Multiple Page/Post

பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலி அக்கரைப்பற்றில் சம்பவம்.

gun00.jpgஅக்கரைப் பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 4 மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சுபைர் பக்கீஸ்(வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 4 பொலிஸார் , 4 மாணவர்கள் உட்பட காயமடைந்துள்ள 11 பேர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா (09) இப்பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இரவு 10 .15 மணியளவில் அமைச்சர் தனது உரையை முடித்து விட்டு திரும்பிய பின்பு கலாச்சார நிகழ்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்ப டையினரும் கடமை முடிந்து அங்கிருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த போது பொலிஸ் கான்ஸ்டபிளொருவரின் தன்னியக்கத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக இது தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கைத் தமிழ் மக்கள் அவலம் குறித்து சர்வதேசத்திற்கு பொய் உரைப்பவர்கள் யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும், சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை அனுப்புவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா 7 ஆம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்;

அரசாங்கத்திற்கும், அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றது. சர்வதேசத்திற்கு நாம் பொய்யான தகவல்களை கொடுப்பதாக அமைச்சர் ஆதங்கப்படுகின்றார். என்ன பொய்யான தகவல்களை நாம் கொடுத்தோம் என்பதை அரசாங்கமோ, அமைச்சரோ கூறட்டும் பார்க்கலாம்.

யுத்த களத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றார்கள் என்பது பொய்யா? இன்னும் பலநூறு பேர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள் என்பது பொய்யா? யுத்தப் பிரதேசத்தில் உள்ள 1,50,000 மக்களுக்கு மாதக்கணக்கில் உணவுப் பொருட்களோ, மருந்துப்பொருட்களோ அனுப்பவில்லை என்பதும், அங்கு பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பொய்யா? இலங்கையின் குடிசனத்தில் ஒரு பகுதியாகிய வன்னித்தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் விமானக்குண்டு வீச்சாலும், பல்குழல் பீரங்கி வீச்சாலும் கொலை செய்கின்றதென்பது பொய்யா? கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை ஏறத்தாழ 3000 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 16,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதும் பொய்யா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அகதிகளாக்கி வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், இன்றும் அவை பூரணப்படுத்தப்படவில்லை என்பதும் பொய்யா? அகதி முகாம்கள் அனைத்தும் இராணுவ நிர்வாகத்திற்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்பதும் அந்த மக்களுக்கான சகலவிதமான ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல், கவனிப்பு இல்லாமல், நாளாந்தம் வயோதிபர்களும், குழந்தைகளும் உங்கள் நலன்புரி நிலையங்களில் இறக்கின்றார்கள் என்பதும் பொய்யா? இவற்றில் எதையாவது பொய்யென இலங்கை அரசு மறுக்கட்டும் பார்க்கலாம்.

மாறாக, ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் இருந்த வன்னிப்பிரதேசத்தில் 70,000 பேர் இருப்பதாக உலகம் முழுக்க பொய்யைக்கூறி 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடந்த 6 மாதத்துக்கு மேலாக பட்டினி போட்டவர்கள் யார்? 70,000 மக்கள் இருந்திருந்தால் 190,000 மக்கள் இன்று எப்படி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள். இன்னும் ஏறத்தாழ 150,000 மக்கள் புதுமாத்தளனில் இருப்பதாக நாங்கள் கூறுகின்றோம். 20,000 பேர் தான் இருப்பதாக நீங்கள் கூறுவதுடன், அவர்களுக்கு உணவோ, மருந்தோ அனுப்புவதுமில்லை.

நீங்கள் உருவாக்கிய பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய பீரங்கிகளையோ விமானக்குண்டு வீச்சையோ நடத்துவதில்லையென நீங்கள் கடந்த 27.04.2009 இல் அறிவித்தீர்கள். ஆனால் எப்போதாவது அதனை நிறுத்தியதுண்டா? ஒவ்வொரு நாளும் அப்பாவி மக்கள் மீது பாரிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது உண்மை இல்லையா? புலிகளை அழிக்கின்றோம், பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் உங்கள் யுத்தத்தில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களா இல்லையா?

யுத்தம் என்ற பெயரில், தமது சொந்தக்காணிகளில் மிகவும் வசதியாக, செழிப்பாக இருந்த மக்களை பீரங்கித் தாக்குதல்கள் மூலம் அவர்களை விரட்டியடித்தவர்கள் யார்? உங்கள் இராணுவம் இல்லையா? மக்களை விரட்டி வெறும் நிலங்களை கைப்பற்றுவதுதான் மக்களை விடுவிப்பதென்ற உங்கள் இலட்சணமா? வீடுகள், வாகனங்கள், பூமிகள், விளைநிலங்கள் என தமது அன்றாட வாழ்க்கையை யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்த மக்களை விரட்டியடித்து அகதிகளாக்கி, அவர்கள் எல்லாவற்றையும் இழந்து ஒருவேளை உணவுக்கு வரிசையில் நின்று தட்டேந்த வைத்தவர்கள் யார்? ஸ்ரீ லங்கா அரசாங்கம் இல்லையா?

இவ்வளவு மாத்திரம் அல்ல இதற்கு மேலும் ஆயிரம் தவறுகளை விட்டுக்கொண்டு, ஒரு இனத்தை அழித்துக்கொண்டு செயற்படும் நீங்கள், உண்மைகளை மறைத்து பொய்களையே பிரசாரமாக்கும் நீங்கள், பொய்யர்களா? அல்லது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பொய்யர்களா? நாங்கள் கூறுவது பொய்யாயின் சர்வதேச ஊடகவியலாளர்களை ஏன் அனுப்ப மறுக்கின்றீர்களா? நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையாயின் த.தே.கூட்டமைப்பை ஏனைய எதிர்க்கட்சிகளை ஏன் முகாம்களுக்கு அனுப்ப மறுக்கின்றீர்கள்? நீங்கள் செய்வதெல்லாம் சரியாயின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை முழுமையாக இங்கு இயங்க வைக்க ஏன் மறுக்கிறீர்கள்? யுத்த பிரதேசத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்ட நீங்கள் அவர்களை அனுமதிக்க ஏன் தயங்குகின்றீர்கள்? நீங்கள் உண்மை பேசுபவர்களாக இருந்தால் ஏன் இராணுவ இழப்புகள் தொடர்பான உண்மைகளை வெளியிட மறுக்கின்றீர்களா? யார் பொய் பேசுகின்றார்கள்? யார் உண்மை பேசுகின்றார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். உலகம் தீர்மானிக்கும்.

“அமைச்சரின் அடுத்த குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுக்கு சாதகமாக பேசுகின்றார்கள் என்பது’…

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக யார் பேசினாலும் உங்களுக்கு அவர்கள் புலியாகத் தான் தோற்றுவார்கள். பாராளுமன்றத்திலும் வெளியிலும் நீங்களும் உங்கள் ஆங்கில, சிங்கள ஊடகங்களும் அவ்வாறுதான் பிரசாரம் செய்கின்றீர்கள். புலிகளும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். நாங்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கிறோம். எனவே எங்கள் எல்லோரையும் நீங்கள் புலிகளாகத்தான் பார்ப்பீர்கள். புலிகளுக்கு முன்னர் இருந்த தமிழர் தலைவர் செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அவர்கள் இருந்த காலத்தில் உங்கள் கண்களுக்குப் புலிகளாகத் தான் தோற்றினார்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள் புலியாகப் பார்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. யுத்தத்தை நிறுத்துங்கள். மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்று கூறும் நாம் உங்களுக்குப் புலிகளாகத் தெரிகின்றோம். யார் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள் என்போர் உங்களுக்குத் நண்பர்களாகத் தென்படுகின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உங்களுக்குப் புலியாகத்தான் தெரியும்.

யுத்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மயான பூமியாக்கப்பட்டது மாத்திரமல்ல. தென்பகுதி பொருளாதாரமும் சீரழிந்துள்ளது என்பதை நாம் மாத்திரமல்ல சிங்கள மக்களும் அறிவார்கள். உலக வங்கியிடம் பல மில்லியின் டொலர்களுக்காக வரிசையில் நிற்பதையும் நாம் அறிவோம். இன்று உங்கள் பொளாதாரத்தை மீட்க பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பது போல தமிழரைக்காட்டி பிச்சையெடுப்பதையும் நாம் பார்க்கின்றோம். “ஆடு நனைகிறது என ஒநாய் அழுததாம்’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. தமிழ் மக்களின் துன்பம் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பேசும் போதும் எங்களுக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

எனவே, எங்களுக்காக நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிகள் என நம்பினால் அவர்களைப் பட்டினி போடாதீர்கள். அவர்களைக் கொல்லாதீர்கள், அவர்களை அகதிகளாக்காதீர்கள். அவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அவர்களது கடமைகளை அவர்களே செய்ய வழிவிடுங்கள். ஊடக அமைச்சர் என்பதற்காக தொடர்ந்து பொய் பேசாதீர்கள். ஏனைய அமைச்சர்களுக்கும் இது பொருந்துமென்றும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

vavuniyatents.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ மனிதநேய அமைப்புக்களுக்கு 8,000 மில்லியன் ரூபா நிதியுதவி

vanni-0001.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, தற்காலிக கூடாரங்கள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவியில் பெருந்தொகையான நிதியுதவி ஐக்கிய நாடுகள் உடனடி மத்திய நிதியத்திலிருந்து வழங்கப்பட்டிருப்பதுடன், உதவிவழங்கும் நாடுகள் பலவும் இதில் பங்களிப்புச் செய்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதநேய நிறுவனங்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அரசசார்பற்ற நிறுவனங்கள் தேசிய செயற்திட்டத்தின் கீழேயே செயற்படவேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளித்து எந்தவொரு அமைப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

குறிப்பிட்ட செயற்திட்டங்களுக்கே முதலில் முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டுமென கடந்த வியாழக்கிழமை தன்னைச் சந்தித்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமையையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.“செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்னர் அவர்கள் (அரசசார்பற்ற நிறுவனங்கள்) என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்” என அமைச்சர் கூறினார்.

புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் விஜயம்

saran.jpg முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

கடந்த காலங்களைப் போன்ற இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களைப் பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.

மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் செய்து கொடுத்திருந்தார்.

கம்பஹா மாவட்டத்தில் அம்பேபுஸ என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் 54 இளைஞர்களும் 41 யுவதிகளுமாக 95 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயது குறைந்த சிறுவர் சிறுமிகள் அதிகமுள்ளனர்.

இவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் கணனிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி என்பவற்றையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது பெண் பிள்ளைகளுக்கான புதிய உடுபுடவைகள், கைக்கடிகாரங்கள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைப் போராளிகள், இளைஞர், யுவதிகளின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கண்டி மாவட்டம் பள்ளேகல என்னுமிடத்தில் 800 இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பிஸ்கட் வகைகளையும் கையளித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளருமான சுசரித கம்லத், உங்களது கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். ஆனால் அதனை மறந்து எதிர்காலத்தில் உங்களது நல்வாழ்வுக்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தலிபான்களுக்கு எதிராக பாரிய படை நகர்வு; 143 பேர் பலி

w_news.jpgபாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 143 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த தகவலை இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார். தீவிரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் அப்பாவிகள் தப்பிச் செல்லும் வழிகளை அடைத்து வைத்து உள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 15 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஸ்வாட் பகுதியில் சண்டை நடப்பதால் அப்பாவி பொதுமக்கள் வீடுகளை காலிசெய்து விட்டு வெளியேறி வருகிறார்கள். ஏற்கனவே 5 இலட்சம் பேர் வெளியேறி விட்டனர். இப்போது மேலும் 2 இலட்சம் பேர் அந்த பகுதியை விட்டு வெளியேறி வருகிறாரகள். மேலும் 3 இலட்சம் பேர் வெளியேற தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் செயற்படும் தலிபான்களின் தலைவர் பைதுல்லா மஷ¤தைக் கைது செய்ய இராணுவம் கடும் முயற்சிகளை எடுத்துவருகிறது. அவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு சன்மானத் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தொகையை அமெரிக்கா வழங்கவுள்ளது. அரபு நாடுகளிலுள்ள ஏராளமானோரை புனிதப் போருக்கு அழைக்கும் பணிகளில் பைதுல்லா மெசூத் ஈடுபடுவதாக பாகிஸ்தான் உளவுத்துறை நம்புகின்றது. இதனால் இவரின் மறைவிடங்கள், நடமாட்டங்களுள்ள பிரதேசங்களைத் தெரிந்துகொள்வதில் இராணுவ உயர் மட்டம் ஆர்வமாயுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஸ்வாட் பகுதியில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க பாரிய இராணுவ நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்படியும் அரசாங்க அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குலகின் கைப்பிள்ளையான பாகிஸதான் அரசை அகற்றப் போவதாக தலிபான்கள் சூளுரைத்துள்ளனர். அமெரிக்க இராணுவமும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு உதவியளிக்கின்றது.

மதவாச்சி சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

sri-lanka-army.jpgஏ9 வீதியில் மதவாச்சி பிரதான சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸார் வேறு பகுதிகளுக்குத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலகவின் உத்தரவின் பேரில் இவர்களுக்கு இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து தென்பகுதிக்கு வருகின்ற வாகனங்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் அனுமதி பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் பல மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த புகாரையடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இவர்களின் இடமாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் புதியவர்கள் அவர்களின் இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடபகுதியில் இருந்து தெற்கு நோக்கி எந்த வாகனங்களும் வருவதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருவதனால் விசேட அனுமதி பெற்று வரவேண்டும். அதேபோல தெற்கில் இருந்தும் வடக்கு நோக்கி வாகனங்கள் செல்லவும் அனுமதி பெறவேண்டும்.

இந்த பாதுகாப்பு நடைமுறையை மீறி சில வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்படும் நிலையில் இனவாதம் பேசும் இடதுசாரிகள் தேர்தல் மேதினம் நடத்துகின்றனர்

mayday01.jpgஅகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்பட்டு கிடக்கிறது. இனவாதம் பேசியே சில இடதுசாரிகள் தம்மை தொழிலாளர்களது தோழனாக காட்டிக் கொண்டிருக்கின்றனர். வேதனக் குறைவால் தோட்டத் தொழிலாளர் பலர் வேதனைக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்து வரவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலை மையமாகக் கொண்டு சிலர் தேர்தல் மேதினம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம், வடக்கில் வாடுவோருக்கு உதவுவோமென இன்னொரு பகுதியினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த மக்களின் நிர்க்கதி நிலைக்கு காரணமானவற்றை களைந்தெறியவோ அதைப் பற்றி பேசவோ தொழிலாளர் தலைமைகள் பேசத்தயங்குவதும் மௌனிப்பதும் கவலைக்குரியதே. எனவே ஐக்கிய உணர்வோடு அவலங்களை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு நுவரெலியா கூட்டுறவுச் சங்க விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.

மலையக சோசலிச சக்திகளினதும் இடதுசாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் சார்பில் இடம் பெற்ற இம் மேதினக் கூட்டத்தை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை செங்கொடிச் சங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மௌனஞ்சலியும் செலுத்தப்பட்டது. செங்கொடிச் சங்க பொதுச் செயலாளர் ஒ.ஏ.இராமையா உரையாற்றுகையில்;

இலங்கையில் ஒருபக்கம் பொருளாதாரப்பிரச்சினை. மறுபுறம் யுத்தப் பிரச்சினை. இவ்விரண்டுமே இன்று சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. யுத்தம் முடிந்து விட்டதாக அரசு கூறுகிறது.வரலாறு காணாதளவு யுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கில் சோசலிச இயக்கம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுவும் அரசுக்கு ஆதரவான குழுவும் அங்குள்ளன. வடக்கில் இன்று காணப்படும் நிலை நாளை எமக்கும் வரலாம். இதனை மறந்த நிலையில்தான் மலையகத்தில் பலர் வரலாற்றுத் துரோகம் இழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

மலையகத்திலும் வடகிழக்கிலும் புதிய சோசலிச இயக்கம் உருவாக வேண்டும். எங்களது சக்தி உதிரியாக சிதறி இருக்காமல் அனைவரும் சேர்ந்து உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.  நாங்கள் நாட்டைப் பிரிக்கும் ஆதரவாளர் அல்ல. ஐக்கியப்பட்ட இலங்கையில் சமத்துவம் கோருகிறோம். தமிழர்கள் செறிந்து வாழுமிடத்தில் சுயாட்சியோடும் சுதந்திரத்தோடும் வாழவேண்டும். பொருளாதார நிலை அனைவரையும் பாதிக்கின்றது. எனவே அந்த வீழ்ச்சியிலிருந்து மீட்சி வேண்டும் என்றார்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தனதுரையில்;  உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற மார்க்சின் குரலை பலர் மறந்துவிட்டார்கள்.ஆனால் முதலாளிமார் மறக்கவில்லை.உலக முதலாளிகளே ஒன்றுபடுங்களென அவர்கள் அதனைப் பின்பற்றுகின்றார்கள். தொழிலாளர்களிடையே பிளவுகள், முதலாளிகள் ஐக்கியப்படுகிறார்கள். மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினை தீரவேண்டுமானால் சகல சங்கங்களும் ஒன்றுபடல் வேண்டும். ஒற்றுமை மூலம்தான் தொழிலாளியால் தலை நிமிர முடியும் என்றார்.

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.ஜோதிவேல் உரையாற்றுகையில்;  மறைந்துபோன இடதுசாரி இயக்கம் மலையகத்தில் மீண்டும் துளிர்விட இம்மேதினம் அடிகோலுகிறது. தோட்டத் தொழிலாளரின் அடிப்படை உரிமைகள் பல்வேறு வழிகளில் பறிக்கப்படுகிறது.பலவந்த வெளியார் குடியேற்றத்தால் காணிகள் பறிபோகின்றன. தோட்ட வைத்தியசாலைகளில் மருந்தில்லை. கொழுந்துக்கு விலை அதிகரிப்பில்லை. தோட்ட சேவையாளர்களுக்கு மனிதாபிமான ரீதியாக ஏழுபேர்ச்சஸ் காணி கூட வழங்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அரசு யுத்தத்தை காரணங்காட்டி தொழிலாளர்களை நசுக்கும் அதேவேளை, அமைச்சர்களது ஆடம்பர சொகுசு வாழ்வுக்கு வழி வகுக்கிறது. கேட்டால் யுத்தமென போலி முத்திரை ஒட்டப்படுகிறது என்றார்.

இக்கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் மரக்கறிக் தோட்டங்களும் சட்டரீதியாக அவர்களுக்கே உரித்தாக வேண்டும். பெருந்தோட்டங்களில் பெண்களே பெரும்பான்மையாக தொழில் புரிகின்றனர்.ஆனாலும் அவர்களுக்கு தகுந்த வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு உடை, மேலங்கி, தொப்பி, பாதணி உட்பட சீருடைகள் வழங்கப்பட வேண்டும்போன்ற தீர்மானங்களுடன் இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சர்வதேச உரோமர் கலாசார தினம்.( April 8: International Day of Roma ) – புன்னியாமீன்

international-day-of-roma.jpgஒவ் வொரு ஏப்ரல் மாதமும் 08ஆம் திகதி சர்வதேச உரோமர் கலாசார தினம் கொண்டாடப்படுகின்றது. உரோமர் கலாசாரம், உரோமப் பாரம்பரியங்கள்,  மற்றும் உரோமர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

20ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதிகளில்,  குறிப்பாக 1960களில் உரோம கலாசாரத்தைப் பேணுவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் பல இயக்கங்களும், அமைப்புகளும் அதிகளவில் உருவாகின. இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1971ஆம் ஆண்டில் லண்டனுக்கருகே ஓப்பிளிங்டன் Orpington    எனுமிடத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச உரோமானிய அமையத்தை International Romani Union (IRU),  உருவாக்கினர்.

1990ஆம் ஆண்டு போலாந்தில் உள்ள ‘செரொக்’ எனுமிடத்தில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச உரோமானிய அமையத்தின் International Romani Union (IRU),  கூட்ட முடிவின்படியே ஏப்ரல் 08ஆம் திகதி சர்வதேச உரோம கலாசார தினத்தை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

பொதுவாக இத்தினத்தை உரோம கலாசாரங்கள், உரோம பாரம்பரியங்கள்,  மரபுகள் என்பவற்றை வலியுறுத்தக்கூடிய வகையில் போட்டிகள்,  கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்பவற்றை நடத்தி இத்தினத்தை கொண்டாடுவர். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சோனியாவை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 220 பேர் கைது

06-sonia.jpgதேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னையில் இன்று நடைபெற்ற கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களில் 220 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.