ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பையேற்றே ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவரின் செயற்பாடுகள் காரணமாகவே அவரை உலக நாடுகள் வரவேற்கின்ற நிலையில் மீண்டும் அவர் மீது சேறுபூசும் நடவடிக்கையில் அரச ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுப்பயணம் குறித்து அரச ஊடகங்கள் சேறுபூசும் பழைய பல்லவியில் இறங்கியுள்ளனர். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அங்கு சென்றுள்ளார்.
நாட்டின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்குக் காரணம் எங்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அல்ல. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சமயம் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்பட்டதே இன்று அவரை அழைப்பதற்கான காரணமாகும்.
இவ்வாறு உலக நாடுகளின் அழைப்பையேற்று ரணில் விக்கிரமசிங்க செல்லும் போது அவர் நாட்டுக்கு துரோகம் இழைக்கவும் காட்டிக்கொடுக்கவும் போயுள்ளதாக வீண் பழிகள் சுமத்துகின்றனர். அவர் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அரச தரப்பினர் தமக்கு இவ்வாறான அழைப்பு விடுக்கப்படாதன் வேதனையாலேயே இவ்வாறு அவர் மீது சேறுபூசுகின்றனர். நாட்டை நன்கு நிர்வகித்து ஆளக்கூடிய தகைமை அவரிடம் உள்ளதனை ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் தெரிந்து வைத்ததன் நிமித்தமே அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அவரது காலத்திலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு நாட்டில் சமாதானம் நிலவியதை முழு உலகமும் அறிந்ததன் நிமித்தமே உலக நாடுகள் இவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.