இரானின் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் சில பணியாளர்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று இரானின் அதிசக்தி மிக்க தேச பாதுகாவலர் சபையின் தலைவர் அயதுல்லா அகமது ஜன்னதி கூறியுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்ட அந்த இரானிய பிரஜைகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக, வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் உரையாற்றியபோது அயதுல்லா ஜன்னதி கூறியுள்ளார்.
அயதுல்லாவின் இந்த கருத்து குறித்து தாம் அவசர விளக்கம் கேட்டிருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் 7 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இருவர் குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.