November

November

யாழில் இளைஞன் பொலிஸ் காவலில் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு – ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய உத்தரவு !

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் அமெரிக்க தூதுவர் – சரத்வீரசேகர விசனம் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.குழுவின் அனுமதியுடனேயே 3 முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கிறார்.ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

 

அமெரிக்க தூதுவருக்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்

யாழ்ப்பாணத்தில் 130க்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று 4 ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

 

இதன்போது, மேலும், 3 மனித எச்சங்கள் முழுமையாகவும், 2 மனித எச்சங்கள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

 

இந்த அகழ்வு பணியானது இன்று 5 நாளாகவும் இடம்பெற்று வருவதுடன், இதன்போது விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியானது எவ்வளவு ஆழமானது என்று சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நேற்று மாலை 3 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

இருப்பினும் இன்று காலை 9 மணியளவில் மீண்டும் அங்கு அகழ்வு பணிகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே வருடத்தில் பொலிஸ் காவலில் இருந்த 20 பேர் பலி !

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11ஆம் திகதி குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

“வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.” – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

வட, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

வரவு – செலவுத் திட்டக் குழு விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொர இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதனால் அப்பிரதேசத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தி எவரையும் இச்சேவையில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நாம் 2016 ஆம் ஆண்டு புதியதொரு நடைமுறையைக் கொண்டு வந்திருந்தோம்.

 

பொலிஸ் அதிகரிகளுக்கு தமிழ் மொழியை புகட்டும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் அவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படவில்லை. எனவே அவ்வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

காசாவின் அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலால் கைது !

காசாவின் அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர், முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

மருத்துவமனையின் இயக்குநர் காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த வேலையிலேயே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை ஹமாசின் பிரதான தளமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, மருத்துவரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணைக்குட்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது முகாமைத்துவத்தின் கீழ் மருத்துவமனையில் அதிகளவில் ஹமாசின் செயற்பாடுகள் காணப்பட்டன என இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

 

இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு விமானக்குண்டுவீச்சினை மேற்கொண்டவேளை மருத்துவனையில் காணப்பட்ட நிலைமை குறித்து மருத்துவர் சர்வதேச ஊடகங்களிற்கு பரவலாக தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.” – அனுர குமார திஸாநாயக்க

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது

 

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

 

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

 

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

 

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

 

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதாக அமையும் என்றார்.

“ஒரு லட்சம் இலங்கை ஊழியர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டத்தை அரபு தூதுவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.” – ரவூப் ஹக்கீம்

இந்த இக்கட்டான நேரத்தில் 10,000 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்தார்.

 

அரேபிய இராஜதந்திரிகள் கூட இந்த நகர்வுகள் குறித்து குழப்பமடைந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

இன்றைய டெய்லி மிரர் நாளிதழின் பிரதான செய்தியை குறிப்பிடும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

 

“வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் 10,000 ஊழியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைக் கோரியிருந்தார். இது குறித்து நான் வருத்தமடைகிறேன். இது போன்ற நேரத்தில் நாம் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். இதுவும் மிகவும் உணர்ச்சியற்ற விடயம். இது நமது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முன்னர் திலான் பெரேரா விடய அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்ட போது, ​​இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் தியத்தலாவ முகாமில் இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

“ஏழை காசா குடியிருப்பாளர்களால் காலி செய்யப்பட்ட பண்ணைகளில் அவர்கள் வேலை செய்ய வேண்டும். இவர்கள் வலுக்கட்டாயமாக அங்கு அனுப்பப் போகிறார்கள். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. நான் நேற்று ஒரு இராஜதந்திர விழாவில் பல அரபு தூதர்கள் கலந்துகொண்டேன். அவர்களும் இந்த நடவடிக்கையை ஏளனம் செய்து கேலி செய்தனர். நீங்கள் அந்நிய செலாவணி சம்பாதிக்கலாம், ஆனால் நேரம் மோசமாக உள்ளது, ”

 

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல வருடங்களாக பணியாளர்களை அனுப்பி வருவதாகவும், இதுவும் அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்.

 

“இஸ்ரேலுக்குப் போக 10,000 பேர் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை. இது பழைய நடைமுறையின் தொடர்ச்சிதான். இருந்தாலும் வெளிநாட்டவரிடம் இதுபற்றி வேலைவாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடுவார்.

 

இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும், காஸா பகுதி மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பினருக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.” – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

 

உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ பெரிய தவறொன்றை இழைத்துவிட்டார். ஹிட்லர் இறந்தவுடன், அவரது நாஜி கட்சி இல்லாது போனது.பொல் போட் இறந்தபின்னர் அவரது காம்பூச்சியா கட்சி இல்லாமல் செய்யப்பட்டது.

சதாம் உசைன் இறந்தபோதும், முபாரக் இறந்தபோதும் அவர்களது அரசியல் கட்சிகள் இல்லாது செய்யப்பட்டன. ஆனால், எல்.ரி.ரி.ஈ. எனும் உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது அரசியல் கட்சியான ரி.என்.ஏ.வை நாம் தடை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.