Multiple Page/Post

இலங்கையில் மனிதப்பேரவலத்தை கண்டித்து மலேசியாவில் இன்று பெரும் பேரணி

இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்து வரும் மனிதப் பேரவலத்தை கண்டித்து மலேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.  இது தொடர்பாக மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உலகின் எந்த மூலையிலும் நடந்திராத அளவிற்கு மிகக்கொடுமையான மனித பேரவலத்தைச் சந்தித்து நிற்கின்றது வன்னிப்பெரு நிலம். வன்னி நிலம் எங்கும் ஓடி ஓடி ஒதுங்கி கடைசியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவதுடன், அனைத்துவிதமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கொண்டு இப்படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கண்மூடித்தனமான தாக்குதல்கள் மூலம் அப்பாவி மக்களை அச்சுறுத்தி அவர்களை ஆண், பெண், வயது முதிர்ந்தோர், நோயாளர்கள், குழந்தைகள் வேறுபாடின்றி கொன்று குவித்து உளவியல் ரீதியாகவும் உணவு, மருந்து தடைகள் மூலம் அவர்களைத் துன்புறுத்தி வருகின்றது. நூறு, இருநூறு என்றிருந்த கொல்லப்படுவோரின் எண்ணிக்கை இன்று ஆயிரம், இரண்டாயிரம் என உயர்ந்து நிற்கின்றது.

இத்தனை இன்னல்கள் அனுபவிக்கும் அந்த மக்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். உலகு எங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உறவுகள். புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர்.

வீதி தோறும் முக்கிய அலுவலகங்கள் தோறும் தூதரங்கள் தோறும் பேரணியாய் அணிதிரண்டு நிற்கின்றனர். உணவு துறந்து, வீடு வாசல்கள் துறந்து வீதியே வாழ்வு என முழங்கி முழங்கி போராடுகின்றனர்.  நாமும் தமிழர்கள் தான். நாம் என்ன செய்கிறோம்? அங்கு சாகின்ற அந்த உறவுகளுக்கு தமிழர்கள் என்ற முறையிலும் மனித நேயம் மிக்கவர்கள் என்ற முறையிலும் என்ன செய்யப் போகிறோம்?

நமது தொடர் முயற்சியாக நாளை (இன்று) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் இலங்கைத் தூதரகத்திற்கு முன் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தமிழர்களுக்கு இந்த பேரணி நடைபெறவில்லை. சாவின் விளிம்பில் இரத்தக் களரியில் செத்துக்கொண்டும் உறவுகளைக் காப்பதற்கு கூடுகின்ற பேரணி இது.

இன்றைய இக்கட்டான நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல் மிகத் தேவையானதாய் இருக்கின்றன. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இம்மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதம் இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.  தமிழர்களின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நமது உறவுகள் கொன்று குவிக்கப்படுவதை எதிர்த்து பேரணியாய் வீதியில் அணிதிரள வேண்டும்.

மனிதக் கேடயங்களாக தமிழ் மக்களைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு எமது கூடியபட்ச கண்டனத்தை வெளிப்படுத்த வரலாறு காணாத பேரணியாய் ஒன்றிணைவோம் என ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இன்றும் நாளையும் 25வது முதலமைச்சர்கள் மாநாடு

25th-cm-con.jpgமட்டக்களப்பில் இன்றும், நாளையும் (15,16) நடைபெறவுள்ள 25வது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென எட்டு முதலமைச்சர்களும் இன்று (15) மாலை மட்டக்களப்பு நகரை வந்தடையவுள்ளனர். (16) நாளை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜலால் டி சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித விஜியமுனி சொய்சா, வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் இன்று மாலை உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்து மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். இம்மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளவென அழைக்கப்பட்டிருந்த மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் நேற்று மாலை மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.

இம்மாநாட்டிற்கென குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கென இன்று இராப்போசனமொன்று கிழக்கு மாகாண முதல மைச்சரினால் வழங்கப்படவுள்ளது.

நேற்று உணவுப் பொருட்களை இறக்க முடியாமல் ஐசிஆர்சி கப்பல் திரும்பியது

green-ocean2.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் போர்ப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கென உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான உக்கிர மோதல்கள் காரணமாக அவற்றை அங்கு கரையிறக்கமுடியாமல் போனதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

கிறீன் ஓசியன் என்ற கப்பலில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிவருவதற்காக மூன்று தினங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும் போர்ச்சூழல் காரணமாக அந்த முயற்சி நேற்றும் கைகூடவில்லை எனவும் சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

கிறீன் ஓசியன் கப்பலில் 25 மெட்றிக்தொன் உணவுப் பொருட்களும், ஓரியன்டல் பிரின்ஸஸ் என்ற கப்பலில் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 500 மெட்றிக் தொன் உணவுப் பொருட்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் கொடியுடன் கடற்படையின் பாதுகாப்புடன் நேற்று காலை முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் கரையோரப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் மோதல்கள் காரணமாக கப்பல்கள் இந்த உணவுப் பொருட்களை கரையிறக்கமுடியாமல் போனதாக சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

அதிகூடிய மின் அழுத்தமே மின் துண்டிப்புக்கு காரணம் – மின்வெட்டு நடைமுறைக்கு வராது

wdj-senavi.jpgநீர் மின் உற்பத்தி குறைந்துள்ள போதும் எக்காரணம் கொண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன அறிவித்துள்ளார்.

மேலதிக மின் அழுத்தம் காரணமாக நேற்று முன் தினம் (13) இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதையடுத்து நீர் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

அதனால் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோருகிறோம். இதன் மூலம் 30 வீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். நீர் மின் உற்பத்தி குறைந்த போதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறினார். இதேவேளை தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அமைச்சர், மின்சார சபை உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நேற்று முன்தினம் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார சபை மின்வெட்டை அமுல்படுத்தவில்லை எனவும் அதிகூடிய மின் அழுத்தத்தினாலேயே மின்சாரம் தடைப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.

அரசு கூறுவதற்கும் புதிய செய்மதிப் படங்களுக்கும் இடையில் முரண்பாடு – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிப்பு

மோதல் பகுதியில் சனச் செறிவுள்ள இடங்களில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று அரசாங்கம் கூறுவதற்கும் புதிய செய்மதிப்படங்களும் கண்கண்ட சாட்சியங்களும் தெரிவிப்பதற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.

மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மீதான ஷெல் தாக்குதல் இடம்பெறுவதை அண்மைய செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களும் வெளிப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்திருக்கிறார். பொதுமக்களைப் பயன்படுத்துவதில் இலங்கை இராணுவமோ புலிகளோ தயக்கம் காட்டுவதாகத் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச்சங்கமானது மோதல் வலயத்தின் செய்மதிப் புகைப்படப் பிரதிகள் தொடர்பான பூர்வாங்க ஆய்வறிக்கையை செவ்வாய்க்கிழமை பிரசுரித்திருக்கிறது. அது கனரக ஆயுதங்களைப் பாவித்ததால் ஏற்பட்ட குறிகளையும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பாவித்த கட்டமைப்புகள் அகற்றப்பட்டவற்றையும் காட்டுகிறது. மே 6 இற்கும் மே 10 இற்கும் இடையில் சாட்டுகிறது. மோதல் வலயத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பதையும் செய்மதிப்படம் காட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீண்டும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக மீண்டும் மீண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருப்பதாகவும் சனச் செறிவுடைய இடங்கள் மீது இலங்கைப் படையினர் ஷெல் தாக்குதல்களை எழுந்தமானதாக நடத்துவதாகவும் சாடியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமென உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கையின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாக அவசரமாக ஆராயப்பட வேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

ரணிலின் ஆளுமை பற்றி உலகு அறிந்திருப்பதாலேயே ஐரோப்பிய ஒன்றியம் அவருக்கு அழைப்பு

ranil-wickramasinghe.jpgஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பையேற்றே ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவரின் செயற்பாடுகள் காரணமாகவே அவரை உலக நாடுகள் வரவேற்கின்ற நிலையில் மீண்டும் அவர் மீது சேறுபூசும் நடவடிக்கையில் அரச ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுப்பயணம் குறித்து அரச ஊடகங்கள் சேறுபூசும் பழைய பல்லவியில் இறங்கியுள்ளனர். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அங்கு சென்றுள்ளார்.

நாட்டின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்குக் காரணம் எங்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அல்ல. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சமயம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட்டதே இன்று அவரை அழைப்பதற்கான காரணமாகும்.

இவ்வாறு உலக நாடுகளின் அழைப்பையேற்று ரணில் விக்கிரமசிங்க செல்லும் போது அவர் நாட்டுக்கு துரோகம் இழைக்கவும் காட்டிக்கொடுக்கவும் போயுள்ளதாக வீண் பழிகள் சுமத்துகின்றனர். அவர் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அரச தரப்பினர் தமக்கு இவ்வாறான அழைப்பு விடுக்கப்படாதன் வேதனையாலேயே இவ்வாறு அவர் மீது சேறுபூசுகின்றனர். நாட்டை நன்கு நிர்வகித்து ஆளக்கூடிய தகைமை அவரிடம் உள்ளதனை ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் தெரிந்து வைத்ததன் நிமித்தமே அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அவரது காலத்திலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு நாட்டில் சமாதானம் நிலவியதை முழு உலகமும் அறிந்ததன் நிமித்தமே உலக நாடுகள் இவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.

இடம்பெயர்ந்த வன்னி சிறார்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

vavuniyatents.jpgவன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கைதடி, ஆதரவற்ற சிறுவர் இல்லம், கைதடி சித்த ஆயுர்வேதக் கல்லூரி விடுதி, பனை அபிவிருத்திச்சபை ஆராய்ச்சி நிலையங்களில் தங்கிவாழும் சிறார்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பதினெட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இச்சிறார்களுக்கான கல்விச் செயல்பாடுகளை ஆரம்பிக்க சிறுவர் நிதியம், யுனிசெவ் ஆகியன இந் நிலையங்களுக்கு அருகில் தற்காலிக வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளன.

நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் இச்சிறார்களுக்கான கற்பித்தலில் ஈடுபடுவர். தென்மராட்சிக் கல்வி வலயம் இச் சிறார்களுக்கான பாட நூல்களையும், யுனிசெவ் இவர்களுக்கான சீருடை, கல்வி உபகரணங்களையும் வழங்கவுள்ளன.

முசலி 2ம் கட்ட மீள்குடியேற்றம் அடுத்த வாரம் ஆரம்பம்

images-house.jpgஇரண்டாம் கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்தது. முற்கட்டமாக முசலி, சவேரியர்புரத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 409 பேர் மீள்குடியேற்றப்பட்டனர்.

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் கடந்த 11ம் திகதி நடைபெற இருந்த போதும் இறுதி நேரத்தில் அந்த நடவடிக்கை பின்போடப்பட்டது. இதன்படி, 148 குடும்பங்களைச் சேர்ந்த 555 பேர் அடுத்த வாரம் மன்னார் முசலியில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். ஏனைய மக்களும் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட உள்ளதோடு டிசம்பர் 31ம் திகதியாகும் போது 80 வீத மீள்குடியேற்றங்களை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அதிகாரசபை சட்டமூலம் மத்திய மாகாண சபையில் நிறைவேறியது

உள்ளூராட்சி அதிகாரசபை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் மத்திய மாகாணசபையில் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. செவ்வாய்க்கிழமை பள்ளேகல மாகாணசபை மண்டபத்தில் மத்திய மாகாணசபையின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஆளும் ஐ.ம.சு.மு. யுடன் இ.தொ.கா. உறுப்பினர்கள் மூவர் இணைந்து வாக்களித்தனர். சிங். பொன்னையா, எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோரே ஆதரித்து வாக்களித்தனர். இ.தொ.கா.வை சேர்ந்த மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் சமூகமளிக்கவில்லை.

ஐ.தே.க.வுடன் இணைந்து எஸ். இராஜரட்ணம், எஸ்.சதாசிவம், கணபதி கனகராஜ், எஸ். உதயகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.மர்ஜான் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

தமிழ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் பிரதிகள் வாசிக்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி உள்ளூராட்சி சபை சட்டதிருத்தத்தினை ஒத்திவைத்துள்ளதாலும் இவ்விவகாரத்தை நடத்தும் அவசியமில்லை எனவும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் போது இவ்விவாதத்தினை நடத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.பீ. திஸாநாயக்க முதலில் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதன் அவசர தேவைபற்றி 14 நாட்களுக்குள் அறிவிக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு ஆளுநர் முறைப்படி சபையின் ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவித்துள்ளார். மே 5 ஆம் திகதி கூட்டத்தில் இப்பிரேரணை கொண்டுவரப்பட்ட போது தமிழ் பிரதி வழங்கப்படவில்லை என்பதால் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை மட்டும் ஆராய்ந்து விவாதிக்கலாம். மத்திய அரசு திருத்தங்கள் மீண்டும் கொண்டுவரும் போது நாம் மீண்டும் கூடி விவாதிக்கலாம் என்றார்.

யாழ்.இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு விழாவும் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்பு விழாவும்

books.jpgயாழ்.  இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 20062007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு கலாநிதி கே.குணராசா தலைமை தாங்குவார். நிகழ்வில் ஆசியுரைகளை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஆறு.திருமுருகன், திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆகியோரும் வழங்குவார்கள். நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவர் பி.கிரிதரன் கலந்து கொள்வார். இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்புரையை பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்குவார்.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டு :ஆய்வு: “மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்’ பேராசிரியர் எஸ்.சத்தியசீலன், நாவல்: “உதயக்கதிர்கள்’ திக்குவல்லை கமால், சிறுகதை: “இளங்கோவின் கதைகள்’ இளங்கோ, கவிதை: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, காவியம்: “திருநபி நாயகம்’ ஜின்னா ஷெரிப்புத்தீன், சிறுவர் இலக்கியம்: “உதவும் உள்ளங்கள்’ கவிஞர் மண்டூர் தேசிகன், சமயம்: “இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்’ டாக்டர் எஸ்.சிவசண்முகராசா, பல்துறை: “தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால.சிவகடாட்சம், மொழிபெயர்ப்பு: தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.

2007 ஆம் ஆண்டு பிரசுரமானவற்றில் பரிசுக்குரியவையாக தெரிவு செய்யப்பட்டவை:

ஆய்வு: “தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல்’ மருதூர் ஏ.மஜீத், நாவல்: “மீண்டும் வருவேன்’ செங்கை ஆழியான், சிறுகதை: “வரால் மீன்கள்’ எம்.எஸ்.அமருல்லா, கவிதை: “இரண்டு கார்த்திகைப் பறவைகள்’ எஸ்.புஷ்பானந்தன், காவியம்: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, நாடகம்: “அரங்கப்படையல்கள்’ கலாபூஷணம் க.செல்லத்துரை, சிறுவர் இலக்கியம்: “மரம் வெட்டியும் இரு தேவதைகளும்’ ஓ.கே.குணநாதன், சமயம்: “வெளிச்சத்தின் வேர்கள்’ தமிழ்நேசன், பல்துறை: “பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை’ கலாநிதி செ.யோகராசா, மொழிபெயர்ப்பு: “பிளேக் கவிதைகள்’ வைரமுத்து சுந்தரேசன்.

பரிசு பெறும் வெளிமாவட்ட எழுத்தாளர்களுக்கு விழாக் குழுவினர் இலவச தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

மற்றுமொரு நிகழ்வாக கனக.செந்தி கதாவிருது பெற்ற சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவும் இடம்பெறும். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார். முதற் பிரதியை அ.த.கிருஷ்ணசாமி பெற்றுக் கொள்வார்.

இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகளுக்காக பரிசும் பாராட்டும் பெறும் சிறுகதை எழுத்தாளர் விபரங்கள் வருமாறு: (இக்கதைகள் ஜூன் 2007 முதல் ஜூலை 2008 வரை பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன)

“வைகறை மேகங்கள்’ கந்தர்மடம் தி.மயூரன் (தினக்குரல் 22.06.2007), “இது ஒரு அழிவுக்காலம்’ ஆரையம்பதி ஆ.தங்கராசா (தினக்குரல் 21.10.2007), “சகுனங்கள்’ கனகாம்பிகை கதிர்கான் (வீரகேசரி 21.10.2007), “மதமாற்றம்’ கே.ஆர்.டேவிட் (தினக்குரல் 06.01.2008), “பள்ளிக்கூடம்’ மட்டுவில் ஞானகுமரன் ஜேர்மனி (வீரகேசரி 02.03.2008), “பெரியத்தான்’ சந்திரகாந்தன் முருகானந்தன் (தினக்குரல் 02.03.2008), “அதுவும் சரிதான்’ மா.பாலசிங்கம் (தினக்குரல் 23.03.2008), “வேடத்தனம்’ மல்லிகை சி.குமார் (தினக்குரல் 30.2.2008) “வாழத்துடிக்கும் இதயங்கள்’ ந.பாலேஸ்வரி (தினக்குரல் 22.06.2008), “அதிசயம்’ தேவகி கருணாகரன் அவுஸ்திரேலியா (வீரகேசரி 20.07.2008), “ஒப்பாரி கோச்சி’ மு.சிவலிங்கம் (வீரகேசரி 13.07.2008), “துயரம் தோய்ந்த பயணத்திலே’ எஸ்.டேவிட் (தினக்குரல் 20.07.2008), “அகதிமணம்’ வெள்ளை மணாளன் (தினக்குரல் 06.03.2008), “யாதும் ஊரே’ செ.குணரத்தினம் (வீரகேசரி 27.07.2008).

மற்றுமொரு நிகழ்வாக நாவேந்தன் விருது வழங்கல் 2007, சிறுகதை தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. பரிசளிப்புரையை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் நிகழ்த்துவார். பரிசுக்குரியவர்களாக “இன்னொரு புதிய கோணம்’ கலாபூஷணம் தெணியான், “வற்றாத நதி’ செங்கை ஆழியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பரிசினை வைத்திய கலாநிதி த.சிவானந்தன் வழங்கவுள்ளார். நன்றியுரையை திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்துவார்.