கல்வியில் அரசியல் தலையீடு – வவுனியா நகர்ப்புற ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சலுகை !

கல்வியில் அரசியல் தலையீடு – வவுனியா நகர்ப்புற ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சலுகை !

வவுனியாவில் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா – செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ம.ஜெகதீஸ்வரன், செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. நகர்ப்புற பாடசாலைகள் பலவற்றில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் உள்ளனர். ஏன் நகர்ப்புறப் பகுதியில் உள்ள ஆசிரியர்களை பின்தங்கிய பிரதேசத்திற்கு அனுப்ப முடியாமல் உள்ளது. செட்டிகுளம் பிரதேசத்தில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் 8 வருடம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாது உள்ளனர். ஆனால் நகர்ப்புறப் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கே சுழற்சி முறையில் இடமாற்றமாகி செல்கின்றனர். ஏன் அந்த ஆசிரியர்களை தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பக் கூடாது. தொடர்ச்சியாக தூரப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் விமோசனம் கொடுக்கக் கூடாது. இங்கு கூடுதலான அதிகாரிகள் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.நாம் வடக்கு மாகாண ஆளுநருடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசி இங்குள்ள ஆசிரியர் பறறாக்குறையை நிரப்ப முடியும்“ என தெரிவித்தார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 24.12.2024  இடம்பெற்ற சந்திப்பின் போது வடக்கு மாகாண ஆளுநர் ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பான தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *