மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி சமாதானத்தின் ஒளிக்கதிர்களை நாடுமுழுவதிலும் பரவச் செய்து பிறக்கும் சிங்கள, தமிழ் புத்தான்டினை ஏனைய காலங்களை விடவும் இம்முறை மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதே எனது நம்பிக்கையாகும்.
பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதிப்பிற்கு உள்ளாக்கிய பயங்கரவாதமானது நிரந்தரமாக இல்லாதொழிவதைக் காண்பதே அனைத்து இலங்கைவாழ் மக்களினதும் பிரார்த்தனையாக அமைந்தது. உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இவ்வாறு கொண்டாடுவதற்கு வழியமைத்துத் தந்தவர்ள் எமது வீரமிக்க இராணுவத்தினரே. இவர்களின் உயிர்தியாகத்துடன் கூடிய பணியை சிறிதும் மறந்துவிட முடியாது. வீரமிக்க இராணுவ வீரர்களை போர் முனைக்கு அனுப்பிவிட்டு உறுதியற்ற அச்சத்துடன் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள், இராணுவத்தினரின் மனைவி, மக்கள் அச்சமின்றி மன அமைதியுடன் இருப்பதற்குக் கிடைத்துள்ளமையானது இம்முறை புத்தாண்டின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.
பயங்கரவாதிகள் காட்டிய போலியான எல்லைகளில் சிக்குண்டு காணப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை உண்மையான முறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் பேதங்களின்றி அனைத்து மக்களும் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறந்ததொரு எதிர்காலத்தை அடைவதற்கான வழி பிறந்துள்ளது.
கிழக்கிலே பயிரிடப்பட்ட நிலங்களிலிருந்து சிறந்த அறுவடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பயிரிடாதுள்ள வடக்குப் பிரதேச நிலங்கள் நாளை பயிரிடும் நிலங்களாக மாறும். அப்போது மிகவும் செழிப்புள்ள நாடொன்றை வருங்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.
பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது சகலருக்கும் சமாதானம், மகிழ்ச்சி பொருந்திய இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.