Multiple Page/Post

ஆலய உற்சவத்தில் குளவிகள் கொட்டி 80 பேர் ஆஸ்பத்திரியில்

000images.jpgஆலய உற்சவமொன்றின் போது, குளவிகள் கொட்டியதில் 80 பேர் அப்புத்தளை மற்றும் தியத் தலாவை அரசினர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம், அப்புத்தளை தோட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குளவிகள் கொட்டியவர்களில் 20 பிள்ளைகளும், இரு பெண்களும் ஆபத்தான நிலையிலிருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆலய உற்சவத்தின் போது அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த போது, அடுப்பு புகையினாலேயே குளவிகள் கலைந்து அடியார்களைக் கொட்டியதாக தெரிய வருகின்றது.

திருப்தியாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம்

botreeஆசிய நாடுகளில் அதிகளவிலான மக்கள் தமது வாழ்வை திருப்திகரமாக வாழுமிடங்களில் இலங்கை முதலிடத்திலுள்ளது.  நுகர்வோர் நடவடிக்கை தொடர்பாக ஆசிய பசுபிக் கிறே குழு விளம்பரக் கூட்டு வியாபார சங்கத்தினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இலங்கை முன்னிலையில் உள்ளது. 16 நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்படி தாய்வான் 28 சதவீதத்தை மட்டுமே பெற்று இறுதி நிலையிலுள்ளது.

இச்சங்கத்தின் 4 ஆவது வருடத்தில் ஆசிய பசுபிக் நாடுகளிலுள்ள 18 – 65 வயதுக்கிடைப்பட்டவர்கள் 8000 பேரிடம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்னஞ்சல்கள், நேர்காணல்கள் மூலம் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, சீனா மற்றும் இலங்கை ஆகியன 94 சதவீதத்தால் அதிகளவில் நம்பிக்கையுடைய மக்கள் வாழும் நாடுகளாக உள்ளன.

ஆனந்தசங்கரியின் வாகனம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் 1 வரை ஒத்திவைப்பு

court222.jpgதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் வாகனத்தை அவரிடம் திருப்பி ஒப்படைக்காது மறுத்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னிப் பிராந்தியக் கிளையின் நிர்வாகச் செயலாளர் வி.சகாயதேவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனது வாகனத்தை மோசடி செய்ததாக சகாயதேவன் மீது வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டி வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து சகாயதேவன் வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாக்கு மூலமும் பொலிஸாரால் பெறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை வவுனியா நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராசா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருதரப்பினரின் சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வவுனியா நகரசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டதுடன், வி.சகாயதேவன் அதன் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாகனம் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான மாற்றங்கள் அனைத்தும் ஒரே தடவையில் -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

yappa.jpgஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் தேர்தல் விதிகளையோ அரசியல் அமைப் பையோ பகுதிபகுதியாக திருத்துவதற்கு அரசாங்கம் தயா ரில்லையென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் வழங்கவுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், எல்லாத் திருத்தங்களை ஒரே நேரத்தில் செய்வதற்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் தீர்வுக்காக தேசிய ஒருமைப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி எண்ணியுள்ளாரென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அதனை மக்களுக்கு சமர்ப்பித்து அதன் அடிப்படையில் தீர்வைக்கான முற்படுவதாகவும் அவர் கூறினார். நாரஹேன் பிட்டியிலுள்ள தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ள போதிலும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கூறிய அமைச்சர், அன்று அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. திடீரென அரசிலிருந்து விலகி அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியே அந்த ஒப்பந்தத்தை மீறி அரசி யலிலிருந்து விலகிக்கொண்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின்படி தனியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவோ அரசியல் ரீதியில் வேறு ஒரு கட்சிக்கும் உதவி செய்ய தேவையான வாக்குப் பலமோ தற்பொழுது இல்லாமல் போயுள்ளது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கின்றது. இந்நிலையில் பொதுவான மாற்றத்தை தவிர பகுதி பகுதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயாரில்லை.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு ஒன்றை நியமித்து தென்மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணா திலக்க எம்.பி.யின் கூற்று தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தோ சட்டதிட்டங்களை மாற்றியமைத்தோ தேர்தலை வெற்றி கொள்ள முடியாது. அதற்கு பதிலாக மக்கள் மத்தியில் சென்று மக்களின் மனதை வெல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவும், 1996ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தா வெற்றி கண்டனர் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். கிழக்கு மாகாணத்திலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்ற தேர்தல்களில் அரசுக்கு அதிகூடிய வெற்றிகள் கிடைத்ததாக தெரிவித்த அமைச்சர், ஊவாவை விட தென் மாகாண தேர்தலில் மக்களின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 

சசீந்திர ஊவா முதல்வராக இன்று சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ இன்று பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலை யில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்த லில் 1,36,697 வாக்குகளைப் பெற்று இவர் சாதனை படைத்திருந்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் மாகாண அரசியலில் ஆக குறைந்த வயதில் முதல மைச்சராக தெரிவு செய்யப்படுபவர் இவராவார்.

1978 இல் ஜூன் மாதம் 28ம் திகதி பிறந்த இவர் ஜனாதிபதியின் மூத்த சகோ தரரும் துறைமுகங்கள், விமான சேவைகள், நெடுஞ்சாலை, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகனாவார்.

ஆரம்ப கல்வியை கொழும்பு மகாநாம கல்லூரியிலும், இடை நிலைக் கல்வியை கல்கிஸ்ஸ சென்தோமஸ் கல்லூரியிலும் தொடர்ந்த சசீந்திர உயர் கல்வியை புது டில்லியில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொண்டு அரசியல் விஞ்ஞானத் துறையில் கெளரவப்பட்டம் பெற்றுக் கொண்டார்.

அத்தோடு கொழும்பு பல்கலைக்கழகத் தில் வர்த்தக முகாமைத்துவமும், பண்டார நாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் சர்வதேச தொடர்பாடல் டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

ஊவாவிற்கும் தென் மாகாணத்துக்கும் ஒரு உறவுப்பாலமாக அமையப்போகும் புதிய முதலமைச்சர் சசீந்திர குமார ராஜபக்ஷவின்மேல் ஊவா மக்கள் அபார நம் பிக்கையை வைத்திருப்பதை ஊவா மாகாண சபைத் தேர்தல் வெளிக்காட்டியது.

பா.ஜ.கவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார்

_jaswantsingh.jpgபாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  எழுபத்தொரு வயதான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில், முகமது அலி ஜின்னாவைப் பாராட்டியிருப்பதுடன், நாட்டின் பிரிவினைக்கு நேருவும், சர்தார் படேலும்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது பா.ஜ.கவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சிம்லாவில் துவங்கியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜஸ்வந்த் சிங்கும் அங்கு சென்றிருந்தார். ஆனால், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ராஜ்நாத் சிங் அவருக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டார்.

பின்னர் மீண்டும் தொலைபேசியில் ஜஸ்வந்த் சிங்கை தொடர்பு கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ஜஸ்வந்த் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப் போவதாக ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் – விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா

mainpic3.jpgசரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.

இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டுகளித்தனர்.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.

அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற்பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளிவீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது.

யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக்கென வைத்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர்.

நல்லை ஆதீனம் உட்பட ஆலய சூழலில் உள்ள அன்னதான மடங்களிலும் ஆலயங்களிலும், தனியார் வீடுகளிலும் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை மீள் பரிசீலனை செய்யக் கோரிக்கை

இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து ஏற்றுமதி அனுமதி பத்திரங்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவ படைகளினால், பிரிட்டனில் இருந்து விநியோகிக்கப்பட்ட எந்த ஆயுதங்கள் அல்லது உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை பிரிட்டிஷ் அமைச்சர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் காசாவில் 1300 பேர்கள் என்று மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நடவடிக்கைகளின் போதும், இஸ்ரேலிய சிப்பாய்களால், பிரிட்டனால் விநியோகிக்கப்பட்ட உபரணங்கள் அநேகமாக பயன்படுத்தப்பட்டன என்றும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – இலங்கை அணி 452 ஓட்டங்கள்

thilakarathna-dilshan.jpgநியூ ஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 452 ஓட்டங்களை பெற்றது. திலான் சமரவீர 159 ஒட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து சென்றார். அவர் இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ஆட்ட மிழக்காமல் 108 ஓட்டங்களுடன் ஆடிய ஜயவர்தன 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிடபோது ஆறு ஓட்டங்கள் அதாவது 114 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் சமரவீரவுடன் ஜோடி சேர்ந்த மெத்திவ் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பிரசன்ன ஜயவர்தன 7 ஓட்டங்களையும் பெற்றார். இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.

பந்துவீச்சில் மாட்டின், ஓப்ரையின், விட்டோரி தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சுக்காக  2 விக்கெட்டுக்களை இழந்து 87ஓட்டங்களை பெற்றது.

SCORECARD
SRI LANKA 1ST INNINGS
(overnight 293-3)
T. Paranavitana c McCullum b Martin    00
T. Dilshan b O’Brien      92
K. Sangakkara c Flynn b Martin     08
M. Jayawardene c Taylor b O’Brien   114
T. Samaraweera c Patel b Vettori   159
A. Mathews c McCullum b Vettori    39
P. Jayawardene c Flynn b Vettori    07
N. Kulasekara c McCullum b Martin    18
T. Thushara c O’Brien b Vettori                    00
M. Muralitharan c McCullum b Martin    08
A. Mendis not out      00
Extras: (b1, lb2, nb2, w2)     07
Total (all out, 117.4 overs)    452
Fall of wickets: 1-0 (Paranavitana), 2-16 (Sangakkara), 3-134 (Dilshan), 4-300 (M. Jayawardene), 5-386
Mathews), 6-408 (P. Jayawardene), 7-444 (Samaraweera), 8-444 (Kulasekara), 9-452 (Muralitharan), 10-452 (Thushara).

Bowling: Martin 23-5-77-4, O’Brien 21-1-125-2 (nb2, w1), Oram 7-1-25-0,
Vettori 37.4-9-78-4, Patel 24-3-120-0, Ryder 5-1-24-0 (w1). 

NEW ZEALAND 1ST INNINGS
T. McIntosh not out   36
M. Guptill b Thushara  24
D. Flynn b Mendis   14
J. Patel not out   06
Extras: (b4, nb3)   07
Total (for 2 wkts, 29 overs)  87
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn).
Bowling: Kulasekara 4-0-21-0, Thushara 8-1-29-1 (nb3), Mendis 11-3-26-1, Muralitharan 6-2-7-0.
 

தமிழருடன் அதிகாரப்பகிர்வை தவறவிட்டால் மீண்டும் வன்முறைகள் தோன்ற வழிவகுக்கும்

சிறுபான்மை தமிழ்மக்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறுமானால் வன்முறைகள் மீண்டும் ஏற்பட வழிவகுக்கும் என்று அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் எச்சரித்துள்ளார். அதிகாரப்பகிர்வில் தாமதம் காட்டுவதானது விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும் என்று பிளேக் பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் துரிதமாக மீளக்குடியேற்ற வேண்டும். இந்த விடயத்திலேயே அமெரிக்காவின் உதவி தங்கியுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களுடன் மட்டுமன்றி வெளியேயுள்ள தமிழர்களுடனும் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிகமிக முக்கியமானதாகும்.

தமிழ் சமூகத்தை அவர்கள் மேலும் அந்நியப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது. இது பிரிவினைகளை மேலும் அதிகரிக்கும். சிலசமயம் புலிகள் ஒழுங்கமைப்பை மேற்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். அதனால் இலங்கைத் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தையை இலங்கை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். நல்லிணக்க நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தவேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்த வேண்டும். இந்த இடம் பெயர்ந்த மக்களின் நிலைமைக்கும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கும் தொடர்பு உள்ளது. இடம் பெயர்ந்த மக்களை சாத்தியமான அளவுக்கு துரிதமாக மீளக்குடியமர்த்துவதென்ற தனது உறுதிமொழிக்கு அமைவாக இலங்கை செயற்படும் தன்மையிலேயே புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், ஜீவாதாரத்தை ஏற்படுத்துதல் என்பன வற்றுக்காக நாம் வழங்கும் நிதி தங்கியுள்ளது.

இரண்டாவதாக அரசியல் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு என்பனவற்றில் இலங்கை முன்னேற்றம் காணவேண்டும் என்றும் பிளேக் கூறியுள்ளார்.