“13 வது திருத்தச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் அமைச்சர் அதனையே எதிர்ப்பது கேலிக் கூத்தான செயல்’

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்தால் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்திருப்பது ஒரு கேலிக்குரிய விடயமே என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட மேல் மாகாணசபையில் அமைச்சராக இருந்துவருகின்ற உதய கம்மன்பில 13 வது திருத்தச் சட்ட அதிகாரங்களைக் கொண்டே அவரது அமைச்சுப் பணிகளை அமுல் செய்துவருகின்ற போது அதனை எதிர்த்து அரசில் இருந்து வெளியேறுவதாக கூறுவது கேலிக்கூத்தான செயல்.

மாகாணசபையில் எம்முடன் இருந்து வருகின்ற இனிய நண்பரான உதய கம்மன்பில தனது அரசியல் நாடகத்துக்காக இவ்வாறான அறிக்கைகளை இடையிடையே வெளியிட்டு அரசியல் நடத்திவருவது வழக்கமாகிவிட்டது. அரசாங்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பேன் எனக்கூறும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சவால்விடுவது எவ்வகையில் பொருத்தமானதாகும்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்று 13 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலும் மாகாண அதிகாரங்களையும் அமுல்படுத்த முடியாததாலும் அன்றைய வடக்கு,கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் இந்தியாவுக்கு ஓடினார் என்பதை உதய கம்மன்பில்ல, அறிந்திருப்பார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசு வெளியிட்ட அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஜனநாயக மக்கள் கூட்டணி விஞ்ஞாபனத்தில் கையெழுத்திட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *