உலக சனத்தொகை 2012இல் 700 கோடியை எட்டிவிடும்

world-map.jpg2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியாகிவிடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும்.

2010 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *