித உரிமைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழு உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளுடன் சீனத்தூதுவர் நேற்று சந்திப்பு

kandy1.jpgஇலங்கைக்கான சீனத் தூதுவர் சியூபிங் யென்ங், அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துப் பேசினார். கண்டியிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த விகாரைகளில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இலங்கை – சீனா இரு நாடுகளினதும், நட்புறவை மேலும் வலுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இலங்கைக்கான சீன நாட்டு புதிய தூதுவர் சியூ பிங் யென்ங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீன நாட்டு உறவுகளை பலப்படுத்தும் முகமாக இரு நாடுகளிலுமுள்ள வாலிப பெளத்த மத குருமார்களை இலங்கையிலிருந்து சீன நாட்டுக்கும் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கும் அனுப்புவதன் மூலம் எமது இரு நாடுகளுக்குரிய உறவுகளும் பலப்படுத்துவதற்கு ஒரு பிரதான காரணமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் புத்தபெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுகளிக்க வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை என்னால் அவதானிக்கின்ற பொழுது இந்த நாட்டு பெளத்தர்கள் பெளத்த மதம் மீது வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் என்னால் மிக தெளிவாக உணரக் கூடியதாக இருக்கின்றன.

இன்று இலங்கை பெளத்தர்கள் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து பெளத்தர்களும் ஸ்ரீதலதா மாளிகையையும் அதன் போதனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது போல் நானும் இச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்திருப்பது பெரும் அதிர்ஷ்டத்திற்குரிய ஒருவராக இருக்கின்றமை குறித்து மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.

சீனாவில் உள்ள பீஜிங் நுவர லீ குவான் விகாரையிலும் புத்த பெருமானின் புனித தந்தமொன்று உள்ளது. அதனை தரிசிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2007 இல் வந்ததை முன்னிட்டு இலங்கை – சீன நட்புறவு மேலும் வலுவடைந்ததையும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளுக்கு கூட இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் உற்சாகம் காட்டி வருவதையும் என்னால் அறிய முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.