பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 143 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த தகவலை இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார். தீவிரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் அப்பாவிகள் தப்பிச் செல்லும் வழிகளை அடைத்து வைத்து உள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 15 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.
ஸ்வாட் பகுதியில் சண்டை நடப்பதால் அப்பாவி பொதுமக்கள் வீடுகளை காலிசெய்து விட்டு வெளியேறி வருகிறார்கள். ஏற்கனவே 5 இலட்சம் பேர் வெளியேறி விட்டனர். இப்போது மேலும் 2 இலட்சம் பேர் அந்த பகுதியை விட்டு வெளியேறி வருகிறாரகள். மேலும் 3 இலட்சம் பேர் வெளியேற தயாராகி வருகிறார்கள்.
பாகிஸ்தானில் செயற்படும் தலிபான்களின் தலைவர் பைதுல்லா மஷ¤தைக் கைது செய்ய இராணுவம் கடும் முயற்சிகளை எடுத்துவருகிறது. அவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு சன்மானத் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தொகையை அமெரிக்கா வழங்கவுள்ளது. அரபு நாடுகளிலுள்ள ஏராளமானோரை புனிதப் போருக்கு அழைக்கும் பணிகளில் பைதுல்லா மெசூத் ஈடுபடுவதாக பாகிஸ்தான் உளவுத்துறை நம்புகின்றது. இதனால் இவரின் மறைவிடங்கள், நடமாட்டங்களுள்ள பிரதேசங்களைத் தெரிந்துகொள்வதில் இராணுவ உயர் மட்டம் ஆர்வமாயுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஸ்வாட் பகுதியில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க பாரிய இராணுவ நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்படியும் அரசாங்க அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்குலகின் கைப்பிள்ளையான பாகிஸதான் அரசை அகற்றப் போவதாக தலிபான்கள் சூளுரைத்துள்ளனர். அமெரிக்க இராணுவமும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு உதவியளிக்கின்றது.