முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
கடந்த காலங்களைப் போன்ற இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களைப் பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.
மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் செய்து கொடுத்திருந்தார்.
கம்பஹா மாவட்டத்தில் அம்பேபுஸ என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் 54 இளைஞர்களும் 41 யுவதிகளுமாக 95 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயது குறைந்த சிறுவர் சிறுமிகள் அதிகமுள்ளனர்.
இவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் கணனிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி என்பவற்றையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது பெண் பிள்ளைகளுக்கான புதிய உடுபுடவைகள், கைக்கடிகாரங்கள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைப் போராளிகள், இளைஞர், யுவதிகளின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கண்டி மாவட்டம் பள்ளேகல என்னுமிடத்தில் 800 இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பிஸ்கட் வகைகளையும் கையளித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளருமான சுசரித கம்லத், உங்களது கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். ஆனால் அதனை மறந்து எதிர்காலத்தில் உங்களது நல்வாழ்வுக்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.