May

May

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி – கொலையாளி வழங்கியுள்ள வாக்கு மூலம் !

பண்டாரகம, அட்டுலுகமவில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொட்டு ரொட்டி தயாரிக்கும் நபர் ஒருவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கொட்டு ரொட்டி தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி. அறிவித்தது.

28 வயதான பிரதான சந்தேகநபர் அதேபகுதியில் முஸ்லிம் காலனியில் வசிப்பவராவார் என்றும் அவர் போதைப்பொருள் (ஐஸ்) க்கு அடிமையானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் கோழி இறைச்சி வாங்குவதற்காக இறைச்சிக் கடைக்கு சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு பின்னால் மறைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கையில் இறைச்சியுடன் தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் சிறுமியை பிடித்து அருகிலுள்ள புதர் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சிறுமி கூக்குரலிட்ட போதும் சிறுமியை அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாக சிறுமியின் வாயில் துணி ஒன்று திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியின் முகத்தை சேற்று நீரில் தள்ளி, அவரது முதுகில் முழங்களால் அழுத்தியுள்ளதால் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.

இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் – இங்கிலாந்து பிரதமர்

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமரிடம் விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கு இலங்கைக்கு உதவ பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளதாக பிரதமர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே பிரித்தானிய பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எரிசக்தி துறையில் இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

‘மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை கண்டறிந்து அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” – ஹர்ஷ டி சில்வா

“வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்குமேலும் பேசிய அவர்,

“சொந்தமாகத் தொழில் செய்யும் ஒருவருக்கு, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது, ​​அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம். அவர்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப நிர்வகிக்கிறார்கள். அதேசமயம், நிலையான சம்பளம் பெறுபவர்கள்தான் இந்த நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

பொருட்களின் விலை உயர்வால், நிலையான சம்பளம் பெறும் தனி நபர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் உயர்வு இல்லை. அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் பெறும் ஊழியர்களும், நல்ல ஊதியம் பெறாத சிலரும் உள்ளனர். எனவே இரு தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்துவது நியாயமற்றது. இது குறித்து ஆராயப்பட வேண்டும், இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பை வழங்க முடியாது.

 

வறுமையின் அபாயத்தைக் குறைக்க, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தனியார் துறையில் இருந்தாலும், அத்தகைய நபர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினரே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர், அவர்களே இப்போது பொறுப்பேற்று சரியானதைச் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் தனது தேசத்தின் மக்களை தோல்வியடையச் செய்துள்ளது என்பதை முழு உலகமும் இப்போது உணர்ந்துள்ளது.

 

இலங்கையின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பொருளாதாரத் தலைவர்களின் அலட்சியமே காரணம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கோத்தபாய ராஜபக்ஷ தவறு செய்திருந்தால், அப்பாவி மக்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியதில்லை, தண்டிக்கப்பட வேண்டியதில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் 1.5 டிரில்லியன் ரூபாவுக்கு மேல் அச்சிடப்பட்டுள்ளது.  பணத்தை அச்சடிப்பதன் மூலம் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடையும்.

பணத்தை அச்சடிப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது, இதனால் வாழ்க்கைச் செலவு உயரும் என்பதை நாங்கள் முன்னறிவித்துள்ளோம். ஆனால், இதனால் குடிமக்கள் பாதிக்கப்பட முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் மற்ற வரவு செலவுத் திட்டங்களில் குறைக்கும் வழிகளை ஆராய வேண்டும் மற்றும் அதற்குப் பதிலாக குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியைப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வீதிகள் மற்றும் கூடுதல் செலவினங்களை உருவாக்குவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அந்த நிதி நாட்டுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

100 வீதத்தால் அதிகரித்த விலை – இலங்கையில் ஒரு துவிச்சக்கர வண்டியின் விலை என்ன..?

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

18,000 ரூபாவாக இருந்த மவுண்டன் சைக்கிள் தற்போது 35,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் றிஸ்னி இஸ்மத் தெரிவித்தார்.

பெண்கள் பயன்படுத்தும் சைக்கிளின் விலையும் உயர்ந்துள்ளதாகக் கூறும் அவர், துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றமையும் அவற்றிற்கு 55% வரி விதிக்கப்பட்டமையும் துவிச்சக்கர வண்டிகளின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆடம்பரப் பொருட்களின் பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட்டு வரியை பூச்சியமாகக் குறைத்தால் சுமார் 19,000 ரூபாவுக்கு துவிச்சக்கர வண்டியை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கின்றது.

மூடப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் – நீண்ட வரிசைகள் ஏற்படும் என எச்சரிக்கை !

தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார்.
மேலும் பேக்கரிகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புகளை வாங்குவதற்கு நீண்ட வரிசைகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

மிக நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது உலக வங்கி !

அடுத்த மாதங்களில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இலங்கைக்கு வழங்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ காந்தா உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகள் நீண்ட கால உதவிகளை வழங்கும் வரை உலக வங்கியின் உதவியை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கோரியமைக்கு அமைய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ காந்தா, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை கடந்த 9 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

இச் சந்திப்பின் போதே குறுகிய கால நிதி உதவியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், வரவுசெலவுத் திட்டத்தில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை குறைவடையவுள்ள பிரச்சினைகளின் தீவிரத்தன்மையை அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

நீண்ட கால தீர்வுகள் அமையும் வரை உலக வங்கியின் குறுகிய கால நிதி உதவி பெரிதும் வரவேற்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிடாதீர்கள் .” – ஜனாதிபதி விவசாயிகளிடம் கோரிக்கை !

“எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிட வேண்டாம்.” என என அனைத்து விவசாயிகளையும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பாக கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச-தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் இறக்குமதி, விநியோகம், முறையான மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தேசிய உரக் கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இரசாயன அல்லது கரிம உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் முழு ஈடுபாட்டின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இந்த பணியை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்பு வழங்கி முன்னுதாரணமாக அமைய வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரசாயன உரப்பயன்பாட்டை தடைசெய்தமையாலேயே விவசாயிகள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“21ம் திருத்தத்துக்கு 13ஆம் திருத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது.”- எம்.ஏ.சுமந்திரன் விசனம் !

21 ஆம் திருத்தம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கின்ற ஒரு சட்டமூலம் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தாலும்கூட, உண்மையிலேயே 19ஆம் திருத்தத்தில் இருந்ததைக்கூட அதிலே அடைய முடியாத சூழ்நிலை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், 19ஆம் திருத்தத்தில், ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தற்போது நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள 21ஆம் திருத்த வரைவில், ஜனாதிபதி எத்தனை அமைச்சுகளையும் தம்கீழ் வைத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அதிலே 13ஆம் திருத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இலங்கையை உலுக்கிய 9 வயது சிறுமியின் மரணம் – 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டார் !

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.

தாமே குறித்த சிறுமியைக் கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், அந்த நபர் போதைக்கு அடிமையானவர் என்றும், கடந்த 27ம் தேதி அவர் வீட்டில் இருந்த சிறுமி தனியாக நடந்து செல்வதை பார்த்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமியை தூக்கிச் சென்ற சந்தேகநபர், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு அவர் பயந்ததாகவும் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தினால் தான் சிறுமியைக் கொல்லத் தூண்டியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டார்.