Multiple Page/Post

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது – முன்னாள் அமைச்சர் பேரியல்

fer.jpgஇனங் களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அவர் நேற்று (24) பிற்பகல் சாட்சியமளித்தார்.கொழும்பு 7, ஹோட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பேரியல் அஷ்ரப், “முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களோடு சகவாழ்வுடன் வாழ தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம் மதத் தலைவர்களும் மெளலவிமார்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள்” என்று தெரிவித்ததுடன், கிழக்கில் காணாமற்போன முஸ்லிம் இளைஞர்களைக் கண்டறிந்துகொள்வதற்கு நல்லிணக்க ஆணைக் குழு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கிழக்கில் கலவரத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புலிகள் இல்லாதுபோனதன் பின்னர் திரும்பி வந்து தமது காணிகளைக் கோருகிறார்கள். எனினும் அவர்களின் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் தாம் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தபோது முஸ்லிம் என்பதால் தடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.

பேலியாகொடையில் 7 கோடி ரூபா கொள்ளை

கொழும்பு, பகுதிகளிலுள்ள தனியார் வங்கியொன்றில் டெலர் இயந்திரங்களுக்கு வைப்பு செய்வதற்காகக் கொண்டுசென்ற ஏழு கோடி ரூபா ஆயுதமுனையில் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நெஷனல் லொஜிஸ்டிக் செலிவிஷன் லங்கா தனியார் நிறுவனத்தினர் ஏழுகோடி ரூபாவை வாகனமொன்றில் எடுத்துச் செல்கையிலேயே இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30க்கும் 1.30க்கும் இடையே நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பேலியாகொடை பொலிஸ் பிரிவிலுள்ள அலுவாகேல்ல, தெகலபொத்த பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல தனியார் வங்கியொன்றின் டெலர் இயந்திரத்திற்கு பணத்தை வைப்புச் செய்யும் மேற்படி நிறுவனத்தின் வாகனத்தில் ஏழு கோடி ரூபாவையும் ஏற்றிக் கொண்டுவரும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் துப்பாக்கி முனையில் இந்த கொள்ளையை நடத்தியதாக பேலியா கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அச்சுறுத்திய கொள்ளையர்கள் வாகனத்தினுள் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த பண நோட்டுக் கட்டுகளை பொதிகளில் அடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு ள்ளதுடன், பேலியாகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவும், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை குறித்த தனியார் வங்கி நாட்டிலுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. கொள்ளையிடப்பட்ட பணத்தை வைப்பிலிட வரும் நபர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும், இவ்வாறு சந்தேகத்துக்கிடமான முறையில் எவரேனும் தென்பட்டால் உடனடியாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுக்கு மாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவை ரத்து செய்யுமாறு தவிகூ வி ஆனந்தசங்கரி கோரிக்கை

TULF Leader V Anandasangareeஅரசாங்க அதிபர் அவர்கட்கு            
கிளிநெச்சி

கிளிநெச்சி முத்தமிழ் விழா

அன்புடையீர்

தங்களின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்று நாட்களுக்கு கிளிநெச்சியில் முத்தமிழ் விழா நடைபெறவுள்ள செய்தி கிடைத்து திகைப்படைந்தேன். இந்நிகழ்ச்சியை உங்களுடன் தொடர்பு கொண்டு இரத்து செய்யுமாறு என்னிடம் பல மக்கள் கேட்டுள்ளனர். கிளிநெச்சி பொதுமக்களில் கணிசமானவர்கள், இது மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு உகந்த நேரம் அல்ல எனக் கூறி இவ்விழாவை இரத்துச் செய்யுமாறு கோருகின்றனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநெச்சியிலும் முல்லைத்தீவிலும் நடத்திய போது அவர்கள் முன் கூடி நின்ற பெரும் தொகை மக்கள் எனது கூற்றுக்கு சான்று பகர்வார்கள்.

மக்கள் தமது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைப்பற்றியும், காணாமல் போய் உள்ள உறவினர்களைப் பற்றியும் சொல்லண்ணாத் துயரில் இருக்கும் போது அவர்கள் எதுவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மேலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் சொல்லெணா கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு இன்றும் இருக்கின்றனர். அவர்களின் அனேகமான வீடுகள் கூரை அற்ற நிலையிலும், மனித சஞ்சாரத்துக்கு தகுதியற்றவைகளாகவே இன்றும் இருக்கின்றன். பிள்ளைகள் உள்ள குடும்பங்கள்  அதிகளவான  கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் உள்ள அவர்களுக்களுடைய உறவுகள் படும் கஸ்டமோ மிக மோசம்.

தயவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதில் உங்களுக்குள்ள கஸ்டங்களை அதிகரிகளுக்கு எடுத்துக் கூறி  இந் நிகழ்ச்சியை இரத்துச் செய்யவும். யாழ் மத்திய கல்லூரி அதிகரிகளுக்கும், திருமறை கலாமன்றத்தினருக்கும் எனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர் – தமிழர் விடுதலைக் கூட்டணி 

“புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இரகசியமான முறையில் தடுத்து வைக்கப்படவில்லை” – இராணுவப் பேச்சாளர் உபயமெதவல

புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் உட்பட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

 எழிலனும் மற்றும் புலிகளின் ஏழு சிரேஸ்ட உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும்  அவர்களை படையினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரனின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதெனவும் அவை படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

எழிலன் உள்ளிட்ட குழுவினர் படையினரிடம் சரணடையவில்லை எனவும், படையினர் இரகசிய தடுப்பு முகாம்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  வைத்திருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்கள் படையினரால் அச்சுறுத்தல், துன்பறுத்தல்களுக்கு ஆளாவதாகவும்,  நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொதுமக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில், அவசரகாலச்சட்டதை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘நமது ஈழநாடு’ அச்சகம் பொலிஸாரால் சீல் வைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் அச்சகத்திற்கு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது சுரபி அச்சகம் என்ற பெயரில் நடத்தி வந்த 62 வயதான சின்னத்துரை குருதேவ் என்பவரையும் பொலிஸார் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை கொழும்பிலிருந்து யாழப்பாணம் சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவினர் இவ்வசகத்திற்கு சீல் வைத்ததோடு அதனை நடத்தி வந்த குருதேவ் என்பவரையும் கைது செய்துள்ளனர். இவ்வச்சகம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸில் சேர்வதற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்!

Police_Logoபொலிஸ் பணியில் இணைந்து கொள்வதற்காக நான்காயிரத்திற்கும் அதிகமாக தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு விண்ணபித்தவர்களில் 340 பேர் பொலிஸில் இணைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சி நிறைவடைந்ததும் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைக்கமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

‘5000 தமிழ்ர்கள் பொலிஸ் படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்’ என்றும் அதன் முதற்கட்டமாக ஒரு தொகையினருக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் லண்டன் வந்திருந்த பா உ ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் (Sep 18 2010) தெரிவித்து இருந்தார்.

பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் வடக்க கிழக்கில் மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேர்க்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவர் எனவும், தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்படும் எனவும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

”மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை” கூட்டுறவுச் சங்கம்

Co-operavtive_Shop_Jaffnaமீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை எனக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உலருணவு நிவரணப்பொருட்கள் தாமதமடைவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை என கூட்டுறவுச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மீள்குடியேற்றப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படும் நிவாரண உணவுப் பொருட்கள் தாமதமாவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச்செயலகத்தின் பணிகள் தாமதம் காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்களுக்கு பட்டியல் வருவது தாமதமாகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிவு : 22 செப்ரம்பர் 2010

‘வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான உதவிப்பொருட்கள்  எவையும் கிடைப்பதில்லை’ – மக்கள் கவலை

வன்னியில் தற்பொது மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் உடனடித் தேவைகளுக்கான கூரைத்தகடுகள், தறப்பாள்விரிப்புகள் எவையும் வழங்கப்படுவதில்லை என மீள்குடியமர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மீள்க்குடியமரும் மக்களுக்கான நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதும் தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Co-operavtive_Shop_Jaffnaகிளிநொச்சிப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பலருக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நிவாரண அட்டைகள் பதிவு செய்யப்படும் இடங்களிலேயெ வழங்கப்பட்டு வருகின்ற போதும், நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படமலுள்ளதாகவும், கூட்டுறவச்சங்களுக்கு செல்லும் போது அதற்கான பட்டியல் தமக்கு வரவில்லை என நிவாரணப் பொருட்களை வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்து வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அமைச்சரை முற்றுகையிட்டதற்காக நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Tissanayakka_S_P கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவை முற்றுகையிட்டு தடுத்துவைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மாணவர்களை இரு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பொது. அவரை இம்மாணவர்கள் முற்றுகையிட்டு சில நிமிடங்கள் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் நேற்று கண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது. இவர்களை இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். புகிடிவதைச் சட்டத்தின் கீழ் இம்மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி ஜனவரி மாதம் ஆரம்பமாகும்

இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதமே ஆரம்பமாகும் என யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வதாற்கென நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் குழுவினர் இந்திய அசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

 நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் வருகை தந்த இந்தியக்குழுவினர் நேற்றுக்காலை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து வீட்டுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்திய அரசாங்கமே இந்த வீடுகளைக் கட்டித்தர வேண்டுமா? அல்லது அதற்கான நிதியை மட்டும் வழங்கினால் போதுமா? இது குறித்த மக்களின் கருத்து பற்றி இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரை வினவியதாகவும், யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்தமைக்கு இந்தியக் குழுவினர் இணக்கம் தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் மூன்று மாதங்களில் களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் மரண தண்டனை

24-teresa-lewis.jpgஅமெரிக்கா வில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.

தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுனருக்குப் அனுப்பப்பட்டன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.