2024

2024

ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக இரண்டு மனுக்களில் பெயரிட உயர்நீதிமன்றம் அனுமதி!

சோசலிச இளைஞர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.

 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

சோசலிச இளைஞர் சங்கம் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் – அனைத்து கணக்குகளையும் முடக்கும் திட்டம் தீவிரம் !

ஹிஸ்புல்லாவை  ஆதரிப்பதாகக் கூறும் வங்கி கிளைகளைக் குறிவைத்து, லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் முழுவதும் அல்-கார்ட் அல்-ஹசன் கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை இலக்கு வைத்து நேற்றையதினம் (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெய்ரூட்  விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்தாகவும் கூறப்படுகின்றது.

எச்சரிக்க வழங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு முதல் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாகக் கூறும் அல்-கார்ட் அல்-ஹசன் வங்கியின் கிளைகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த வங்கியின் கிளைகள் பெரும்பாலும் பரபரப்பான மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்களின் தரை தளத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் முழுவதும் இந்த வங்கியின் 34 கிளைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிஸ்புல்லா அமைப்பு அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்த தளங்களை குறிவைத்தது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) நேற்று (21.10.2024) காலை ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

அல்-கார்ட் அல்-ஹசன் ” ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றது. ஆயுதங்கள் கொள்வனவு மற்றும் ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் உள்ள செயல்பாட்டாளர்களுக்கு பணம் செலுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த வங்கியூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்ட BMW கார் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் CID விசாரணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

தெற்கு பெய்ரூட் மீது தாக்குதல் – நால்வர் பலி !

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட 13 வான்வழித்தாக்குதல்களில், இந்த தாக்குதலும் ஒன்றென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 மாதங்களில் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள், 3 காதி நீதிபதிகள், இரண்டு வருமான பரிசோதகர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், இந்த சுற்றிவளைப்புக்களில் 22 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காலப்பகுதியில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வருடத்தில் 19 பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமையை செய்யாத பொலிஸார் பற்றி அறிவிக்க புதிய இலக்கம் !

பொலிசார் பொதுமக்களுக்காக அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

பொலிஸார் தனது சேவையை ஒழுங்காக செய்யாமை அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி, 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பில் அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது – அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்

உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும்,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாகல ரத்னாயக்கவின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையை எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – சுகாஸ் சாடல் !

உதய கம்பன்பில ஒரு இனவாதி என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை விட ஒரு மோசமான இனவாதி தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 

அராலியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இணைந்திருந்த வடக்கு – கிழக்கினை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பிரித்தவர்கள் ஜேவிபியும் அனுரவும். சந்திரிகாவினுடைய ஆட்சி கலத்தில் அனுரகுமார விவசாய அமைச்சராக இருந்தபோதுதான் செம்மணியில் 600 இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள்.

 

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுரகுமாரவின் கட்சியும், அநுரகுமாரவும்தான் கொழும்பிலே சிங்கள மக்களை திரட்டி, முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரபாகரன் தப்பி விடுவார் என மஹிந்தவிக்கு அழுத்தம் கொடுத்து கொத்துக்கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கு காரணமானவர்கள் இந்த ஜேவிபி.

 

இப்போது உதய கம்மன்பில மீது, அநுரகுமார பழி போட்டுவிட்டு தான் தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

அநுர ஜனாதிபதி ஆவதற்கு முன்பு சொல்லி இருந்ததார் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை தனக்குத் தெரியும் என்று. அப்படி என்றால் ஏன் அவர்களை இதுவரை கைது செய்யவில்லை.

 

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் ராஜபக்ச குடும்பம் என்றால், மத்திய வங்கியின் ஊழல் குற்றவாளிகள் ரணில் விக்ரமசிங்கமும் அவருடைய தரப்பினரும். ஆகவே அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் ராஜபக்ச குடும்பத்தினரையும், ரணில் விக்ரமசிங்க தரப்பினரையும் மறியலுக்குள் போடட்டும்.

 

தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கிவிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், இனப் பிரச்சனைக்கும் ஒரு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணையை நடத்தட்டும். அதற்குப் பின்னர் நாங்கள் அனுரகுமாரவை நம்புவதை பற்றி யோசிப்போம் என அவர் தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி அனுர பங்கேற்க மாட்டார்!

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

ஜனாதிபதிக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று குறித்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போதே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

 

எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை சமோவா அபியாவல் ‘சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்  – இதயச்சந்திரன்

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும்

இதயச்சந்திரன்

…………………….

ஐநாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல்  திருவிழா சூடு பிடித்துள்ளது.

 

இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம்.

 

தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன.

 

தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது.

 

தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள்.

 

மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.

 

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் ‘மோதல் தவிர்ப்பு’ உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.

சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு.

 

இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம்.

 

இளையோர் பார்வையானது அநுராவின் ‘ தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன.

 

இதன் எதிர்வினை அரசியலாக, ‘வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ‘ ‘மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ‘ என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர்.

 

உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும்.

 

2015 இல் உருவாக்கப்பட்ட ‘நல்லாட்சி’ அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

 

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் .

 

இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர்.

 

இருப்பினும் இராஜபக்சக்களின் ‘ஈரடி பின்னால்’ நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் .

 

சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ‘ இராஜபக்ச எதிர்ப்பு’ பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம்.

 

குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம்.

 

ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி.

 

ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது .

 

அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது .

 

அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது.

 

‘ அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே’ என்று கூறும் சில்வா , ‘ அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ‘ என்கிறார்.

 

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது.

 

ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?.

 

அரசியல் உரிமை மட்டுமல்ல…. பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான்.

 

இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும்.

 

இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

 

வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன.

அவதானம் தேவை.

 

மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள்.