Multiple Page/Post

வடமாகாண சுகாதாரப் பொறுப்பாளர்களிடம் திட்டங்கள் இல்லை: காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடருகிறது! எலிக்காய்ச்சல் தாக்கம் இன்னமும் தொடர்கிறது !

வடமாகாண சுகாதாரப் பொறுப்பாளர்களிடம் திட்டங்கள் இல்லை: காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடருகிறது! எலிக்காய்ச்சல் தாக்கம் இன்னமும் தொடர்கிறது !

எலிக்காய்ச்சலின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்தாக யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் ஆ கேதிஸ்வரன் தெரிவிக்கின்றார். ஆனால் மேலும் நால்வர் நேற்று எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாண செய்திகள் வளிவருகின்றது. இதுவரை 9 நோயாளிகள் எலிக்காய்ச்சலால் மரணித்துள்ளனர், 234 பேர் இக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காக உள்ளனர். இதைவிடவும் திடீரென வந்த காய்ச்சல்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மரணங்கள் சம்பவித்துள்ளது. இவை எழுந்தமான மரணங்களா? அல்லது இந்த மரணங்களிடையே ஏதும் தொடர்புகள் உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவரவில்லை.

இதற்கிடையே நேற்று கிளிநொச்சியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் தர்மசிறி பத்திரண தங்களிடம் வடமாகாணத்துக்கோ, யாழ் மாவட்டத்துக்கோ உரிய பிரதான திடடமிடல் இல்லையெனத் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற கடல்தொழில் அமைச்சர் எப்படி இப்படியொரு திட்டமிடல் இல்லாமல் இயங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் எவ்வாறு இயங்கினீர்களோ எமக்குத் தெரியாது ஆனால் இனிவரும் காலங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அதிகாரிகளை எச்சரித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினராக சுகாதாரத் திட்டங்கள் தொடர்பில் தனக்கு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆவணங்களைக் பார்க்க அனுமதி வேண்டும் என்று கோரியிருந்தார் அர்ச்சுனா. அதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் அவற்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு சகல அனுமதியும் உள்ளது என்றும் ஆனால் போகும் இடங்களில் குழப்பம் விளைவிக்காமல் நடத்துகொள்ள வேண்டும் என்றும் நளினமாகச் சுட்டிக்காட்டினார். பா உ அர்ச்சுனா உட்பட சiபியில் இருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

கல்வியில் அரசியல் தலையீடு – வவுனியா நகர்ப்புற ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சலுகை !

கல்வியில் அரசியல் தலையீடு – வவுனியா நகர்ப்புற ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சலுகை !

வவுனியாவில் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா – செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ம.ஜெகதீஸ்வரன், செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. நகர்ப்புற பாடசாலைகள் பலவற்றில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் உள்ளனர். ஏன் நகர்ப்புறப் பகுதியில் உள்ள ஆசிரியர்களை பின்தங்கிய பிரதேசத்திற்கு அனுப்ப முடியாமல் உள்ளது. செட்டிகுளம் பிரதேசத்தில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் 8 வருடம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாது உள்ளனர். ஆனால் நகர்ப்புறப் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கே சுழற்சி முறையில் இடமாற்றமாகி செல்கின்றனர். ஏன் அந்த ஆசிரியர்களை தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பக் கூடாது. தொடர்ச்சியாக தூரப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் விமோசனம் கொடுக்கக் கூடாது. இங்கு கூடுதலான அதிகாரிகள் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.நாம் வடக்கு மாகாண ஆளுநருடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசி இங்குள்ள ஆசிரியர் பறறாக்குறையை நிரப்ப முடியும்“ என தெரிவித்தார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 24.12.2024  இடம்பெற்ற சந்திப்பின் போது வடக்கு மாகாண ஆளுநர் ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பான தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

 

 

அந்நியபுலனாய்வு அமைப்புக்களின் ஊடுருவலா ஆராய்கிறது இலங்கை !

அந்நியபுலனாய்வு அமைப்புக்களின் ஊடுருவலா ஆராய்கிறது இலங்கை

டிசம்பர் 26 இல் சிறிய ரக ஆளில்லா விமானமொன்றை திருகோணமலை கடலிலிருந்து கடற்படை மீட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே இந்த விமானத்தை  திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் கடலில் அவதானித்த மீனவர்களே இத்தகவலை வழங்கியதாக கூறினார். மேலும் மீனவர்கள் தாமே தமது படகில் இணைத்துக் கொண்டு கடற்படையினரை வரவழைத்தாகவும் பின்னர் கடற்படையால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இவ் ஆளில்லா விமானம் 2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 40 கிலோ எடையுடைய இவ் விமானத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுப்பிடிக்கவில்லை என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானம் எங்கிருந்து ஏன் இலங்கையின் முக்கியமான திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் பல மர்மங்கள் காணப்படுவதாகவும் அவதானிகள் எச்சரிக்கின்றனர். இது ஒருவேளை அந்நிய நாட்டு புலனாய்வு அமைப்புக்களின் சதியா? அல்லது யாருக்கோ வைத்த இலக்கில் இலங்கைக்கு மாட்டிக்கொண்டதா? என்பவற்றுக்கான பதில்கள் விசாரணை முடிவில் கிடைக்கலாம். பொதுவாக ஆளில்லா விமானங்கள் வேவு நடவடிக்கைகளுக்கும் துல்லியமாக இலக்குகளை தாக்கவும் யுத்த களங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தச் சட்டமும் வேண்டாம் மாகாண சபையும் வேண்டாம் இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஊடகவியலாளருடைய கருத்துக்கு இட்ட பதில் கருத்தில், இந்தியா இவைபற்றிப் பேசாது ‘கம்மென்று’ இருப்பதையிட்டு தனக்குப் பெருமகிழ்ச்சியென்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் இந்தியாவின் முகவர்களான பா.உ எஸ் சிறிதரனுடனும் பா உ செல்வம் அடைக்கலநாதனுடனும் கூட்டுச் சேர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்று பேச்சுவாரத்தை நடந்தது. அதற்கு சுமந்திரன் ‘கட்சியின் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் புறம்பாக செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்’ என்று இறுக்கிய ஆப்போடு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டார். பெரும்பான்மையான தமிழ் மக்கள் 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் கௌசல்யாவுக்கு கொடுத்த அங்கீகாரத்தைக் கூட தனக்கு அளிக்கவில்லை என்பதை உணரமறுக்கின்றார். 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2025 முற்பகுதியில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள், இந்திய அரசு ஜனாதிபதி அனுரவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்துள்ளனர். 13வது திருத்தத்தைப் பற்றியே மோடி பேசவில்லை என்பதில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் சற்று மனமுடைந்துவிட்டன. பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு முற்றிலும் முரணாக, 13வது திருத்தம் மாகாணசபை பற்றி கருத்து வெளியிட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தமிழகக் கட்சிகள் 13வது திருத்தத்தை அழுல்படுத்த பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அமெரிக்க முகவராகவும் வரதராஜப் பெருமாள் இந்திய முகவராகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“தேசிய மக்கள் சக்தி இலங்கையின் அனைத்து மக்களதும் துணையோடு, மிகப்பெரும்பான்மைப் பலத்தோடு, ஆட்சி அமைத்துள்ளது எங்களுடைய ஆட்சியை கவிழக்கலாம் என கனவிலும் எண்ண வேண்டாம்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்து இருக்கின்றார். ஜனாதிபதி அனுர ஒருபடி மேலே சென்று, “மக்களுக்கான ஆட்சி அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும்” எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் “இந்தியாவில், ஜனாதிபதி அனுரவுக்கு எதிரான எவ்வித ஆர்ப்பாட்டங்களும் எழவில்லை. தவிர்க்க முடியாமல் ஜனாதிபதி அனுரா இலங்கையின் அனைத்து மக்களினதும் பிரதிநிதி என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை, தேசிய மக்கள் சக்தி உருவாக்கி உள்ளது. எங்களுடைய சக இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியா, இலங்கைக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதை தேசிய மக்கள் சகத்தி தெளிவாக உணர்த்தியுள்ளது என ஆய்வாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளமாகிய இந்தக் குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி மேலதிக நீரைச் சேமித்து, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே இத்திட்டத்தின்படி தண்ணீர் விநயோகம் செய்யக்கூடியமாதிரி குழாய்கள் பொருத்தப்பட்டு வேலைகள் ஆரம்பித்திருந்த நிலையில் இத்திட்டம் இடை நடுவில் தடைப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வன்னி விவசாயிகள் எதிர்க்கின்றனர். கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டமாக இருக்கும் பட்சத்தில் இரணமடுக்குளத்திலிருந்து ஆயிரக்கான ஏக்கர் வயல்காணிகளுக்கு இன்னும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை என கிளிநொச்சி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார். இவரது வாக்கு வங்கி கிளிநொச்சி என்ற வகையில் சிறிதரன் கிளிநொச்சி விவசாயிகளின் பக்கம் நிற்பதில் ஒரு நியாயமும் உள்ளது. அதேபோல் இராமநாதன் அர்ச்சுனாவின் வாக்கு வங்கி யாழ்ப்பாணத்தில் இருப்பதால் தண்ணியை யாழ் கொண்டு வருவது அவரது வாக்கு வங்கிக்கு முக்கியம்.

ஒருபக்கம் சமமான வளப்பங்கீடு பற்றி பேசினாலும் மறுபக்கம் வளச்சுரண்டல் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும். யாழ் மாவட்டத்தின் நீர்ப்பற்றாக்குறைக்கு அம்மாவட்டத்தின் தவறான மற்றும் பொறுப்பற்ற நீர் மேலாண்மையே காரணம். யாழிலில் காணப்பட்ட பல நீர் நிலைகள் மூடப்பட்டு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊதிப் பெருத்த நகரத்தாலும் முறையற்ற கழிவகற்றலாலும் நன்னீர் நிலைகள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் பழுதடைந்துள்ளன. குறிப்பாக சுண்ணாகம் மின்சார உற்பத்தி மசகு எண்ணெய்க் கழிவுகள் நிலத்திற்கடியில் விடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடிநீர் கெட்டுப் போனமையும் குறிப்பிடத்தக்கது. ஏன் யாழ் மாவட்டம் மாற்றுத் திட்டங்களை ஆலோசிக்க கூடாது. கடல் நீரை நன்னீராக சுத்திகரித்தல், மழை நீரை சேகரிக்கலாம், சட்டவிரோத கட்டிடங்களை தகர்த்து நீர்நிலைகளை மீட்டு புனரமைக்கலாம் என கிளிநொச்சியில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !

பா உ அர்ச்சுனாவுக்கும் சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற முடிவுக்கு வர அமைச்சர் சந்திரசேகரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். டிசம்பர் 26 நேற்று, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, இனிமேல் பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அமைச்சர் உங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி, வைத்தியர் அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு கொண்டு வாருங்கள் என குறிப்பிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

கிளி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வழமை போல கல்வித் தகமை உள்ளதா..?, நீங்கள் மக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள்? தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து, அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசாவை பா.உ அரச்சுனா பேச, தம்பி தம்பிராசாவும் எதிர்த்துப்பேசவே கூட்டம் அமைதியையிழந்ததது.

பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு

பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு

ருஹூனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக முன்னாள் உபவேந்தர் சுஜீவ அமரசேன உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் இதுவொரு அரசியல் பழிவாங்கல் எனவும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபரை நியமிப்பது தொடர்பில் வழமையாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ் அடிப்படை உரிமை மீறல் வழக்கில் கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோழிச் சண்டையிலிருந்து தொழில்நுட்பச் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா ! 

கோழிச் சண்டையிலிருந்து தொழில்நுட்பச் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா !

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமது கோழி பண்ணை விரிவாக்கத்தை அதிகரித்தது அமெரிக்கா. இதனால் 1963 இல் அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே “கோழிச்சண்டை” (chicken war) ஒன்று ஆரம்பமானது. ‘மலிவான’ அமெரிக்க கோழி இறக்குமதியால் பாதிப்புற்ற உள்ளூர் கோழி வளர்ப்பாளர்கள் பிரான்ஸ் அரசிற்கெதிராக போர்க் கொடி தூக்கினர். இதன் எதிர்வினையாக, ஐரோப்பிய நாடுகளால் அமெரிக்க கோழிகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி (tariff) அதிகரித்தது. கோபமடைந்த அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளின் வாகன இறக்குமதிகளுக்கு மேலதிக வரி விதிக்க ஆரம்பித்தது. இன்றும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்மிடையே இந்தக் கோழிச்சண்டையுள்ளது. ஐரோப்பிய ஒன்றியச் சந்தை, அமெரிக்க கோழி இறைச்சியால் நிரம்பிவிடாமல் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தர நிர்ணயக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றது.

சீனா மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக ஏற்றுமதி வரி விதிப்பும், மசகு எண்ணெய் இறக்குமதியை வைத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது மேலதிக வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதும் அந்தக் காலத்து கோழிச் சண்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டதையே காட்டுவதாக பொருளியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். முன்பு கோழிக்கு அடிபட்டவர்கள் இப்போது chips (semi-conductor இற்கு மோதிக் கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

9,000 பேர் நத்தார் தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் !

9,000 பேர் நத்தார் தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் !

நத்தார் தினம் பிறந்த காலை 7:30 கிளிநொச்சியில் டிப்பர் ஓட்டியவர் குடித்துவிட்டு மது போதையிலேயே வாகனத்தை ஓட்டியுள்ளார். இவரைவிட இன்னும் 250 பேர் நேற்றைய தினம் குடிபோதை மயக்கத்துடன் வாகனத்தைச் செலுத்தியுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 9,000 குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் என்றும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் தினமும் 7 விபத்து மரணங்கள் இடம்பெறுகின்றது. பலர் காயமடைகின்றனர் ஊனமடைகின்றனர். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்ததுடன், தாயார் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் மக்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாக மதுபானசாலைகள் இருப்பதைக் கண்டித்து டிசம்பர் 24இல் மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். போராட்டம் நடைபெற்று மறுநாள் இவ்விபத்து ஒரு குடும்பத்தை புரட்டிப் போட்டவிட்டது.

அரசு மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அவர்களுடைய மூச்சை சோதணை செய்து உறுதிப்படுத்துவதற்காக 1,500 சுவாசத்தை சோதித்து மது அருந்தியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தும் சாதனத்தை ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கியுள்ளது. மேலும் பொலிஸாருக்கு கமரா பொருத்தப்பட்ட மேலங்கிகளும் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் பொலிஸார் மக்களோடு எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் இக்கமராக்கள் பதிவு செய்யும். இருந்தாலும் கமராக்களை நிறுத்திவிட்டு பொலிஸார் தம் இஸ்டத்திற்கு நடந்துகொள்வது பிரித்தானியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் வேகத்தடைக் கமராக்களையும் பொலிஸார் அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக அமையும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணத்தை அதிகரித்து அதனை போக்குவரத்தை மேம்படுத்து நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊர்காவற்துறை முதல் மாத்தளை வரை 24 கொள்ளைகள் 4 யாழ் இளைஞர்கள் கண்டியில் கைது!

ஊர்காவற்துறை முதல் மாத்தளை வரை 24 கொள்ளைகள் 4 யாழ் இளைஞர்கள் கண்டியில் கைது!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த நான்கு வருடங்களாக கொளையடித்து வாழ்ந்துள்ளனர். 19 வயதுமுதல் 26 வயதுவரையுடைய இவர்கள் வடக்கில் யாழ் ஊர்காவற்துறை முதல் மத்திய மலைநாடுவரை சென்று 21 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கோடிக்கணக்கில் கொளையடித்த இவர்கள் அதனைச் செலவிழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். யாழ் அடகு கடையொன்றில் திருடிய நகைகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் மீது 24 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பான பதிவுகள் உள்ளது. யாழில் மட்டும் 9 பிடியாணைகள் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 21 வீடுகளிலும் கோயில்களிலும் இவர்கள் திருடியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் கொழும்பில் இருந்து கணவன் மனைவியாக வந்து திருட்டில் ஈடுபட்ட கணவன் சிலவாரங்களுக்கு முன் கோப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே. சோம்பேறித்தனமாகவும் இரவோடு இரவாக லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான திருட்டுத் தனங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கொள்ளை மட்டுமல்லாமல் கொள்ளைக்கா சில கொலைகளும் இடம்பெற்றுள்ளது. அத்தோடு மண் கடத்தல், மரம் கடத்தல், போதைவஸ்து கடத்தல் என இளைஞர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவுக்குப் பின் காலையில் நடக்கின்ற டிப்பர் விபத்துக்கள் கள்ள மண் ஏற்றுபவர்களினாலேயே பெருமளவு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது.