‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்
‘வடக்கத்தையான்’ மனநிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் ! ஊழல் இல்லாமல் கிராமங்களின் அபிவிருத்தியைச் செய்பவர்கள் தெரிவாக வேண்டும் !
அரசியல் சமூக செயற்பாட்டாளர் சோலையூரானுடன் உரையாடல்
அபிவிருத்தியும் வேண்டும் அரசியல்த் தீர்வும் வேண்டும் ! : கங்கா ஜெயபாலன்
மார்ச் மாதம் 28 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு 2430 இலக்கமிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி 5 940 ஏக்கர் காணிகள் அரச உடமையாக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் வெற்றிலைக்கேணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான கைவிடப்பட்டுள்ள காணிகளை மூன்று மாத்திற்குள் காணிச் சொந்தக்காரர்கள் உரிமை கோராவிடில் அரச உடமையாக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலானது சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலுமே முதலில் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு மாதம் கழிந்த நிலையில் தற்போது தமிழிலிலும் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக வர்த்தமானியில் குறிப்பிடப்படும் காணிகள் இருக்கும் இடங்களில் வாழ்வது தமிழ்மக்களேயாகும். அவர்களுக்கு புரியும்படியான மொழியிலேயே அவ்வறிவித்தல்கள் விடப்பட்டிருக்க வேண்டும்.
என்பிபி அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இராணுவத்தின் பிடியிலுள்ள தனியாருக்கு சொந்தமான அனைத்து காணிகளும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார். அதன்படி காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காதும் காதும் வைத்தமாதிரி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. என்பிபி அரசாங்கம் பதவியேற்று 6 மாதங்கள் தான் கடந்திருக்கின்றன . இந்தக் குறுகிய காலத்தில் கைவிடப்பட்டுள்ள காணிகளை இவ்வளவு விரைவாக இனங்கண்டு இருக்க முடியாது. எம். ஏ. சுமந்திரனின் கருத்துப்படி கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவை தற்போதைய என்பிபி அரசாங்கத்தின் காணி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளிவந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அப்படியானால் கடந்த கால ஆட்சியில் இந்த காணிகளை அரசவுடமையாக்கும் திட்டத்தின் பின்னணியில் ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பில் ஆளும் என்பிபி அரசாங்கம் தான் பதிலளிக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் பலர் இன்னும் தமது காணிகளுக்கு திரும்பவில்லை. யுத்தம் நடந்த இடங்களிலிருந்து வெளியேறிய பலரின் வாழ்விடங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. காணிகளிலிருந்து வெளியேறியவர்கள் உடனடியாக திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். பலருடைய காணிகளின் ஆவணங்கள் யுத்தத்தின் போது தொலைந்து விட்டன. அல்லது சேதமடைந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில் இரு மாதங்களே நிலுவையிலுள்ள நிலையில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளை உரயவர்கள் உரிமை கோருவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை. எனவே ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இந்த விடயத்தில் தலையிட்டு 2430 இலக்க சம்பந்தப்பட்ட வர்த்தமானியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை மே 28 க்கு முன்னர் அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் மே 29 முதல் சாத்வீக ரீதியில் பாரிய சட்ட மறுப்பு போராட்டத்தை மேற்கொள்வோம் அரச இயந்திரம் எங்களுடைய மாவட்டங்களில் இயங்க முடியாமல் செய்வோம் ” என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் மதியாபரம் அபிரகாம் சுமந்திரன் அரசாங்கத்துக்கு ஒருமாதம் காலக்கெடு விதித்துள்ளார்.
அதேநேரம் நேற்றைய தினம் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணி குழுவினர் வடமராட்ச்சி கிழக்குப்பகுதியில் மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளனர். அதேபோன்று சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் உமாகஜன் ராசையா போன்றோரும் இலவச சட்ட உதவி இந்த வர்த்தமானி விடயத்தில் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வர்த்தமானி விடயத்தில் தமிழ்க்கட்சிகளும் அரசியல் செயல்ப்பாட்டாளர்களும் கண்ணை மூடிக் கொண்டு இருந்தமையும் கண்டிக்கத்தக்கது. உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளைப் பெற இந்த விடயத்தில் அரசியல் செய்யாமல் இதய சுத்தியுடன் விரைந்து செயற்பட வேண்டும்.
தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் கொள்கை உடன்பாடின்மையும் சுயநலப் போக்குமே இலங்கையில் தமிழ் மக்கள் தமது நியாமான அரசியல் கோரிக்கைகளையும் அபிவிருத்தியையும் அடையத் தடையாகவுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் என்பது உணர்ச்சி அரசியலாக வெறுமனே வாய்ச்சவாடல்களாக உசுப்பேத்தும் அரசியலாகவே தொடர்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியுடன் கூடிய சகல விதமான அரசியல் உரிமைகளுடனும் வாழ்வதற்கான யதாரத்த அரசியலை மேற்கொள்ள தமிழ்க்கட்சிகள் தயாராகவில்லை.
தையிட்டி விகாரை விடயத்திலும் குளிர்காயும் அரசியல் செய்யாது, உடனடியாக தீர்வு காணக்கூடிய வகையில் செயற்படலாம். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை விடுத்து மிகுதிக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். பின்னர் தையிட்டி விகாரைக் காணிக்கு சொந்தக்கார பெண்மணி மலேசியாவில் இருப்பதாக எம். ஏ. சுமந்திரன் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தையிட்டு விகாரை நிர்வாகவும் மேற்க்கொண்டு குறிப்பிட்ட விவகாரத்தில் முடிவு எடுக்கட்டும்.
அதேநேரம் வடக்கு கிழக்கில் தையிட்டி விகாரைக்கு என சட்டத்திற்குப்புறம்பாக தனியார் காணிகளை சுவீகரிக்கும் சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையில் 30 வருடமாக நடந்த யுத்தம் பல படிப்பினைகளை விட்டுச் சென்றிருக்கின்றது. இலங்கையில் வாழும் அனைத்து சாமானிய மக்களுமே யுத்ததின் கோரத்தின் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். அந்தவகையில் தமிழ்மக்களின் இழப்புக்கள் அதிகம். அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்த நியாயத்தையும் யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் அனைத்து சமூகங்களும் சம உரிமைகளுடன் சமத்துவமாக வாழ வேண்டும். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு கடந்த காழ்ப்புணர்வுகளுடன் வாழ்வது நீண்டகாலத்திற்கு நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் கொண்டுவராது.
இலங்கையின் பன்மைத்துவத்தையும் ஒவ்வொரு இனத்திற்கும் இருக்கும் பிரத்யேக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு புதியவொரு அரசியலமைப்பையும் புதியவொரு அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டியது அதிகாரத்திலிருப்பவர்கள் உட்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். என்பிபி அரசாங்கத்திற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெரும்பான்மை சமூகத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ்மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்.
திடீரென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல். காணிகளை கையகப்படுத்தல், புத்த விகாரைகளை அமைத்தல் என்ன இன்னபிற வழமையான இனவாத அரசாங்கங்களின் வழியில் செல்லாது என்பிபி அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவே என்பிபி அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். என்பிபியின் வாதப்படி தமிழ்மக்கள் அனைத்து உரிமைகளுடனும் சமமாக சம அபிவிருத்தியுடன் வாழ வைத்தால் அவர்கள் ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ்வார்கள் என்பதாகும்.
கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த உயர்குலாம் சிங்களப் பேரினவாத அரசாங்களின் இனவாத அரசியலாலேயே நாடு பிளவுபட்டது. தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர். ஆனால் வர்க்க அரசியல் பேசும் என்பிபி அரசாங்கத்தில் தமிழ்மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதும் அவர்களுக்கு யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நிவாரணத்தையும் வழங்கும் போது இனப்பிரச்சினை என்றொன்று இருக்கப் போவதில்லை என்பதாகும். என்பிபியின் ஆட்சிக்காலம் வரை தமிழ்மக்கள் சமமாக நடத்தப்படலாம். ஆனால் எதிர்வரும் காலங்களில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போது என்பிபி குறிப்பிடும் அதே இனவாத அரசாங்கங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். அவர்கள் தமிழ்மக்கள் மீது தமது இனவாத அடக்குமுறைகளை தொடர மாட்டார்கள் என்பதற்கும் தமிழர்களை மட்டுமல்ல சிறுபான்மையினரை இரண்டாம்தர பிரஜைகளாக நடத்த மாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
என்பிபி கூறுவது போன்று அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை தாம் உணர்ந்திருப்பதாகவும் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவே தமக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாக கூறிவது உண்மையாக இருந்தால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் தீர்வு காணவேண்டும். எதிர்காலத்தில் என்பிபி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் தமிழ் மக்கள் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ்வதற்கான உத்தரவாதம் புதிதாக உருவாக்கப்பட போகிற அரசியல் அமைப்பில் வழங்கப்பட வேண்டும். அப்படியானவொரு அரசியல் தீர்வை என்பிபி தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான அரசியல் அழுத்தத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வழங்க வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் வாக்காளர்கள் அபிவிருத்தியும் வேண்டும் அரசியல் தீர்வும் வேண்டும் என சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
நல்லை ஆதீன சுவாமிகளின் இரகசிய மரணம் அவர் சமாதியாகாமல் எரிக்கப்பட்டது ஏன் ? தன்ணுணர்வு இழந்தவர் எப்படி வாக்குமூலம் தந்தார் ? ஆதாரங்கள் எங்கே ?
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் (வயது 68) மே மாதம் முதலாம் திகதி உயிரிழந்தார். அவர் என்ன சுகயீனம் என்று காரணம் குறிப்பிடப்படாத வருத்தத்தின் காரணமாக, பெயர் குறிப்பிடப்படாத கொழும்பில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் அவர் இறந்ததாக ஆறுதிருமுருகனின் வட்டாரங்கள் செய்தியை வெளியிட்டன.
யாழில் ஒரு முக்கிய பிரமுகரான நல்லை ஆதீன சுவாமிகள் நோய்வாய்ப்பட்ட தோ கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டதோ அவருக்கு நெருங்கியவர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. திடிரென அவர் இறந்த செய்தி ஆறுதிருமுருகனின் வட்டாரங்களால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இச்செய்தி பலரையும் சென்றடைவதற்கு முன்னமே அவருடைய உடலும் 24 மணி நேரத்திற்குள்ளாக தகனம் செய்யப்பட்டுள்ளது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டா வது குருமகா சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் இயற்பெயர் சுந்தரலிங்கம் என்பதாகும். நல்லூரை சொந்த இடமாகக் கொண்ட இவர் 1970களின் ஆரம்பத்தில் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் துறவறம் வழங்கப்பட்டு, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் என்ற நாமம் பெற்றார். 1981ஆம் ஆண்டு முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி நிலையை அடைந்தமையை தொடர்ந்துஇ நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானமாக பட்டம்சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி நிலையஅடைந்ததை அடுத்து அவருடைய உடல் நல்லை ஆதீனத்தில் சமாதியாக்கப்படும் எனவே சைவமக்கள் எதிர்பார்த்தனர். அதுவே நல்லை ஆதீனத்தின் பாரம்பரியமும். அவருடைய உடல் சமாதியில் வைக்கப்படும் என்றே செய்திகளும் வெளியாகின.
ஆனால் நல்லை ஆதின சுவாமிகளின் மதிப்பு உயர்ந்துவிடக்கூடாது மற்றையவர்களுக்கு இந்த இறுதிக் கிரியைகளில் வாய்ப்புகள் வந்துவிடக் கூடாது அவருடைய நன்மதிப்பை குறைத்துக் கொள்ளும் நோக்கோடு ஆறுதிருமுருகன், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளை சமாதியில் வைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுவாமிகள் தன்னை எரிக்கும்படி கேட்டதாகவும் தன்னையும் தான் சார்ந்த மேலும் இருவரும் தான் தனது இறுதிக்கிரியைகளில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இலங்கையின் மத, அரசியல் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருக்க வேண்டிய இறுதிநிகழ்வை ஆறுதிருமுருகன் கனகச்சிதமாக ஒரு சாதாரணரின் இறுதிச்சடங்காக குறுக்கி தன்னுடைய நீண்டகால திட்டத்துக்கு அடிக்கல் கோலினார்.
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவருடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நல்லை ஆதீனத்தை திருத்துவதற்கான முயற்சிகள் லண்டனில் உள்ளவர்களால் முன்னெடுக்கப்பட்டது. என் சச்சிதானந்தன் இதனை முன்னின்று ஆரம்பித்தார். அதற்கு ஆறுதிருமுருகன் நிதி சேகரிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து லண்டன் சைவப் பிரமுகர்கள் நிதியை வாரி இறைத்தனர். லண்டன் சைவமுன்னேற்றச் சங்கப் பிரமுகர்கள் இதில் முன்நின்றனர். கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. நல்லை ஆதினமும் சுவாமிகளும் ஆறு திருமுருகனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். நல்லை ஆதீன சுவாமிகளின் உணவுக்கான நிதியைக் கூட ஆறுதிருமுருகனே கட்டுப்படுத்தி வந்துள்ளார். அவருக்கான உணவுக்கான நிதி சரியாக வழங்கப்படாததால் தனிப்பட்ட முறையில் சுவாமிகளுக்கு தான் நிதி வழங்கியாதாக யாழ் முக்கிய பிரமுகர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
காலமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தன்னை தன்னுடைய குரு தன்னைத் தெரிவு செய்தது போல் தனக்குப் பின் ஒருவரை வளர்த்தெடுத்து உருவாக்க முற்பட்டார். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகன் அனுமதிக்கவில்லை. சுவாமிகளுக்குப் பின் பெயருக்கு ஒருவரை நியமித்துவிட்டு பின் தானே குருவானலாம் என்ற கற்பனையில் இவர் இருந்திருக்கின்றார் என்ற விடயங்கள் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகின்றது.
புகழ்பெற்ற யோக சுவாமிகளின் பாரம்பரியத்தில் உருவானது நல்லை ஆதீனம். அதனை முன்னாள் அமைச்சர் டகளஸ் தேவானந்தாவின் அனுசரணையில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபராகி, யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் இடம்பெற்று மெல்ல மெல்ல பிரபல்யமான ஆறுதிருமுருகன் கைப்பற்றுவதற்கு முழுமுயற்சியில் இறங்கியுள்ளார். குருவானவர் இறக்கின்ற போது தன்னிடம் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் செய்திகளைக் கசியவிட்டுள்ளார்.
யோக சுவாமிகளின் சீடனாக உருவானவர் ஹவாய் சுவாமி என்றழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி. இவர் ஒரு ஆங்கிலேயர். இவர் எண்பதுக்களில் இலங்கை வந்தபோது இவருக்கு உதவியாக அனுப்பி வைக்கப்பட்ட ரிஷிகரன் என்ற கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொண்டன்சாமி என்று சொல்லிக்கொண்டு தற்போது ஆறுதிருமுருகனோடு ஒட்டிக்கொண்டுள்ளார். மதுப் பிரியரான இவரை ஆறுதிருமுருகன் ஆதீனக் குருவாக்கி அதன் பின் தானே குருவாகலாம் என்ற யோசனையில் செயற்படுவதாக நல்லை ஆதீனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் காலமான சுவாமிகளை அறிந்த அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தொடர்புகொண்டதில் சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. காலமான சுவாமிகளுக்கும் ஆறுதிருமுருகனுக்கும் நல்ல உறவு இல்லை எனத் தெரியவருகின்றது. ஆதீனத்துக்கு வருகின்ற முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்களுடன் சுவாமிகளை உரையாடவிடாமல் ஆறுதிருமுருகனே முந்திக்கொண்டு உரையாடுவதிலிருந்து இந்த அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் அவருடைய உணவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையே வெகுவாகக் கட்டுப்படுத்தியும் வந்துள்ளார் ஆறுதிருமுருகன்.
இந்தப் பின்னணியில் சுவாமிகள் மரணத்துக்கு முன் தனக்கு சொன்னதன் படி தான் செய்கிறேன் என ஆறுதிருமுருகன் சொல்வது ஏற்புடையதாக இல்லை. சுவாமிகளின் மரணமே தற்போது பல கேள்விகளை எழுப்புகின்றது. அவர் என்ன நோய்வாய்ப்பட்டு இருந்தார் ? அவர் ஏன் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டார் ? கொழும்பில் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ? யார் அவருக்கு சிகிச்சை அளித்தது ? யாழ் சைவர்களின் முக்கிய பிரமுகரான இவரின் மரணத்தை ஏன் அந்த மருத்துவமனை அறிவிக்கவில்லை ? அவர் ஏன் மரணமானார் என்பதும் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் ?
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் மரணம் போல் சுவாமிகளின் மரணமும் பல கேள்விகளை எழுப்புகின்றது.
இது தொடர்பில் தேசம்நெற்க்கு கிடைக்கின்ற மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் சுவாமிகள் சில காலமாகவே சுயநினைவை இழக்க ஆரம்பித்து விட்டார் என்பது. அவர் தன்னுடைய அங்கி அவிழ்ந்து வீழ்வதையே உணர இயலாத நிலையில் இருந்ததாக நல்லை ஆதீனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயநினைவை இழந்தவர் தன்னுடைய மரணச்சடங்கை இப்படிச் செய்யுங்கள், இன்ன, இன்னார் தான் என்னுடைய இறுதிநிகழ்வில் உரையாற்ற வேண்டும் என்பதெல்லாவற்றையும் எப்படிச் சொன்னார். சொத்துக்களை எப்படி ஒப்படைத்தார்.
ஆறு திருமுருகன் தொடர்ந்தும் சைவர்களுக்கு நாமம் போட முடியாது. உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நல்லை ஆதீனத்துக்கு மக்கள் எழுதி வைத்த சொத்துக்களுக்கு என்ன நடக்கின்றது. சிவபூமிக்கு மக்கள் எழுதி வைக்கும் சொத்துக்களுக்கு என்ன நடக்கின்றது. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மரணத்தின் பின்னணி என்ன ? உண்மைகள் உறங்குவதில்லை.
புலிகளிடமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட நகைகள் ! மக்கள் தங்களுடையதை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம் !
யுத்த காலத்தில் புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி என்பன பத்திரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இரத்தினக்கல் மற்றும் தங்கா பரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர், அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகைகளை புலிகளின் வங்கியில் மக்கள் வைப்பிட்டு இருந்தனர். மேலும் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறுபவர்கள் குறித்த அளவு தங்கத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அவர்கள் விதித்து இருந்தனர். மேலும் யுத்தத்திற்கான நிதி சேகரிப்பிலும் அவர்கள் நகைகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட நகைகளே இறுதி வன்னி யுத்தத்தில் மக்களிடம் போய் சேர்ந்தது.
மேலும் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த நகைகளை எப்படி உறுதிப்படுத்துவது என்பது மிகச்சவாலானதாக அமையும். மேலும் சில நகைகளின் உரிமையாளர்கள் தற்போது உயிருடன் இருப்பார்களா என்பதும் கேள்விக்குறி. சம்பந்தப்பட்ட நகைகள் உரிமை கோரப்படாதவிடத்து. அந்நகைகளை யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு வட்டியற்ற நுண்கடன் முறையில் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதே பொருத்தமானதாக அமையும்.
நிர்வாக சேவை பதவி உயர்வுகளில் 60 வீதமானவர்கள் தமிழர்கள் !
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த 23 அதிகாரிகள் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நிர்வாக சேவை விசேட தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பதிவி உயரத்தப்பட்ட 23 பேரில் 14 அதிகாரிகள் தமிழர்கள் ஒருவர் முஸ்லீம் எட்டுப்பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் நேற்று முதல் அமுலுக்கு வர தீர்மானிக்கப்பட்டிருந்தது.
பதவி உயர்வு பெறுவோர் பட்டியலில் எஸ்.சிவசிறி, எஸ்.முரளிதரன், எஸ்.அச்சுதன், கே.சிறிமோகனன், என்.மணிவண்ணன், என்.சிவலிங்கம், ரி.திரேஸ்குமார், ஏ.சோதிநாதன், சுபாகினி மதியழகன், எஸ்.சத்தியசீலன், பி.தயானந்தன், வை.பரந்தாமன், எம். சிறிஸ்காந்தகுமார் மற்றும் வி.மதுமதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே தினத்தில் வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிப்பு !
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணிகள் 40.7 ஏக்கர் நேற்று தொழிலாளர் தினமன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காணி அனுமதிப் பத்திரங்களை யாழ் மாவட்ட மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தால் யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபனிடம் கையளித்துள்ளார். இந்நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் , காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மற்றும் மாங்கொல்லையில் 15.13 ஏக்கரும் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராமத்தில் 20 ஏக்கரும் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சென்று பார்வையிட்டு அடையாளப்படுத்த முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுரவுக்கு ரெட் அலேர்ட் ( red Alert ) கொடுங்கள் சஜித் கோரிக்கை!
உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அநுர அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கும் படி தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற மேதின கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ அறை கூவல் விடுத்துள்ளார். தற்பொழுது மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ள அநுர அரசு தேர்தல் முடிய மின்சார கட்டணத்தை அதிகப்படுத்தவுள்ளதாக தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது எனவும் சஜித் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உப்பைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத மக்களை ஏமாற்றும் காட்டாட்சி நடத்தும் அநுர அரசுக்கு பாடம் கற்பிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும்படி கோரினார். தலவாக்கலையில் நடந்தது மேதின கூட்டமா? அல்லது உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டமா ? என மக்கள் முழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவன் தற்கொலை ! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு !
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த மாணவர் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டினர்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இவ்வாறான வதையை பகிடி வதை என்று அழைப்பதே தவறு என்று இது மோசமான வதை எனவும் கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
நல்லை ஆதீன குரு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் !
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம் பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தனது 68வது வயதில் நேற்று இயற்கை எய்தினார். கொழும்பில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய உடல் இன்றே தகனம் செய்யப்படும் எனத் தெரியவருகின்றது.
சுந்தரலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட நல்லூரை சொந்த இடமாகக் கொண்ட இவர் 1970 களின் ஆரம்பத்தில் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானத்தில் துறவறம் பெற்று ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர
தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் என்ற நாமம் பெற்றார். 1981ஆம் ஆண்டு முதலாவது
குருமகா சந்நிதானம் சமாதி நிலையைஅடைந்தமையை தொடர்ந்து, நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானமாக பட்டம்சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து காங்கேசன்துறைக்கான போக்குவரத்து கட்டணம் குறைப்பு !
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த சேவை வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப் படுகின்றன எனவும் குறிப்பிடப்டுகின்றன.
மேலும், இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.