தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடந்தது. முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.
இதையடுத்து இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இ.தொ.கா, இ.தே.தோ.தொ. சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன இது தொடர்பாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பது எனவும், ஒரு பொது கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் தீர்மானித்துள்ளன.
இத்தகவலை இ.தொ.கா. வெளியிட்டுள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 500 ரூபா சம்ள உயர்வு தோட்டத் தொழிலாளர்க்கு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தின. இது தொடர்பான கருத்து பரிமாற்றத்தின் போது முதலாளிமார் சம்மேளனம் வருடத்திற்கு 12% சம்பள அதிகரிப்பு வழங்க முன்வந்தது. இதனை முழுமையாக நிராகரித்த கூட்டு ஒப்பந்தம் சார்ந்த கைத்தொழிற் சங்கங்கள் மேல் நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டன.