22

22

சீனாவில் வரலாறு காணாத மழை – மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதிப்பு !

சீனாவில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்‍கி 30க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கயங்கர வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை, மூன்று நாட்களில் கொட்டித் ​தீர்த்ததால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஷெங்ஷெள நகரில் மட்டும் மூன்று நாட்களில் 62 சென்டி மீட்டர் மழை பதிவானது.

இந்நிலையில், மழை பாதிப்பில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 33ஐக்‍ கடந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷன் 2030 – அரேபியாவின் புனித தலங்களில் பாதுகாப்பு பணிக்கமர்த்தப்பட்ட பெண்கள் !

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவில் இராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் விஷன் 2030; பெண்கள் இராணுவப்படை உருவாக்கம்!

சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான். இவர், தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார். பழமைவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என அவர் நம்புகிறார். அதனால், விஷன் 2030 என்ற பெயரில் அவர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, இராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார்.
அந்த வரிசையில் மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் மோனா என்ற இளம் பெண். ராணுவத்தின் காக்கி நிற சீருடை தான் அவர் அணிந்திருந்தார். ஆனால், அவரின் மேல்சட்டை இடுப்பு அளவுக்கு நீண்டிருந்தது, சற்றே தளர்வான கால்சட்டை, கறுப்பு தொப்பி, முகத்தை மறைக்க துணி என்று மோனா காட்சியளித்தார்.

மோனா அளித்தப் பேட்டியில், “நான் எனது தந்தையின் பாதையில் பயணிக்கிறேன். இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி” என்று கூறினார்.

ஹெய்டியின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி நியமனம் !

சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி பதவியேற்றுள்ளார். எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த கிளாட் ஜோசப் உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி அப்பதவியை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கிளாட் ஜோசப் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஹெய்ட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார்.

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ், கடந்த 07ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள்.” – உலக சுகாதார அமைப்பு கவலை !

கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138-வது அமர்வில் பேசும்போது இது தொடர்பாக கூறியதாவது:-

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காதது ஆகும். குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உட்பட தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற வழிகளைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய உலகளாவிய அநீதி ‘‘சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு’’ மட்டுமின்றி, வைரஸ் மேலும் பரவுவதற்கும் வழிவகுக்கிறது. இதில் ஒரு திருப்புமுனையை காண வேண்டுமென்றால், உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை இதற்கு முன்னர் கோடிட்டுக்காட்டிய பல்வேறு இலக்குகளை அடைய வேண்டியது முக்கியம் ஆகும்.

இதில் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும். ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும். ” இவ்வாறு டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறினார்.