இலங்கை கிரிக்கட் நிறுவன இடைக்கால நிருவாக சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடைக்கால நிருவாக சபையின் புதிய தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால நிருவாக சபையின் செயலாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர புதிய இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, சுஜீவ ராஜபக்ஷ, லலித் விக்ரமசிங்க, ரனில் அபேனாயக்க மற்றும் முன்னாள் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் வைத்து வழங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.