ஒருநாள் போட்டிகளை 4 இன்னிங்ஸ் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறிய யோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
20 ஓவர் போட்டிகளில் செல்வாக்கு காரணமாக ஒருநாள் போட்டிகள் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஆர்வத்தை ஏற்படுத்த மாற்றம் தேவை என்றும் 25 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்ஸ்களாக ஒருநாள் போட்டிகளை நடத்தலாம் என்றும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் யோசனை கூறியிருந்தார்.
இந்த யோசனைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உள்நாட்டு போட்டி தலைவர் சுல்தான் ரானா, சச்சின் யோசனையை வரவேற்றுள்ளார்.
இந்த யோசனை மிகவும் சரியானது என்று கூறியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதித்தால் இந்த முறையில் ஒருநாள் போட்டிகளை சோதனை முறையில் நடத்திப் பார்க்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
சச்சின் இந்த யோசனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலிக்க இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.