புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் உட்பட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
எழிலனும் மற்றும் புலிகளின் ஏழு சிரேஸ்ட உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அவர்களை படையினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரனின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதெனவும் அவை படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
எழிலன் உள்ளிட்ட குழுவினர் படையினரிடம் சரணடையவில்லை எனவும், படையினர் இரகசிய தடுப்பு முகாம்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைத்திருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்கள் படையினரால் அச்சுறுத்தல், துன்பறுத்தல்களுக்கு ஆளாவதாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொதுமக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில், அவசரகாலச்சட்டதை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.