11

11

“ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்? – விக்கினேஸ்வரன் கேள்வி !

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.

மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், காவல்துறையினருக்கும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும். ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று காவல்துறையினரால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்? அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? காவல்துறையினர் ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை மறைப்பதற்காக மீண்டும் ஒரு புலி நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.” – வேலுசாமி இராதாகிருஸ்ணன்

“நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை மறைப்பதற்காக மீண்டும் ஒரு புலி நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை விவ் ரெஸ்ட் விருந்தகத்தில் நேற்று (10.04.2021) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ். நகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியாது? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் செய்த இந்த வேலைக்கு யாரோ பெயர் வாங்கிக் கொள்ளும் வேலையாகவே இது உள்ளது. உண்மை அதுவானால் ஏன் அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைதியாக இருக்கின்றார்?

யாழ். நகர முதல்வர் மணிவண்ணனின் கைது தவறானது. ஏனெனில் கொழும்பு மாநகர சபைக்கு ஒரு சட்டம் யாழ். மாநகர சபைக்கு இன்னொரு சட்டமா? அப்படியானால் இந்த நாட்டில் இரண்டு சட்டங்களா? ஜனாதிபதியின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு எங்கே? தமிழர்கள் செய்தால் தவறு ஏனையவர்கள் செய்தால் அது சரியா?

இன்று இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் ஆகின்றது.இலங்கையில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. அப்படியானால் ஏன் அரசாங்கம் பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளை மறைப்பதற்காக மீண்டும் ஒரு புலி நாடகமா? புது வருடம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் – பொருட்களின் விலைகள் மலை போல உயர்ந்துள்ளது. பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

உதாரணமாக உழுந்து, மஞ்சள், பயறு, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை மக்கள் கொள்வனவு செய்ய முடியாமல் தடுமாறுகின்றார்கள்.

ஆனால் அரசாங்கம் கைது செய்வதும் நாடாளுமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதும், சிரேஸ்ட அரசியல்வாதிகளின் தவறான சொற் பிரயோகங்களும் என பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

எனவே உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு தேவையற்ற அல்லது பிரயோசனமற்ற விடயங்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

உடனடியாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டங்களும் வேலை நிறுத்தமும் என மக்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம் இன்று எல்லா விடயங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்பதையே இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடைய பயணம் மிக நேர்மையானது வெளிப்படையானது என்பதுடன் மக்களுக்கானது.” – யாழ். மாநகர முதல்வர்

யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மக்கள், உள்நாட்டு, பன்னாட்டு அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், துாதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

அத்துடன், ‘துாய்மையான நகரம் தூய்மையான கரங்கள்’ என நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக நடந்துகொள்வதே யாழ். மாநகர மக்களுக்கான தனது பணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிகத் தவறாக வியாக்கியானம் செய்து தன்னை கைதுசெய்தார்கள் என மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், என்னுடைய பயணம் மிக நேர்மையானது எனவும் வெளிப்படையானது என்பதுடன் மக்களுக்கானது என அவர் கூறியுள்ளார்.

மேலும், பாதை எப்படியானது என்பதைப் புரிந்துகொண்டே பயணத்தை ஆரம்பித்ததாகவும் எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னுடைய பயணம் நின்றுவிடாது என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் கவனத்தை திசை திருப்பவே மணிவண்ணன் கைது செய்யப்பட்டார்.” – சஜித் பிரேமதாஸ

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதிபோலச் சித்தரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்னும் அறியப்படாது உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

“மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யவே முயன்றார்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டிலேயே  கைதுசெய்யப்பட்டார்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊடக நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரிடம் மணிவண்ணன் கைது தொடர்பாக கேட்கப்பட்ட போது ,

கேள்வி:- யாழ்ப்பாணம் முதுல்வர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள்?

பதில்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறை பயன்படுத்திய சீருடையை ஒத்த சீருடையைத்தான் யாழ்ப்பாணம் மாநகர சபைமுவல்வர் மணிவண்ணன் பயன்படுத்தியுள்ளார்.

கேள்வி:- இதே சீருடையைத்தானே கொழும்பு மாநகர சபையும் பயன்படுத்தியுள்ளதே?

பதில்:- கொழும்பு மாநகர சபையின் சீருடைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. கொழும்பு மாநகர சபை மேற்படி திட்டத்தை சபையின் முழுமையான அனுமதியுடன் செயற்படுத்துகின்றது. ஆனால், யாழ்ப்பாணம் மாநகர சபையில், முவல்வர் மணிவண்ணனின் தனிப்பட்ட விருப்பில்தான் இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடையும் அவரின் விருப்புக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன. இது எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் மாநகர காவல் படைக்கோ அவர்களது சீருடைக்கோ மாநகர சபையின் அனுமதியை மணிவண்ணன் பெற்றுக் கொள்ளவில்லை. மாநகர சபையின் அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும், யாழ். மாநகர காவல் படை காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. சமூக ஊடகங்களில் யாழ். மாநகர சபையின் சீருடையையும் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையையும் ஒப்பிட்டுப் படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைத் தமிழ்த் தரப்பினரே சுட்டிக்காட்டியுள்ளனர்.” என்று அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்