முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் நேற்று மாலை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் “இன்-லேன்ட்” கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.
கடிதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. கடித வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்.