Multiple Page/Post

திருமலையில் பெருமளவு ஆயுதம் மீட்பு

gun.jpg
திருகோணமலையில் வெவ்வேறு இடங்களிலிருந்து கடந்த சனிக்கிழமை பெருந்தொகை வெடிப்பொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாரும் படையினரும் நேற்று தெரிவித்தனர்.

கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் எனும் பகுதியிலிருந்து 126- ரி 56 துப்பாக்கி ரவைகள் 01- மெக்சின், 01- சயனைற் குப்பி, 04- கிரனேற் கைக்குண்டுகள் ஆகியன கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை சனிக்கிழமை மாலை கிண்ணியாவிலிருந்து படையினரால் 01-ரி 56 துப்பாக்கி, 04-மெகசின்கள், 127- ரி 56 ரவைகள், 15 – டெட்டனேட்டர்கள், 02- டெட்டனேட்டர் கோட்கள், 02- கண்ணி வெடிகள், 05- அமுக்க வெடிகள், 02- ரிமோட்கள், 02- மின்கலங்கள், 02- சயனைற் குப்பிகள், 03- கிரனேற்றுகள், 02- கிளேமோர்கள் ஆகியன படையினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

பிரபாகரன் தலைமையில் போர் எழுச்சி பெறும் – திருமாவளவன்

Eelamவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், சிங்கள வெறியர்களின் அடக்கு முறை, இன வெறி போன்ற காரணங்களால் தமிழ் ஈழப்போர் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும்.

தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன: நெடுமாறன்

Pirabakaran_V விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து செல்வராசா பத்மநாதன் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை மற்றும் செய்தி நம்பகத்தன்மையற்றது. அதை யாரும் நம்ப வேண்டாம் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் பன்னாட்டு செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாபன் பெயரில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாபன் கடந்த 19.5.09 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன்நிலையை மாற்றிக்கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத் தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத்தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்படியான அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையில் சிங்கள போர்ப்படையின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள போர்ப்படை முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலை வெறித் தாக்குதலைச் சிங்கள போர்ப்படை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.பிரபாகரன் எந்த லட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும், தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு லட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும் என்று கூறியுள்ளார்.

வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல் நடத்துவது பற்றி இன்று விசேட கலந்துரையாடல்

north_.jpgமுற்றாக விடுவிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இக்கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,  வட மாகாணத்தில் யாழ். மாநகர சபை உட்பட 32 உள்ளுராட்சி சபைகளுக்கு விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கனரக ஆயுதங்களின் பாவனைக்கான சான்றுகளை காணவில்லை: பான் கீ மூன்

bankeemoon.jpg இலங்கைக்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்: கனடா

kathir-camp.gifஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றிக் கிடைப்பதையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று கனடா குரல் கொடுத்துள்ளது.

கனேடிய வெளியுறவு அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில், சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், சுயவிருப்பத்தோடு தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பும் மக்கள் கூடிய விரைவில் திரும்ப இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கனேடிய அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதிகளுக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கனேடிய அமைச்சர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்:டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்

ipl-2009-01.jpg
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை (24.05.2009) இரவு நடைபெற்ற, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில்  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த மாதம் 18 ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய 2 வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்று நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த முறை 7 வது இடம் பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கடைசி (8 வது) இடம் பெற்ற ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் நேற்றைய இறுதிப் போட்டியில் மோதியது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. கிப்ஸ் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்னுடனும், ஹாரிஸ் 5 பந்துகளில் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய, அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அமர்வு இன்று ஜெனீவாவில் – அமைச்சர் மஹிந்த சமரசிங்க பங்கேற்பு

mahinda_samarasinghe.jpgஇலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசேட அமர்வில் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (25) கலந்துகொள்கின்றனர்.

ஜெனீவாவில் நடைபெறும் இவ்விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனீவா புறப்பட்டுச் சென்றனர். ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்கவும் இந்த அமர்வில் கலந்துகொள்ளவிருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்புரிமை நாடுகளுக்கு விளக்கமளிப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக இவ்வமர்வு அமைந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 48 உறுப்புரிமை நாடுகளுள் விசேட அமர்வொன்றைக் கூட்டுவதற்கு மூன்றில் ஒன்று அதாவது ஆகக் குறைந்தது 16 நாடுகளின் கையொப்பங்கள் தேவை. கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஆர்ஜன்டீனா, பொஸ்னியா, சிலி, பிரான்ஸ், நெதர்லாந்து, மெக்சிகோ, மொரீஷியஸ், சுவிற்சர்லாந்து, உருகுவே உள்ளிட்ட 17 நாடுகள் கேட்டுக்கொண்டதற்கமைய ஜெனீவாவில் இன்று (25) இலங்கை விவகாரம் தொடர்பிலான விசேட அமர்வு நடத்தப்படுகிறது.

இந்த அமர்வில் பங்குபற்ற எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நாம் சாதகமாக பயன்படுத்துவோம். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளுக்கும் விளக்கிக் கூறுவதன் மூலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீளக்குடியமர்த்துவதற்கும் மோதல் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அந்நாடுகளின் உதவிகளை பெறுவோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

ஐ.நா.தலைமைச் செயலரை சந்திக்க அனுமதி மறுப்பு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

sureshpremachandran.gifஇலங்கை வந்திருந்த ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களைச் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  முன்னர் குறித்த நேரத்தில் ஐ.நா. தலைமைச் செயலரை சந்திக்க அவரது பயண ஏற்பாடுகள் இடம்தராது போனதால், அவர் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் அவரைச் சந்திக்க வெளியுறவு அமைச்சு மூலம் தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்ததை அடுத்து தாங்கள் சந்திக்க முடியாமல் போனது என்றும் திமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.தலைமைச் செயலரைச் சந்திப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தது, அந்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டதன் பின்பு விமான நிலையத்தில் தலைமைச் செயலரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்று இலங்கை பாதுகாப்புதுறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கடும்காற்று; கடல் சீற்றம்; எச்சரிக்கை

rain.jpgவங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த தாழமுக்கம் நேற்று முதல் இலங்கைக்கு அப்பால் நகர்ந்துசெல்ல ஆரம்பித்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி.டி. ஆனந்த பெரேரா நேற்று தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி என்பன காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்களில் இலங்கையைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடனும், மிகுந்த அவதானத்துடனும் நடந்துகொள்ளுவது அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையை விட்டகன்று நகர்ந்துகொண்டிருக்கும் இத் தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது என்றும், அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இத்தாழமுக்கம் நிலப் பகுதியைச் சென்றடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :

வங்காள விரிகுடாவில் சில தினங்களுக்கு முன்னர் உருவான தாழமுக்கம் நேற்று முதல் இலங்கைக்கு அப்பால் தூரே நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. என்றாலும் இத்தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். தற்போதைய நிலையில் இத்தாழமுக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய கட்டத்தில் இல்லை என்றும் கூறினார்.