யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
09
09
தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று (09) முதல் ஓகஸ்ட் 08 வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் இராணுவ மயமாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என உயர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் நாட்டில் இருக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்றது அல்ல. இதற்கு விசேட தனித்துவமாக அம்சங்கள் இருக்கவேண்டும். அதற்காகத்தான் இதற்கு விசேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர்களுக்கு பட்டம் வழங்கும் தாதியர் கல்லூரி. இவையும் பல்கலைக்கழம். இவற்றுக்கு விசேட தனித்துவம் இருக்கவேண்டும். சாதாரண பல்கலைக்கழங்களில் மேற்கொள்வதை இங்கே மேற்கொள்ள முடியாது. இவற்றுக்கிடையில் பெரும் வித்தியாசம் உள்ளது.
மேலும் எமது அரசாங்கம் 10 நகர பல்கலைக்கழகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவை சாதாரண பல்கலைக்கழங்களுக்கு மாற்றமானவை. நாட்டில் இருக்கும் பெளத்த பாலி பல்கலைக்கழகம், தொழிநுட்ப பல்கலைக்கழகம் என பல இருக்கின்றன. இவை அனைத்தும் விசேட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையாகும். இதன் மூலம் இந்த பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படுவதில்லை என அர்த்தப்படுவதில்லை. அனைத்து பல்கலைக்கழங்களும் மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு கீழே செயற்படுகின்றன. அந்த விடயங்கள் அவ்வாறே இருக்கின்றன.
அத்துடன் கொத்தாலாவலை பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்களில் மானியங்கள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரும் இருக்க வேண்டும். ஆணைக்குழுவின் தலைவர் நிர்வாக உறுப்பினராக இருக்கின்றார். அதேபோன்று பேராசிரியர்களை நியமிக்கும் குழுவில் மானியங்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அங்கு கற்பிக்கப்படும் பாடநெறிகள் தொடர்பாகவும் நிதி தொடர்பாகவம் பல்கலைக்கழக ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுகின்றது.
எனவே கொத்தலாவலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும் பல்கலைக்கழகமாகும். அவ்வாறு இல்லாமல் சுயாதீனமாக செயற்படக்கூடியதல்ல. அதேபோன்று இது இராணுவ மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டம் என தெரிவிப்பதாக இருந்தால், அது பொய்யாகும். அவ்வாறான எந்த தீர்மானமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளில் நேற்று (வியாழக்கிழமை) காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,542 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து அவர், அவர்களில் 41,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


