Multiple Page/Post

‘தாய்லாந்தில் நிலைமைகள் கட்டுப்பாட்டில்’

protest_afp.jpgதாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இராணுவத்தினருக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட பின்னணியில், தற்போது அங்கு நிலைமைகள் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அபிஷிட் வெஜஜிவா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அபிஷிட் அவர்கள் மறுத்தார். இராணுவத்தினர் வெறும் சத்த வெடிகளை மட்டுமே வெடித்ததாகவும் அவர் கூறினார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா அவர்களின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளுகளில், போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த போராட்டங்களை தாம் ஏற்பாடு செய்யவில்லை என்று தக்ஷின் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி நகரில் சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிப்பு

sri-lanka-police00.jpg நாவலப்பிட்டி நகரில் உள்ள பொதுத் தொலைபேசி நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  நாவலப்பிட்டி பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள தொலைபேசி நிலையத்திலேயே இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, இது வழமையாக போக்குவரத்து நெரிசலான பகுதி எனவும் தெரிவித்தார்.

தொலைபேசி நிலையத்துக்குள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று காணப்படுவதைக் கண்ட பயணி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குத் கொடுத்த தகவலையடுத்தே அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் குறிப்பிட்ட குண்டை மீட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிஸ்கட் டின் ஒன்றுக்குள் இந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் எடை 750 கிராம் எனவும் தெரிவித்த பொலிஸார், பெருமளவு போக்குவரத்து நெரிசலும் சன நடமாட்டமும் உள்ள வேளையில் இது வெடித்திருந்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு பின்னர் பொலிஸாரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. புதுவருடத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியும் குறிப்பாக பஸ் நிலையப் பகுதியிலும் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்த வேளையிலேயே இந்தக் குண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தையிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியில் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை வேண்டும் என்று அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை

caption.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களை சமாளிக்க கூடுதலான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வாரம் சோமாலிய நாட்டு கடற்பரப்பில் கடத்தப்பட்டு குறுகிய காலம் பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த பணியாளர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமை வேண்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று உயிர்காக்கும் படகில் இந்தக் கப்பலின் காப்டனை, பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த கடற்கொள்ளையர்கள் மூவரை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்று கடத்தப்பட்ட கப்பலின் தலைவரான ரிச்சர்ட் பிலிப்ஸஸை மீட்டனர்.

இவ்வாறு அவர் மீட்கப்பட்டது இன்னமும் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருக்கும் கடத்தப்பட்ட மற்ற கப்பல்களின் குழுவினர் குறித்த கரிசனையை அதிகரித்துள்ளது என்றும், வன்முறை சம்பவங்கள் மேலோங்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக மொம்பாசாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இதனிடையே கென்ய நாட்டு துறைமுகமான மொம்பாசாவில் செய்தியாளர்களை சந்தித்த கடத்தபட்ட மெர்ஸ்க் அலபாமா என்கிற கப்பலின் குழுவினர், எவவாறு கப்பல் மீட்கப்பட்டு என்பது தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் -பிரசாரம் இன்று ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு

india-election.jpgமக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும்  124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த இடங்களில் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரையில் ஐந்து கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் 16ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மொத்தம் 1,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 122 பேர் பெண்கள். இந்த தொகுதிகளில்  தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.  முதல் கட்டமாக, ஆந்திராவில் 22 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.சட்டீஸ்கரில் 11 தொகுதிகளிலும் ஒரிசாவில் 10, ஜார்கண்ட் 6, அசாமில் 3 தொகுதிகளிலும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதேபோல், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் ஜம்மு&காஷ்மீர், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒரு  தொகுதியிலும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   17 மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குபதிவு நடக்க உள்ள  124 தொகுதிகளில்  இன்று மாலை 5 மணியுடன்  பிரசாரம் முடிவடைகிறது.

மட்டக்களப்பில் தலைமறைவான 3 பொலிஸார் குறித்த தகவல்களைத் தந்துதவுமாறு மக்களிடம் வேண்டுகோள்

sri-lanka-police00.jpgமட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம், தலைமறைவாகியுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான தகவல்களைத் தந்து உதவுமாறு பொது மக்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்களான அகமது மீராசாகிபு அப்துல் ரஹீம் மற்றும் முகமது அலியார் நசார், பொலிஸ் கான்ஸ்டபிள் முகமது காசீம் அப்துல் ரசீத் ஆகியோர் தொடர்பாகவே தகவல்கைளத் தந்து உதவுமாறு பொது மக்களை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது

இது தொடர்பான அறிவித்தல் நேற்று ஒலி பெருக்கி மூலம் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுகளில் விடுக்கப்பட்டுள்ளது மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நீதிமன்ற வழக்கு சான்றுகளை மோசடி செய்தார்கள் என இவர்கள் மீது வழக்கு பதிவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நபர்கள் தற்போது தலைமறைவாகியிருப்பதாகவும் இவர்கள் தொடர்பான மறைவிடங்கள் பற்றிய தகவல்களைப் பொது மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

reoorters.jpgஇலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் 1738 பிரகடனத்தை இலங்கை அரசு மீறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாரிய அளவில் மனிதாபிமான சீர்குலைவும் யுத்தக் குற்றங்களும் வன்னியில் இடம்பெறும் நிலையில் சர்வதேச சமூகம் போர் நிறுத்தம் வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறது. சுதந்திரமான பத்திரிகையாளர்களின் பிரசன்னம் இல்லாத இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது வெட்கக் கேடான செயலாகும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கும் விடுதலைப் புலிகள் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இராணுவ வெற்றிகளை செய்திகளாக அரசு தருவதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் கூறுகிறது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயற்பட விடாமல் பொதுமக்கள் தகவல் அறியும் சுதந்திரத்திற்கு அரசு தடையாக உள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. எங்கே இரத்தம் சிந்தப்படுகிறதோ அங்கே பேனா மையும் சிந்தப்படவேண்டும் என்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் தம்முடன் சேர்ந்து பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறி ஒளிக்கதிர்கள் நாடெங்கும் வீசட்டும் – பிரதமர்

pm-srianka.jpgமக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி சமாதானத்தின் ஒளிக்கதிர்களை நாடுமுழுவதிலும் பரவச் செய்து பிறக்கும் சிங்கள, தமிழ் புத்தான்டினை ஏனைய காலங்களை விடவும் இம்முறை மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிய பயங்கரவாதமானது நிரந்தரமாக இல்லாதொழிவதைக் காண்பதே அனைத்து இலங்கைவாழ் மக்களினதும் பிரார்த்தனையாக அமைந்தது. உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இவ்வாறு கொண்டாடுவதற்கு வழியமைத்துத் தந்தவர்ள் எமது வீரமிக்க இராணுவத்தினரே. இவர்களின் உயிர்தியாகத்துடன் கூடிய பணியை சிறிதும் மறந்துவிட முடியாது. வீரமிக்க இராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்பிவிட்டு உறுதியற்ற அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள், இராணுவத்தினரின் மனைவி, மக்கள் அச்சமின்றி மன அமைதியுடன் இருப்பதற்குக் கிடைத்துள்ளமையானது இம்முறை புத்தாண்டின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.

பயங்கரவாதிகள் காட்டிய போலியான எல்லைகளில் சிக்குண்டு காணப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை உண்மையான முறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் பேதங்களின்றி அனைத்து மக்களும் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறந்ததொரு எதிர்காலத்தை அடைவதற்கான வழி பிறந்துள்ளது.

கிழக்கிலே பயிரிடப்பட்ட நிலங்களிலிருந்து சிறந்த அறுவடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பயிரிடாதுள்ள வடக்குப் பிரதேச நிலங்கள் நாளை பயிரிடும் நிலங்களாக மாறும். அப்போது மிகவும் செழிப்புள்ள நாடொன்றை வருங்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது சகலருக்கும் சமாதானம், மகிழ்ச்சி பொருந்திய இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

சுபீட்சம், புத்தெழுச்சி கொண்டுவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்

mahinda-rajapaksha.jpgநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான புதியதோர் உதயத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் எமது மக்களுக்கு சுபீட்சத்தையும் புத்தெழுச்சியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புது வருடத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மகிழ்ச்சிபொங்கும் இன்றைய தினத்தில் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் உள்ள எமது மக்கள் தேசம் முழுவதற்குமான ஒரு புதுவசந்தத்தை முன்னறிவிப்புச் செய்யும் புத்தாண்டின் மரபுகளை கடைபிடிக்கின்றனர். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுபட்டு சுதந்திரத்தை அனுபவிக்கும் கிழக்கு வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் சுதந்திர உணர்வோடும் சேர்த்து பால்பொங்கவைக்கும் தமது பாரம்பரிய மரபுடன் இப்புதுவருடத்தை வரவேற்கின்றனர். அதேபோன்று வடபகுதி மக்களும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சத்திற்கும் சுதற்திரத்திற்குமான சாதகமான அடையாளங்களை இப்புதுவருடத்தில் காண்பர்.

இப் புதுவருடம் எமது மக்களிடடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் மேலும் பலப்படுத்தி புதிய நம்பிக்கைகளை கொண்டுவரும் அர்த்தம் நிறைந்த பெருநாளாக இருக்கும். இது எமது அரசாங்கமும் எமது மக்களும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சமாதானத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அர்ப்பணிப்புகளின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது.

புலரும் புத்தாண்டு எமது தேசத்திற்கு சமாதானத்திற்கான புதியதோர் உதயத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதோடு உலகின் கெளரவத்தையும் நன்மதிப்பையும் எமது நாட்டுக்குக்கொண்டுவரும். எமது மக்கள் புதுவருடத்தின் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பேணுவதன் மூலம் ஏற்படுகின்ற ஐக்கியம், சகோதரத்துவம் என்பன நாட்டின் சுபீட்சத்திற்கு வழியமைக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பை மதித்து இம்முறை புதுவருடத்தை சம்பிரதாயபூர்வமாக பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய விடுமுறை தினமான இந்த புதுவருட பண்டிகைத் தினத்தில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினர். பொலிஸார் மற்றும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்!

சீனாவில் மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம்

சீனாவில் முதல் முறையாக அந்நாட்டின் அமைச்சரவை மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது இருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வலுப்படுத்தி மேலும் விரிவுபடுத்தவும், இனரீதியான் சிறுபான்மையினர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்களுக்கான இவ்வகையான உரிமைகள் கூடுதலாக கிடைக்கவும், இந்த இரண்டு ஆண்டு கால செயற்திட்டம் உறுதி பூண்டுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டத்தின்படி, அரசின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்கிற பயமில்லாமல், உள்ளளூர் அரச அமைப்புகளை விமர்சிக்க மேலோங்கிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. மேலும் காவல்துறையின் சித்திரவதை மற்றும் அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த செயற்திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகவே சீனாவின் கம்யூனிஸ அரசு அடிப்படை மனித உரிமைகளை விட, பொருளாதார சீர்திருத்தத்தையே முக்கியமாக கருதி முன்னெடுத்து வந்துள்ளது என்று சீனாவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வந்துள்ளனர்.

சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: அத்வானி

advanil000.jpgகேரளாவில் பிரசாரம் செய்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி காங்கிரஸ் தலைவர் சோனியா ‌தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். அத்வானி சோனியாவின் விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக ஜார்கண்டில் ‌பேசிய சோனியா, வெளியில் இருந்து வரும் பயங்கரவாதிகளை விட, உள்நாட்டில் இருக்கும் சில மதவாத சக்திகள் மிகவும் அபாயகரமானவை என கூறியிருந்தார்.

சோனியா யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் , அது பா.ஜ., வை குறிவைத்து பேசப்பட்டது என அத்வானி குற்றம் சாட்டினார். சோனியா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரது கருத்து குறித்து பொது விவாதத்துக்கு தயாராக வேண்டும் என கூறினார் அத்வானி . நான்காவது அணி குறித்து பேசிய அத்வானி அது சந்தர்ப்பவாத கூட்டணி என சாடினார்.