அந்நியபுலனாய்வு அமைப்புக்களின் ஊடுருவலா ஆராய்கிறது இலங்கை
டிசம்பர் 26 இல் சிறிய ரக ஆளில்லா விமானமொன்றை திருகோணமலை கடலிலிருந்து கடற்படை மீட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே இந்த விமானத்தை திருகோணமலை கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் கடலில் அவதானித்த மீனவர்களே இத்தகவலை வழங்கியதாக கூறினார். மேலும் மீனவர்கள் தாமே தமது படகில் இணைத்துக் கொண்டு கடற்படையினரை வரவழைத்தாகவும் பின்னர் கடற்படையால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இவ் ஆளில்லா விமானம் 2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 40 கிலோ எடையுடைய இவ் விமானத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுப்பிடிக்கவில்லை என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் எங்கிருந்து ஏன் இலங்கையின் முக்கியமான திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் பல மர்மங்கள் காணப்படுவதாகவும் அவதானிகள் எச்சரிக்கின்றனர். இது ஒருவேளை அந்நிய நாட்டு புலனாய்வு அமைப்புக்களின் சதியா? அல்லது யாருக்கோ வைத்த இலக்கில் இலங்கைக்கு மாட்டிக்கொண்டதா? என்பவற்றுக்கான பதில்கள் விசாரணை முடிவில் கிடைக்கலாம். பொதுவாக ஆளில்லா விமானங்கள் வேவு நடவடிக்கைகளுக்கும் துல்லியமாக இலக்குகளை தாக்கவும் யுத்த களங்களில் பயன்படுத்தப்படுகின்றன.