May

May

நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்! – த.ஜெயபாலன்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.

இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர் தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். உல்லாசப் பயணிகளை எங்கள் நாட்டுக்கு வந்து, குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இரண்டு ஆண்டுகால கோவிட் முடக்கத்தில் உலக பொருளாதாரமே முடங்கிக் கிடந்தது. அந்த முடக்கத்தில் இருந்து மெல்ல எழ ரஷ்யா, உக்ரைன் மீது படைநகர்த்தி சர்வதேச அரசியல் – பொருளாதாரச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலைக்குள் இருந்து மீள்வதற்கு எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ஜேவிபி இப்போராட்டத்தை மிகத் திட்டமிட்ட முறையில் நடாத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னியல்பானதாக நடைபெற்றதாகச் சொல்லப்பட்டாலும் ஜேவிபிக்கு ஆதரவாகவே போராட்டம் நகர்கின்றது. ஜேவிபின் தவைரைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் போராட்ட களத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திட்டமிட்டு எரிக்கின்ற அளவுக்கு இலங்கையில் தன்னியல்பு தலைமைகள் கிடையாது.

முப்பது ஆண்டுகள் உலகின் மிக நவீன ஆயதங்களை வைத்து போராடிய விடுதலைப் புலிகளால் மே 19ற்குப் பின் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்த முடியவில்லை. ஆகையால் நடந்த எரிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஜேவிபி இல் இருந்து பிரிந்த அதிதீவிரவாதப் பிரிவாகச் செயற்பட்டுவரும் முன்னிலை சோசலிசக்கட்சி குமார் குணரட்ணம் மீதே மையம்கொள்கின்றது.

ஆனால் இடதுசாரித்துவம் பேசும் ஜேவிபியோ முன்னிலைவாத சோசலிசக் கட்சியோ இந்தப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றி வாயே திறக்கவில்லை. சர்வசே நாணய நிதியம் உலக வங்கி பற்றி தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர். இவர்களின் தோழமைக் கட்சியாக அணுகக் கூடிய பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி மௌனம் காக்கின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொருளாதார நெருக்கடிக்காகப் போராடும் தன்னை தீவிர இடதுசாரியாக தக்கவைத்துக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு இடதுசாரி பொருளாதாரக் கோசங்களையும் வைக்கவில்லை. மாறாக அரசியல் கோஷத்தை மட்டுமே வைக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது விலைபோகத் தயாராகி விட்டதா? குமார் குணரட்ணம் முன்னிலை சோசலிசக் கட்சியயை உருவாக்கியதைத் தொடர்ந்து பின் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் – சமவுடமை இயக்கத்தில் தங்களை வெளிப்படையாக இனம்காட்டிக்கொண்டனர். குறிப்பாக பிரான்ஸில் இடதுசாரிப் புயல் இரயாகரன், பிரித்தானியாவில் புதிய திசைகள் மற்றும் பல இடதுசாரி சிந்தனையுடையவர்களும் தங்களை முன்னிலை சோசலிசக்கட்சியுடன் அடையாளம் காட்டினர்.

ஆனால் தமிழ் சொலிடாரிட்டி தவிர்ந்த ஏனை இடதுசாரிக்குழுக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவோ உலக வங்கிக்கு எதிராகவோ கருத்துக்களை மிக அடக்கியே வாசிக்கின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பும் வெற்று அரசியல் கோஷங்களையே வைத்து போராட்டம் நடத்தினர்.

அரசும் புதிய பிரதமர் உட்பட போராட்டகாரர்களும் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்துகொண்டுள்ளனர். அரசு ஆணித்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நிலையை இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமாக மாற்ற முடியும். அதற்கு அரசியல் வாதிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாட்டை உல்லாசப் பயணிகளுக்கு திறந்துவிடுவதுடன் உல்லாசப் பயணத்துறையை காத்திரமான முறையில் வளர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு நாடுகளுக்கு இடையேயான கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்!
நாணயப் பெறுமதி குறைந்துள்ளதை சாதகமாக்கி ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்!!
சிறிலங்கா பெஸ்ற் மற்றும் மேடின் சிறிலங்கா என்பன நாட்டின் தாரகமந்திரமாக வேண்டும்!!!

ஆட்சி மாற மாறும் காட்சிகள் – முன்பு 20க்கு ஆதரவு – இன்று 21க்கும் ஆதரவு – மைத்திரி தரப்பின் நிலைப்பாடு என்ன ..?

.தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

……………………………………………………………………………………………

ராஜபக்சக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நேரம் வரை ஜனாதிபதியின் அதியுச்ச அதிகாரங்களை உள்ளடக்கி இருந்த 20ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றில் மைத்திரிபால சிறிசேனவுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு அளிக்கும் முகமாகவு செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் 20 திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு நாளில் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. உண்மையிலேயே குறித்த திருத்தத்தை எதிர்ப்பவராக இருந்திருப்பின் மைத்திரிபால சிறிசேன அன்றைய அமர்வில்கலந்து கொண்டு எதிர்த்திருக்க வேண்டும்.

இன்று ஆட்சி மாற மைத்திரி தரப்பினுடைய  காட்சிகளும் மாறுகின்றது. மக்கள் சரியான அரசியல் தலைவர்களை அடையாளம் காண வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

மேற்பார்வை குழுக்களில் இளைஞர்களுக்கு முன்னுரிமை – நாட்டு மக்களுக்கான உரையில் பிரதமர் ரணில் !

“20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.”   என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் தற்போது 21ஆவது திருத்தச் சட்டத்தை தயாரித்து வருகின்றோம்.

இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும். அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. நிறைவேற்றதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றைய பிரதான குற்றச்சாட்டு. நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் எப்போதும் பார்க்க வேண்டியதில்லை, ஆனால் நாம் பின்பற்றக்கூடிய உதாரணங்கள் சில உள்ளன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1931 முதல் 1947 வரை அரசியலமைப்பு சபை இருந்தது. அந்த சபையானது குழு முறையைப் பின்பற்றிச் செயற்பட்டது.

ஒவ்வொரு விடயமும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டது. குழுக்களின் தலைவர்கள் அமைச்சர்கள் ஆனார்கள். ஏழு அமைச்சர்கள் ஒரு அமைச்சரவையை அமைத்தனர். மேலும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் இருந்தனர். மேலும், பொதுப் பணத்தைக் கட்டுப்படுத்த கணக்குக் குழுவும் இருந்தது. அந்த நேரத்தில் இந்த வழிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, நாடாளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி, தற்போதுள்ள நாடாளுமன்ற முறை அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் முறை மற்றும் அரசியலமைப்பு முறை ஆகியவற்றை இணைத்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் நாட்டை ஆள்வதில் பங்கேற்கலாம்.

முதலாவதாக, நாணய அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நாடாளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாங்கள் வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிகிறோம்.

தற்போது அரசாங்க நிதி தொடர்பாக மூன்று குழுக்கள் உள்ளன. பொது நிதிக் குழு, கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகிய மூன்று குழுக்கள் ஆகும். இந்த மூன்று குழுக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார். மேலதிகமாக அதற்கு. , நாங்களும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.

பண விவகாரங்கள் தொடர்பாக இரண்டு புதிய குழுக்களை அமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சட்ட மற்றும் வழிமுறைக் குழுவை நியமிப்போம்.

இரண்டாவதாக, நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலை. பலவீனமான பிரச்சினைகள் பல இதில் உள்ளன. எங்களின் நிலையியற் கட்டளை 111ன் கீழ் நாம் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க முடியும்.

இதற்கு முன் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, பத்து மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஐந்து நிதிக் குழுக்கள் மற்றும் பத்து மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் பின்வரிசை உறுப்பினர்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அமைச்சர்களால் நியமிக்கப்படுவதில்லை.

எனவே, அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து சுயாதீனமான மற்றும் அமைச்சர் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இருவருடனும் இணைந்து செயல்படும் ஒரு வழிமுறையை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

தற்போதுள்ள அமைப்பை மாற்ற வேண்டும் என இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தற்போதைய பிரச்சினைகளையும் அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த 15 குழுக்களுக்கும் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க நான் முன்மொழிகிறேன்.

அவர்களில் ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவார். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்சனைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்.

தேசிய கவுன்சிலையும் நாங்கள் முன்மொழிகிறோம். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய கவுன்சில் என்று அழைக்கப்படுகிறது. தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம். அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம். இந்நாட்டின் பாராளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம். அப்படியானால், அதை அரசியல் அமைப்பு என்று சொல்லலாம்.

அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைக்க தேசிய கவுன்சிலுக்கு உரிமை உண்டு.நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சர்களின் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

தேசிய கவுன்சிலும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சரவை மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், மற்ற பதினைந்து குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விஷயங்களை மேற்பார்வையிடவும் ஒரு அமைப்பு உள்ளது. வேறு பல அமைப்புகளும் இதே போன்ற திட்டங்களை முன்வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார்.”- ஜீவன் தொண்டமான்

என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலகளுக்கு மடிக்கணினிகளும், ´போட்டோ கொப்பி மெசின்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை எவராலும் நிரப்பமுடியாது. மக்களை மட்டுமே எனக்கு தந்துவிட்டு சென்றுள்ளார். அது போதும். அதுவே மிகப்பெரிய செல்வம். எனவே, எனது மக்களுக்காக என்னால், எமது ஸ்தாபனத்தால் செய்யக்கூடிய அனைத்தையும் நிச்சயம் நான் செய்வேன்.

அரசாங்கத்தில் பதவிகளை வகித்தாலும், இல்லாவிட்டாலும்கூட மக்களுக்கான சேவைகள் தொடரும். குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். எமக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை பேசி தீர்க்கலாம். அதைவிடுத்து பிரச்சினையை பெரிதுபடுத்தினால், அது எமக்கான அழிவு பாதையாகவே அமையும்.” – என்றார்.

“இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள்.”  – செல்வம் அடைக்கலநாதன்

“இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள்.”  என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மனவருத்தம் தருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியவர்களில் பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல.”- மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க செயலி மூலம் எரிபொருள் சேகரிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் (27) மாத்திரம் பல தடவைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்த 1200 இற்கும் அதிகமானவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்தபோதும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. எனினும், மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்கள் சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் கேட்டுக்கொண்ட அமைச்சர், நாட்டில் இருக்கும் எரிபொருளை முகாமைத்துவம் செய்து பொது மக்களுக்கு அதனை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய கொடுப்பனவு தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான மசகு எண்ணெய்யுடான கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.

இதன்மூலம் மூலம் ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் சுத்திகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதியும் டீசலை ஏற்றிய மற்றுமோரு கப்பல் இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்களுக்கு தேவையான எரிபொருளை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

சில ஊடகங்கள் பொது மக்களை தவறான வழியல் இட்டுச் செல்லும் வகையில் எரிபொருள் தொடர்பான தகவல்களை வெளியிடுகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் தொடர்ச்சியாக மின்விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நீர்மின் உற்பத்தியினை முகாமைத்துவம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சாரப் பட்டியல் செலுத்துவதில் சமயத் தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. எனினும், குறித்த சமய தலங்களிலும் மின்சார்ததை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியமாகும். வீடுகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும்; மின்சாரத்தை விரயம் செய்ய வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மின்சாரம் பெறுவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சம்பியன் யார்..? – இறுதிப்போட்டி இன்று !

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்திகதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“அச்சம் கொள்ள வேண்டாம். முடியா விட்டால் விலகி செல்வேன். ”- பிரதமர் ரணில்

உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து முன்னெடுத்து வருகின்றேன். எனவே அச்சம் கொள்ள வேண்டாம் , 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு வருகின்றார். இவ்வாரத்தில் கட்சி தலைவர்களுக்கு முழுமையான வரைபு அனுப்பி வைக்கப்படுவதுடன் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சு பதவிகள் மற்றும் 21 ஆவது திருத்தம் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 21 ஆவது திருத்தம் மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது பேசிய அவர்,

எந்தவொரு அமைச்சு பதவிகளுக்கும் ஊதியமோ கொடுப்பனவோ வழங்கப்பட மாட்டாது. அதே போன்று சுதந்திர கட்சிக்கு உரிய இராஜாங்க அமைச்சுக்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாரம் தீர்மானிப்பார் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 21 ஆவது திருத்தத்தின் முழுமையான வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பது குறித்து பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பிரதானமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய தரப்புகளுக்கு இடையில் எந்தெந்த அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து பிரதமருடன் சுதந்திர கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்திப்பை நடத்தி கலந்துரையாடியது.

அதே போன்று பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். மேலும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள ஏனைய கட்சிகளின் கோரிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாரத்தில் இராஜாங்க அமைச்சு சிக்கலுக்கு இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு புதிய அரசாங்கத்தில் பதவிகளை பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு ஊதியமோ எவ்விதமான கொடுப்பனவோ வழங்காமலிருக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட கூடாது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அதேபோன்று 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் குறித்தும் அமைச்சர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்தவம் செய்ய இயலாது, பிரதமரை நீக்கும் ஜனாதிபதி அதிகாரத்தை நீக்குதல் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளை நியமிக்கும் போது பிரதமரின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளல் போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என பிரதமரை சந்தித்த அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு பதிலளித்துள்ள பிரதமர், அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன். 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு வருகின்றார்.

இவ்வாரத்தில் கட்சி தலைவர்களுக்கு முழுமையான வரைபு அனுப்பி வைக்கப்படும். அதே போன்று அடுத்த பாராளுமன்ற அமர்வில் 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும். அப்போது அனைவருக்கும் உள்ளடக்கத்தை அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தாய் வெளிநாட்டில் – சிறுமியை கர்ப்பமாக்கிய கோவில் பூசாரிக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல் !

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலிஸ் பிரிவில் சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோயில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர்.

பின்னர் 2022.05.27 வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரான கோயில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பிரதான சந்தேக நபரான பூசாரி பெரியநீலாவணைப் பகுதியில் உள்ள கோவில் பூஜைக்காக சென்று வருவதுடன் தினமும் அப்பகுதி வழியாக சென்று வந்துள்ளார்.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் தனிக்குடித்தனம் என்ற பெயரில் பூசாரி தனது வீட்டிற்கு அழைத்து சென்று இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.இதன் போது பூசாரியின் தாயும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறுமியின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ள நிலையில் தந்தையார் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக வழக்கமாக சென்று வந்துள்ளார்.இந்நிலையில் தனிமையில் இருந்த சிறுமியின் நிலைமையை பயன்படுத்தி சந்தேக நபரான பூசாரி இச்செயலை புரிந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தீர்வு – வாசுதேவ நாணயக்கார

இரட்டை குடியுரிமை உடைய நபர் அரசியலில் அல்லது அரச உயர்பதவி வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இரட்டை குடியுரிமையுடைய இருவர் இதுவரையில் அரசியல் மற்றும் அரச உயர் பதவியில் செல்வாக்கு செலுத்தியுள்ளார்கள். அத்தோடு 21ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் போது முறையான ஒழுங்கு முறைமை பின்பற்றப்பட வேண்டும். இல்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச தலைவர்களுக்கிடையில் நிலவிய அதிகார போட்டித்தன்மை மீண்டும் நிலவும்.

முழு நாடும் அரசியலமைப்பு திருத்தத்தை கோரும் நிலையில் பொதுஜன பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கு முரணாக செயற்பட முயற்சிக்கிறது.

அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே சமூக கட்டமைப்பில் நிலவும் அமைதியற்ற தன்மைக்கு தீர்வு காண முடியும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.