Multiple Page/Post

முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு பற்றிய உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 முதல் 6 வரை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை ஒழுங்கு செய்துள்ள முதலாவது உலக ஆய்வு மாநாடு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.

தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம் எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாடு இலங்கையிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்றுபடுத்துவதுடன் மனிதப் பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தாம் கொண்டுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது தொடர்பான அறிவினை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 03ம் திகதி தொடக்கம் 06ம் திகதி வரை இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த உலக ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டினை பல்கலைக்கழக மொழித்துறை செய்து வருகின்றது.

இந்த மாநாட்டில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்” எனும் கருப்பொருளுக்கு உட்பட்டு இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமுகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறு மலர்ச்சி எனும் தலைப்புக்களில் ஏதாவதொன்றின் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையினையும் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களைப் பெற விரும்புபவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்திணைக்கள சர்வதேச ஆலோசனைக் குழு செயலாளர்களான கே. ரகுபரன் (0718218177), திருமதி எம். ஏ. எஸ். எப். சாதியா (0718035182) ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

மட்டு. ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

nimal-sripala.jpgமட்டக் களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை சுகாதார பராமரிப்பு மற்றும் போசாக்குத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நட்டுவைத்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டிடத்தையும் திறந்துவைத்துள்ளார்.  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா புதிய நான்கு மாடி கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் அக்கட்டிடத்தில் வெளி நோயாளர் சிகிச்சைப்பிரிவு, இரத்தவங்கி, கண், மூக்கு, செவிகளுக்கான சிகிச்சைப் பிரிவினையும் ஆரம்பித்து வைத்து, வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கலை அரங்கினையும் திறந்து வைத்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இன நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்பாளர்கள், மாகான சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு பிரதம விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக தேவைப்பட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இவ் வைத்தியசாலைக்கும் இம் மாவட்ட மக்களுக்கும் தேவையாக உள்ள பல சேவைகளை நிறைவேற்றவுள்ளோம். எதிர்காலத்தில் இந்த மக்கள் தங்களது அனைத்துச் சுகாதார சேவைகளையும் இவ்வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் ஆஸ்பத்திரி அபிவிருத்தி செய்யப்படுமென்றார்.

27, 28ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

images-elc.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகர சபை என்பனவற்றுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27, 28ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மூன்று தேர்தல்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கவென 33,000 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விண்ணப்பங்களில் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களை தெரிவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.

“13 வது திருத்தச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் அமைச்சர் அதனையே எதிர்ப்பது கேலிக் கூத்தான செயல்’

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்தால் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்திருப்பது ஒரு கேலிக்குரிய விடயமே என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட மேல் மாகாணசபையில் அமைச்சராக இருந்துவருகின்ற உதய கம்மன்பில 13 வது திருத்தச் சட்ட அதிகாரங்களைக் கொண்டே அவரது அமைச்சுப் பணிகளை அமுல் செய்துவருகின்ற போது அதனை எதிர்த்து அரசில் இருந்து வெளியேறுவதாக கூறுவது கேலிக்கூத்தான செயல்.

மாகாணசபையில் எம்முடன் இருந்து வருகின்ற இனிய நண்பரான உதய கம்மன்பில தனது அரசியல் நாடகத்துக்காக இவ்வாறான அறிக்கைகளை இடையிடையே வெளியிட்டு அரசியல் நடத்திவருவது வழக்கமாகிவிட்டது. அரசாங்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பேன் எனக்கூறும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சவால்விடுவது எவ்வகையில் பொருத்தமானதாகும்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்று 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலும் மாகாண அதிகாரங்களையும் அமுல்படுத்த முடியாததாலும் அன்றைய வடக்கு,கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் இந்தியாவுக்கு ஓடினார் என்பதை உதய கம்மன்பில்ல, அறிந்திருப்பார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசு வெளியிட்ட அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஜனநாயக மக்கள் கூட்டணி விஞ்ஞாபனத்தில் கையெழுத்திட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னிச் சிறுவர்களின் கல்வி அபிவிருத்திக்கு 1,058 மில்லியன் ரூபா செலவில் திட்டம்

visvawarnapala.jpgயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வடபகுதிச் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த 1,058 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்வியைக் கைவிட்ட பிள்ளைகளின் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இவ் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உயர்தர மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் முகமாக உயர்கல்வி பயிற்சிகள் ஆரம்பிப்பதற்காக யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு 23 மில்லியன் ரூபா செலவில் பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் வைத்தியப் பிரிவு ஒன்றும் விடுதி ஒன்றும் அமைக்க 90 மில்லியன் ரூபாவும் தொழில்நுட்பக் கல்விப்பிரிவும், கல்வி நிர்வாகப் பிரிவுக் கட்டிடமும் அமைக்க 609 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விப் பாடத்திட்டங்களை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் 30 மில்லியன் ரூபாவும் யாழ்.உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய 14.15 மில்லியன் ரூபாவும், வவுனியாவில் உயர்தொழில்நுட்ப நிலையம் அமைக்க 65 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டில் இவ் அபிவிருத்தித் திட்டம் நிறைவுபெறும் எனவும் இத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியன நிதியுதவி வழங்கியுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் மீது வழக்கு தொடர இரான் எண்ணம்

iran-br.gifஇரானின் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் சில பணியாளர்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று இரானின் அதிசக்தி மிக்க தேச பாதுகாவலர் சபையின் தலைவர் அயதுல்லா அகமது ஜன்னதி கூறியுள்ளார்.

தடுத்துவைக்கப்பட்ட அந்த இரானிய பிரஜைகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக, வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் உரையாற்றியபோது அயதுல்லா ஜன்னதி கூறியுள்ளார்.

அயதுல்லாவின் இந்த கருத்து குறித்து தாம் அவசர விளக்கம் கேட்டிருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் 7 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இருவர் குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

யாழ்நகரில் கலைஞர்களை கௌரவிக்க ஏற்பாடு

jaffna.jpgயாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாடகத் தயாரிப்பாளர்கள் , அண்ணாவிமார்கள் மற்றும் பல்துறை சார்ந்த கலைஞர்கள் அனைவரும் யாழ்.பிரதேச செயலகத்தால் நடத்தப்படவிருக்கும் கலாசார விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதனால், இந்தப் பிரதேச செயலர் பிரிவிற்குள் இருக்கின்ற மேற்படி கலைஞர்கள் தங்கள் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மூத்த கலைஞர்கள் எவராவது இதுபற்றி அறியாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்தோர் அந்த விபரங்களைக் கலாசாரப் பேரவைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடந்தது. முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

இதையடுத்து இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன இது தொடர்பாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது எனவும், ஒரு பொது கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் தீர்மானித்துள்ளன.

இத்தகவலை இ.தொ.கா. வெளியிட்டுள்ளது.

நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 500 ரூபா சம்ள உயர்வு தோட்டத் தொழிலாளர்க்கு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தின. இது தொடர்பான கருத்து பரிமாற்றத்தின் போது முதலாளிமார் சம்மேளனம் வருடத்திற்கு 12%  சம்பள அதிகரிப்பு வழங்க முன்வந்தது. இதனை முழுமையாக நிராகரித்த கூட்டு ஒப்பந்தம் சார்ந்த கைத்தொழிற் சங்கங்கள் மேல் நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டன.

தமிழ் இளைஞரின் ஆயுதப் போராட்டத்துக்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து தீர்வு வழங்குவது அவசியம்

youth.jpgதமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கிய பணியென இலங்கைக்கான ஐ.நா. அபிவிருத்தித் திட்ட நிறுவனத்தின் (யூ.என்.டி.பி.) உதவிப் பணிப்பாளர் டி.எஸ். ரட்னாநாயக்க தெரிவித்தார்.

பசறை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் “பதுளை எதிர்காலம் எமது கரங்களில்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிக் கொள்கை மொழி உரிமை எனும் தலைப்பிலான ஒருநாள் செயலமர்வு அமைப்பின் பணிப்பாளர் பிரபாத்குமார, உதவி பிரதேச செயலாளர் சாமர ஜெயசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

கடந்த 1956 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தனி ஈழமோ தனி நாடோ கேட்கவில்லை. ஆட்சியில் சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமையை தமிழ் மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றே கேட்டனர். ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று இருக்காது. சிங்கள மொழிக்கு என்ன உரிமை அந்தஸ்து இருக்கிறதோ அதே உரிமையை தமிழ்மொழிக்கும் வேண்டுமென 1956 ஆம் ஆண்டுவரை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் கேட்டுவந்தனர்.அரச கருமமொழி என்ற போர்வையில் சிங்கள மொழியும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட மொழி உரிமை தமிழ்மொழிக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே வட, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமிழ்மொழிக்கு இதுவரையிலும் உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. பொதுவாக வட, கிழக்கை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்கள் தமது தேவைகளை சிங்கள மொழியிலே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தான் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

இதேபோல் வட,கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் சிறுபான்மையாக சிங்கள மக்களும் வசிக்கும் பிரதேசங்களில் சிங்கள மொழியால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் சிங்கள மக்கள் இருந்து வருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் தமிழ்மொழியில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அரசாங்க திணைக்களங்களில் பணிபுரியும் பெரும்பான்மை இனத்தவர்கள் கட்டாயமாக தமிழ்மொழி படித்து இருக்க வேண்டும். தமிழ்மொழியில் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு மேலாக தமிழ்மொழி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

இப்படியான சில அடிப்படை உரிமைகள் தமிழ்மொழிக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டில் இல்லையென்பதே தமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்று பசறை பிரதேசத்திலுள்ள சமுர்த்தி அதிகாரிகளுக்கே மொழி உரிமை குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. காரணம் பசறை லுணுகலை பிரதேசத்திலே தமிழ், சிங்கள மக்கள் சம அளவில் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் பசறை, லுணுகலை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களும் தெரிவுசெய்யப்பட்டு மொழி உரிமை குறித்த செயலமர்வுகளை நடத்தி வருகிறோம்.

இலங்கை போன்ற சிறிய நாட்டில் யுத்தம் நடைபெறுவதை எந்தவொரு நாட்டு மக்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், சர்வதேச அளவில் ஆயுத வியாபாரம் செய்யும் வர்த்தகர்களே யுத்தத்தை அதிகமாக விரும்புவார்கள். இந்த சர்வதேச ஆயுத வியாபார கும்பலே இரு பக்கமும் ஆயுத வியாபாரம் மேற்கொண்டு நாட்டை சீரழிப்பவர்கள்.

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய காலப்பகுதி இதுவாகும்.

இந்த சந்தர்ப்பத்தை ஒருபொழுதும் அரசாங்கம் தவறவிட்டுவிடக் கூடாது. தமிழ்மொழிக்குரிய உரிமை அந்தஸ்து கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்மொழியை சிங்களவர் படிக்க வேண்டும். அதேபோல சிங்கள மொழியை தமிழர் படிக்க வேண்டுமென்ற சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவேண்டும் அல்லது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். பாடசாலைகளில் தரம் 1 முதல் 13 வரை சிங்கள, தமிழ் பாடங்களை கட்டாய பாடங்களாக்கப்பட வேண்டும்.

இப்படியான நுணுக்கமான சட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்மொழிக்கு தானாகவே உரிய அந்தஸ்து கிடைத்துவிடும்

மலை உச்சிகளில் காடுகளை வளர்த்தல்

010709rnawakka.jpgஇலங்கை யிலுள்ள மலை உச்சிகளில் காடுகளை வளர்க்கும் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி கடல் மட்டத்திலிருந்து 1200 மீற்றர் உயரமான மலைப் பிரதேசங்களில் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் சுற்றாடல் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ்க் கொண்டுவரப்படும். இதில் காடு வளர்க்கும் திட்டத்துக்கான நிதியை திறைசேரியிலிருந்தோ அல்லது வெளிநாட்டு உதவியாகவோ பெற்றுக்கொள்ளப்படும்.