Multiple Page/Post

அரசின் முக்கிய அரசியல் பிரமுகரை படுகொலை செய்யும் திட்டம் அம்பலம்

அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்த பெரும்பான்மை இன சர்வதேச நபர் ஒருவரை கொழும்பு பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.

தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் மேற்படி விசாரணைப் பிரிவினர் கடந்த 12ம் திகதி அந்நபரைக் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபரிடம் விசாரணை செய்தபோதே அவர் மேற்படி பெரும்பான்மை இன சந்தேக நபர் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் தோரணையில் செயற்பட்டுள்ளார். இவர் வேறொரு கொலைக்கும்பலின் கைக் கூலியாக முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்றுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பயங்கரவாதம், பாதாள உலகக் கோஷ்டி போன்றவற்றை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களைப் படுகொலை செய்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேற்படி சந்தேக நபர் அவ்வமைப்புகளின் ஒப்பந்தக்கார ராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந் நபரிடம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்நபர் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுவது தொடரும் விசாரணைகளுக்குத் தடையாக அமையலாம் என்பதால், விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முகாம்களில் உள்ள உறவினர்களை மீட்க இரண்டாயிரம் விண்ணப்பங்கள்

101009displacedidps.gifவவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள தமது உறவினர்களை மீட்டுச் செல்வதற்காக சுமார் இரண்டாயிரம் பேர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் வவுனியா செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக குறித்த செயலக தரப்புகள் தெரிவித்துள்ளன.

சச்சின் யோசனைக்கு பாக். ஆதரவு

ஒருநாள் போட்டிகளை 4 இன்னிங்ஸ் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறிய யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

20 ஓவர் போட்டிகளில் செல்வாக்கு காரணமாக ஒருநாள் போட்டிகள் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஆர்வத்தை ஏற்படுத்த மாற்றம் தேவை என்றும் 25 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்ஸ்களாக ஒருநாள் போட்டிகளை நடத்தலாம் என்றும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் யோசனை கூறியிருந்தார்.

இந்த யோசனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உள்நாட்டு போட்டி தலைவர் சுல்தான் ரானா, சச்சின் யோசனையை வரவேற்றுள்ளார்.

இந்த யோசனை மிகவும் சரியானது என்று கூறியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதித்தால் இந்த முறையில் ஒருநாள் போட்டிகளை சோதனை முறையில் நடத்திப் பார்க்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சச்சின் இந்த யோசனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலிக்க இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினரின் பதவி ஏற்பு விழா

வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நேற்று மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

இங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்ட எஸ். என். ஜி. நாதன் உட்பட உப தலைவர் மு. முகுந்தரதன், ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இ. சிவகுமாரன், செ. சுரேந்திரன், ஐ. கனகசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் லத்தீப் முனைவர் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

சம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே இலக்கு – யூனிஸ்கான் விருப்பம்

இங்கிலாந்தில் நடந்த 20 மூவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘சம்பியன்’ பட்டம் வென்றது.

தென்னாபிரிக்காவில் வருகிற 22 ஆம் திகதி தொடங்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கப்டன் யூனிஸ்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு கப்டனும் மனதில் சில இலக்குகளை வைத்து இருப்பார்கள். என்னை பொறுத்தமட்டில் வருகிற சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அல்லது 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெல்ல வேண்டும் என்பது இலக்காகும். இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் அவுஸ்திரேலியா சென்று விளையாட உள்ளோம்.

நாங்கள் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த போட்டித் தொடரில் அந்த குறையை போக்கும் நல்ல வாய்ப்பாகும் என்று நினைக்கிறேன் என்றார்.

சட்டவிரோத நிதி கம்பனிகள் மீது நடவடிக்கை : இலங்கை மத்திய வங்கி

central-bank-of-sri-lanka.jpgநாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் நிதி கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு 21 சட்டவிரோதமான நிதி கம்பனிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை குறித்த மதிப்பீடுகள் நீதி மன்றத்தில் சமரிப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மூவருக்கும் ஆயுட் தண்டனை

அமெரிக்க கண்டத்திற்கு செல்லும் விமானங்களை திரவ வெடிகுண்டுகள் மூலம் வெடிக்கச்செய்ய முயன்ற குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.  இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற நீதிபதி, இவர்களில் ஒருவர் ஆயுட்காலம் முழுமையும் சிறைக்குள்ளேயே கழிக்கவேண்டி நேரலாம் என்று கூறினார்.

இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமமான ஒரு அட்டூழியத்தை நடத்த இவர்கள் சதி செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.

இவர்களின் சதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப்பயணிகள் கொண்டு செல்லத்தக்க திரவங்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சதிச்செயல் அல்கயீதாவால் வழி நடத்தப்பட்டதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

வவுனியா நிவாரணக் கிராமம்: யாழ்ப்பாணத்துக்கு 500 பேர் நேற்று அனுப்பி வைப்பு

101009displacedidps.gifவவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து மேலும் 500 பேர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கதிர்காமர், இராமநாதன், அருணாசலம் மற்றும் வலயம் – 5 லிருந்து மீள் குடியேற்றத்துக்காக தெரிவு செய்யப்பட்டோரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக செய லகம் தெரிவித்தது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த சுமார் பத்தாயிரம் பேர் கடந்த வெள்ளிக்கிழமை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 6838 பேர் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே நேற்றும் மேலும் 500 பேர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக் களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளியன்று யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம் பாறை மாவட்ட மக்கள் 9994 பேர் தமது சொந்த இட ங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாநகர சபைக்கு மக்கள் நேற்று வரை ரூ.30 கோடி நிலுவை

கண்டி மாநகர சபை நிருவாக எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பலர் கண்டி மாநகர சபைக்கு நிலுவைப் பணமாக நேற்று (14) வரைக்கும் 30 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளனர். இதனை செலுத்த முன்வராத வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கண்டி மாநகர சபையின் பதில் மேயர் துமிந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி மாநகர சபையில் நேற்று (14) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். நீர் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாக கட்டணங்களுடனான வரி தொகைகளே இவ்வாறு மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளாகும்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க முன் இந்த 30 கோடி ரூபாவில் 50% சதவீதத்தை மக்களிடமிருந்து அறவிடுவதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கண்டி மரபுரிமை பிரதேசத்தை அலங்காரப்படுத்து வதற்கும் இந்நிருவாக பிரிவுக்குள் வசிக்கும் பொதுமக்களினது அடிப்படைத் தேவைகளுடன் மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே அரசுக்கு பணம் தேவைபடுகின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வட பகுதி மாணவர்களுக்கு 10 இலட்சம் பாடப் புத்தகங்கள் 10 கொள்கலன்களில் அனுப்ப கல்வி அமைச்சு ஏற்பாடு

150909sri-lankas-students.jpgவட பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 10 இலட்சம் பாடப் புத்தகங்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இவற்றை 10 கொள்கலன்கள் மூலம் இம்மாத இறுதிக்குள் வட பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

2010 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி முதல் இதுவரை 4.05 மில்லியன் ரூபா பெறுமதியான பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ, வடமேல், வடமத்தி மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றுக்கான பாடப் புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி வெளியீட்டுப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.