வட பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 10 இலட்சம் பாடப் புத்தகங்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இவற்றை 10 கொள்கலன்கள் மூலம் இம்மாத இறுதிக்குள் வட பகுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
2010 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி முதல் இதுவரை 4.05 மில்லியன் ரூபா பெறுமதியான பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ, வடமேல், வடமத்தி மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றுக்கான பாடப் புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கல்வி வெளியீட்டுப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.